”காந்தியின் வாழ்வியல் அறம்.”
மூத்த பத்திரிகையாளரான சாவித்திரி கண்ணனின் நூல்.
காந்திய வாழ்வியல் நெறிகளை மிக இலகுவான மொழி நடையில் வெளிப்படுத்தியிருக்கும் சாவித்திரி கண்ணன் – மக்கள் சார்ந்த பார்வையோடு எழுச்சியோடு நடத்தப்பட்டுக் கொண்டிருக்கும் ‘அறம்’ இணைய இதழின் ஆசிரியர்.
தற்காலத்தில் மலினமாகிவிட்ட இதழியல் அற நெறியைக் கடைப் பிடித்துப் பல சிக்கல்களை எதிர்கொண்டபோதும், தன்னிலை மாறாத இயல்பு கொண்டவர்.
விளிம்புநிலை மாணவர்களுக்கு மாலைப்பள்ளிகளை நடத்தியவர். இயற்கை உணவை ஓரியக்கமாக எடுத்துச் சென்றவர். துவக்கத்தில் தேர்ந்த புகைப்பட நிபுணராக இருந்து சுய விருப்பம் காரணமாக இதழியலுக்குள் வந்தவர் என்று கண்ணனுக்குப் பன்முகத்தன்மை உண்டு.
“இப்போது தான் காந்தி அதிகம் தேவைப்படுகிறார்” எனச் சொல்லும் கண்ணன் “காந்தியைப் பேசுபொருளாக மட்டுமே கொண்டிராமல், காந்தியத்தை ஒவ்வொரு நிகழ்விலும், செயலிலும் சாத்தியப்படுத்துவதே இன்றையத் தேவை” என்கிறார்.
காந்திய நெறியும், வாழ்வியலும், அவரது தனித்துவமான அடையாளங்களும் சார்ந்த 31 கட்டுரைகளின் தொகுப்பு வழியே காந்திய மனத்தை வாசகர்களுக்கு நெருக்கமாக்குகிறார்.
துப்புரவாளர்களை எப்போதும் ஆதரித்த காந்தி சொந்த வாழ்வில் துப்புரவுப் பணியை எப்படி மேற்கொண்டார் என்று சொல்கிறபோது, ஆங்கிலேயரை எதிர்த்தாலும், “அவர்களிடமிருந்து கற்றுக் கொள்ள வேண்டிய முக்கியப் பண்பு சுகாதாரம் தான்” என்கிறார்.
சிறை வாழ்க்கையைக் கூடத் தன் மனதைப் பக்குவப்படுத்திய இடமாக காந்தி மாற்றிக் கொண்டதையும், எளிய உணவுக்கும், உடைக்குமான வாழ்வை மாற்றிக் கொண்டதையும் சொல்லியிருப்பவர் காந்தியின் வாரிசுகளைப் பற்றி எழுதியிருக்கிற கட்டுரை நெகிழ்வானது.
வளர்ப்பு முறை தவறும்போது குழந்தைகள் எம்மாதிரி மாற்றம் பெற வாய்ப்பிருக்கிறது, காந்தியின் வாரிசாக இருந்தாலும் கூட என்பதற்கு கவனிப்பார் இல்லாமல் முனிசிபாலிட்டி மருத்துவமனையில் இறந்த காந்தியின் மூத்த மகன் ஹரிலாலே சாட்சி.
காந்தியின் உடையையே மாற்றியமைத்த காந்தியின் மதுரை வருகை, “வாழ்க நீ எம்மான்” எனப் போற்றிய மகாகவி பாரதியைப் பத்திரமாகப் பாதுகாக்கச் சொன்ன காந்தியின் கரிசனம் என்று காந்திய வாழ்நெறி நூல் முழுவதும் பரவியிருக்கிறது.
தான் நடத்தும் பத்திரிகைகள் தவறு செய்தால், அவற்றை மக்கள் புறக்கணிக்கலாம் என்று சொல்லும் காந்தியின் மன உறுதி லேசானதல்ல. தன்னுடைய வாழ்க்கையே செய்தி என்று யார் வெளிப்படையான மனதுடன் சொல்ல முடியும்?
மறுவாசிப்பை வலியுறுத்துகிறவர்களுக்கும், அரசியலில் போலிகளைப் பார்த்துச் சலிப்படைந்த மனநிலைக்குப் போனவர்களுக்கும் உத்வேகம் அளிக்கிற சக்தியாக காந்தி திகழ்வதை ‘காக்கைக் கூடு’ பதிப்பகம் வெளியிட்டிருக்கிற 165 பக்கங்களைக் கொண்ட இந்நூல் வெளிப்படுத்தும்.
காந்திய வாழ்வியல் அறம்
நூல் ஆசிரியர் : சாவித்திரி கண்ணன்,
காக்கைக் கூடு பதிப்பகம்,
விலை ரூ 150,
தொடர்பு எண்: 90436 05144