விவசாயிகள் மறியல்: உச்சநீதிமன்றம் கண்டனம்!

மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 விவசாய சட்டங்களுக்கு எதிரப்பு தெரிவித்து, டெல்லி எல்லைகளில் ஹரியானா, பஞ்சாப் மாநில விவசாய அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் 10 மாதங்களுக்கு மேலாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால் போக்குவரத்து  பாதிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில், “டெல்லி எல்லைகளில் விவசாயிகள் நடத்தி வரும் போராட்டத்தால் போக்குவரத்து பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது.
விவசாயிகள் போராட்டத்தால் போக்குவரத்து பாதிக்கப்படுவதைத் தடுக்க வேண்டும்” எனக் கூறப்பட்டுள்ளது.

இந்த வழக்கு, நீதிபதிகள் சஞ்சய் கவுல், சுந்தரேஷ் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.

அப்போது, “விவசாயிகள் போராட்டம் நடக்கும் போதெல்லாம் நெடுஞ்சாலைகளில் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுவது ஏன்? இதைத் தடுக்க நீதிமன்றம் அனுமதித்துள்ள சட்டங்களை அமல்படுத்த வேண்டியது அரசு நிர்வாகத்தின் கடமை.

பிரச்சனைகளுக்கு நீதிமன்றம் வாயிலாகவோ, நாடாளுமன்ற விவாதங்கள் வழியாகவோ தீர்வு காணலாம்.

நெடுஞ்சாலைகளை மறிப்பதால் தீர்வு காண முடியுமா? இந்தப் போராட்டத்துக்கு முடிவு தான் என்ன? இந்த விவகாரத்தில் மத்திய அரசு என்ன செய்கிறது என்பதை தெரிவிக்க வேண்டும்” என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இதற்கு மத்திய அரசின் சார்பில் அளிக்கப்பட்ட விளக்கத்தில், “விவசாய அமைப்புகளின் பிரதிநிதிகளுடன் பலமுறை பேச்சு நடத்தப்பட்டுள்ளது. உச்சநீதிமன்றம் நியமித்த நிபுணர்கள் குழுவுடன் ஆலோசனை நடத்த விவசாயிகள் மறுத்துவிட்டனர்.

இந்த வழக்கில் விவசாய சங்க பிரதிநிதிகளையும் சேர்க்க வேண்டும். அப்போதுதான் பிரச்னைக்குத் தீர்வு காண முடியும்” எனக் கூறினார்.

அதன்பின் நீதிபதிகள் அளித்த உத்தரவில், “வழக்கில் விவசாயிகளையும் சேர்க்க வேண்டும் எனக் கோரி மத்திய அரசு தான் மனு தாக்கல் செய்ய வேண்டும். அதன்பின் அதுபற்றி பரிசீலிப்போம்” எனக் கூறி வழக்கு விசாரணையை ஒத்திவைத்தனர்.

Comments (0)
Add Comment