நீர்க்குமிழி: ரசிகர்களின் பி.பி.யை எகிற வைத்த கே.பி!

தமிழ்த் திரையின் வெற்றித் தடங்கள் 26

புரட்சிகரமாகச் சிந்திக்கும் ஒரு எழுத்தாளர் இயக்குனரானால் என்னவாகும் என்பதற்குப் பதிலளித்து, தமிழ் திரையுலகின் முன்னோடிகளில் ஒருவராகத் திகழ்கிறார் ‘இயக்குனர் சிகரம்’ கே.பாலச்சந்தர்.

100 திரைப்படங்களை இயக்கிய அவரது சாதனையை, இனி ஒருவர் (மறைந்த இயக்குனர் இராம.நாராயணன் தவிர்த்து) தகர்ப்பது பெரும் சிரமம்.

‘ராகினி ரிக்ரியேஷன்ஸ்’ குழுவின் மூலமாகப் பல்வேறு நாடகங்களை வெற்றிகரமாக நடத்திய அனுபவம், பாலச்சந்தருக்குத் திரைப்படம் இயக்கும் வாய்ப்பைத் தந்தது.

அந்த வகையில், எவரிடமும் உதவி இயக்குனராகப் பணியாற்றாமல் நேரடியாக இயக்குனர் நாற்காலியில் அமர்வதற்கும் அவரை உதாரணமாகச் சொல்லலாம்.

கே.பாலச்சந்தர் இயக்கிய முதல் திரைப்படமான ‘நீர்க்குமிழி’, இன்றைய தலைமுறைக்கும் பல்வேறு ஆச்சர்யங்களை பரிசளிக்கக் கூடியது.

எம்.ஜி.ஆர், சிவாஜி கணேசன், ஜெமினி தொடங்கி பெரும் நட்சத்திரங்களை சுற்றிச்சுழன்ற தமிழ் சினிமாவின் அச்சை, குணசித்திர பாத்திரங்களிலும் நகைச்சுவை பாத்திரங்களிலும் நடித்தவர்களை நோக்கித் திருப்பிய பெருமையைக் கொண்டது.

‘நீர்க்குமிழி’ எனும் டைட்டில் தொடங்கி அதன் உள்ளடக்கம் வரை அனைத்தையும் கருத்தில் கொண்டால், சினிமாவுலகின் கட்டுகளை உடைத்து எப்படி இந்த திரைப்படம் முழுதாக உருவாகி ரசிகர்களின் பார்வைக்கும் சென்றடைந்தது என்ற கேள்வி எழும்.

குமிழிகளின் கதை!

நீர்ப்பரப்பில் வாய்திறக்கும் எண்ணற்ற குமிழிகள் போல, மருத்துவமனையொன்றில் சிகிச்சை பெறும் நோயாளிகளைப் பற்றி பேசுகிறது ‘நீர்க்குமிழி’.

டாக்டர் பாலகிருஷ்ணனும் (மேஜர் சுந்தர்ராஜன்) அவரது மகள் இந்திராவும் (சௌகார் ஜானகி) ஒரு மருத்துவமனையை நடத்தி வருகின்றனர். பிறரது நோய்களைத் தீர்க்கும் மருத்துவச் சேவையில் தன் மகள் மென்மேலும் உயர வேண்டுமென்பதே பாலகிருஷ்ணனின் எண்ணம்.

அதனால், மருத்துவத் துறையில் புதிதாய் கற்றிட இந்திராவை அமெரிக்காவுக்கு பயிற்சி பெற அனுப்பும் முனைப்பில் இருக்கிறார்.

அம்மருத்துவமனையின் 7ஆவது வார்டில் சேது (நாகேஷ்), அருண் (கோபாலகிருஷ்ணன்), வேலாயுதம் (ஐ.எஸ்.ஆர்) ஆகிய 3 பேர் சிகிச்சை பெறுகின்றனர்.

பிரபல கால்பந்து வீரரான அருண் ஒரு விபத்தில் சிக்கி காலில் அடிபட்டதனால், அங்கு இருக்கிறார். அருணின் சொத்துக்களை பெரியம்மா (எஸ்.என்.லட்சுமி) நிர்வகிக்க, அவரது மகனோ பெரும் ஊதாரியாகத் திரிகிறார்.

வயிற்று வலியால் அவதிப்படும் வேலாயுதம், திருட்டுத்தனமாகத் தனது உறவினர்கள் மூலம் காரசாரமான உணவுகளைத் தருவித்து சாப்பிடுகிறார்.

நுரையீரல் புற்றுநோய் பாதிப்பு கொண்ட சேது, எந்நேரமும் தன்னைச் சுற்றியிருப்பவர்களிடம் வம்பு செய்யும் இயல்புடையவர்.

தனது மகிழ்ச்சிக்காக எதுவும் செய்யலாம் என்ற எண்ணமுள்ளவர். நர்ஸ் ஸ்டெல்லாவிடம் (ஜெயந்தி) காதல் வளர்ப்பவர்.

சேதுவால் மற்றவர்களுக்குப் பெரும் பாதிப்பில்லை என்றாலும் கூட, அவரது குணம் மற்றவர்களை எரிச்சலடைய வைக்கிறது.

இந்தச் சூழலில் இந்திராவுக்கும் அருணுக்கும் இடையே காதல் பூக்கிறது. அதற்கும் சேதுவே காரணமாகிறார்.

ஒருகட்டத்தில், மிகக்குறைந்த நாட்களே சேது உயிரோடிருப்பார் என்பதை அறிந்ததும் அவரது குறும்புகளைப் பொறுத்துக் கொள்ளத் தொடங்குகிறார் பாலகிருஷ்ணன்.

மருத்துவமனை சிகிச்சை பிடிக்காமல் வேலாயுதம் வெளியேற, அவரது இடத்தில் வயிற்றுவலியால் அவதிப்படும் வேறொரு நபர் அட்மிட் ஆகிறார். அந்த நபர் அருணை கொல்வதற்காக, நோயாளி போர்வையில் அங்கு நுழைந்தவர்.

அருணை அந்த நபர் கொலை செய்தாரா, இந்திரா – அருண் காதல் என்னவானது, இந்திரா அமெரிக்கா சென்றாரா, சேது உயிர் பிழைத்தாரா என்ற கேள்விகளுக்குத் தனக்கேயுரிய பாணியில் பாலச்சந்தர் பதிலளிப்பதுடன் முடிவடைகிறது ‘நீர்க்குமிழி’.

படத்தின் டைட்டிலுக்கும் வசனம் மூலமாக விளக்கம் தருகிறார்.

நாடகத்தில் இருந்து சினிமா!

தஞ்சாவூரிலுள்ள நன்னிலம் என்ற ஊரில் பிறந்த கே.பாலச்சந்தர், ஒரு ஆசிரியராகத் தன் பணி வாழ்வைத் தொடங்கியவர். அதன்பின்னர் சென்னையிலுள்ள அக்கவுண்டண்ட் ஜெனரல் அலுவலகத்தில் கணக்கர் பணியில் ஈடுபட்டவர்.

சிறுவயதிலிருந்து தொடர்ந்த சினிமா ஆர்வம் காரணமாக, சென்னை வந்ததும் ‘யுனைடெட் ஆர்ட்டிஸ்ட்’ குழுவில் சேர்ந்தார் பாலச்சந்தர். பணிக்கு இடையே, தனது ராகினி ரிக்ரியேஷன்ஸ் குழு மூலமாகச் சில நாடகங்களை எழுதி மேடையேற்றினார்.

‘மேஜர் சந்திரகாந்த்’, ‘நீர்க்குமிழி’, ‘நவக்கிரகம்’ உள்ளிட்ட அந்நாடகங்கள் பின்னாளில் அவராலேயே திரையுருவம் பெற்றன.

நாடக ஆசிரியராகப் புகழ் பெறத் தொடங்கியதுமே, எம்ஜிஆர் நடித்த ‘தெய்வத்தாய்’ படத்துக்கு வசனம் எழுதும் வாய்ப்பு பாலச்சந்தரைத் தேடி வந்தது.

அதன் தொடர்ச்சியாக, ‘சர்வர் சுந்தரம்’ எனும் அவரது நாடகம் இயக்குனர் ஜாம்பவான்கள் கிருஷ்ணன் – பஞ்சு இயக்கத்தில் திரைப்படமாகிப் பெரும் வெற்றியை ஈட்டியது.

பாலச்சந்தரின் நாடகங்கள் பெரும் வரவேற்பைப் பெற்றதும், தொடர்ச்சியாக அவரது கதை வசனத்தில் திரைப்படங்கள் தயாரானதும், ‘நீர்க்குமிழி’ நாடகத்தைத் திரைப்படமாக இயக்கும் வாய்ப்பை தயாரிப்பாளர் ஏ.கே.வேலன் பாலச்சந்தருக்குத் தரக் காரணமானது.

தனித்துவமான நடிப்புக்கூடம்!

ரஜினிகாந்த், சரிதா, பிரகாஷ்ராஜ், விவேக் என்று கிட்டத்தட்ட 100க்கும் மேற்பட்ட நடிப்புக் கலைஞர்களை திரையில் அறிமுகப்படுத்திய பெருமை பாலச்சந்தருக்கு உண்டு.

ஆனால், தொடக்க காலத்தில் அவரது திரைப்படங்களில் ரசிகர்களுக்கு நன்கு தெரிந்த முகங்களே இடம்பெற்றிருந்தனர்.

பெரும்பாலும் இவர்கள் சென்னையிலுள்ள ரசிகர்களைக் குறிவைத்து நடத்தப்பட்ட நாடகங்களில் நடித்தவர்களாகவும், திரையில் முகம் காட்டியவர்களாகவும் இருந்தனர்.

’நீர்க்குமிழி’யில் நடித்த மேஜர் சுந்தர்ராஜன், நாகேஷ், சௌகார் ஜானகி, கோபாலகிருஷ்ணன் ஆகியோர், அதற்கு முன்னரே பாலச்சந்தரின் நாடகங்களில் நடித்த அனுபவமுடையவர்கள்.

சிறு வயதிலேயே முதுமையான பாத்திரங்களை ஏற்று நடித்த ஒரு சில கலைஞர்களுள் மேஜர் சுந்தர்ராஜனும் ஒருவர். இப்படத்தில் கண்டிப்பான தலைமை மருத்துவராகவும், பெரும் லட்சியப் பயணத்துக்கு மகளை மடைமாற்றிவிடத் துடிக்கும் தந்தையாகவும் தோன்றியிருப்பார்.

வேறேதேனும் நாயகியை நடிக்க வைத்தால் இந்திரா ஒரு தேர்ந்த மருத்துவராகத் திரையில் தெரியமாட்டார் எனும் அளவுக்கு, அப்பாத்திரத்தோடு சிறப்பாகப் பொருந்திப் போகிறது சௌகார் ஜானகியின் நடிப்பு.

கிட்டத்தட்ட லட்சிய வாழ்க்கைக்காகத் தன் காதல் வாழ்வை இழந்த ஒரு முதிர்கன்னியின் வேடம் அவருடையது.

கால்பந்து வீரர் அருணாக நடித்த வி.கோபாலகிருஷ்ணன், உத்வேகமிக்க ஒரு இளைஞனின் இயல்பை வெளிக்காட்டியிருப்பார்.

பின்னாட்களில், பெரும்பாலான படங்களில் இவரை ஒரு கடமையுணர்வுமிக்க போலீஸ் அதிகாரியாக, நீதிபதியாக மட்டுமே நடிக்க வைத்து திருப்தி கண்டது தமிழ் திரையுலகம்.

எஸ்.என்.லட்சுமி இரண்டொரு காட்சிகளில் வந்துபோனாலும், அப்பாத்திரத்தின் குணாம்சத்தை பார்வையாளர்களுக்குக் கடத்தி விடுகிறார்.

பாலச்சந்தர் தனது பல படங்களில் இவரைப் பயன்படுத்தியதே, இவரது திறமையைத் தானாக விளக்கிவிடும்.

வயிற்றுப்புண் வந்து அவதிப்படும் வேலாயுதமாக நடித்த ஐ.எஸ்.ஆர் என்ற ஐ.எஸ்.ராமச்சந்திரன், நகைச்சுவை நடிப்பில் புகழ் பெற்றவர். நாகேஷோடு இவர் நடித்த காட்சிகளில் வசனங்கள் நம் வயிற்றைப் புண்ணாக்கும்.

’கூட்டத்தோடு கோவிந்தா’ என்பதுபோல கதையோட்டத்தோடு சேர்ந்திருக்கும் பாத்திரங்களில் நடித்ததும், இவருக்கென்று பிரத்யேகமான பாத்திரங்களை இயக்குனர்கள் உருவாக்காமல் போனதும், இன்றைய தலைமுறை இவரைத் தனித்து அடையாளம் காண முடியாமல் செய்துவிட்டது.

நர்ஸ் ஸ்டெல்லாவாக வரும் ஜெயந்தி, ’கவர்ச்சிக்கு நான் கியாரண்டி’ எனும் வகையில் படம் முழுக்க வந்து போகிறார். இதன் தொடர்ச்சியாக ‘எதிர்நீச்சல்’, ‘பாமா விஜயம்’ உட்படப் பல படங்களில் இவருக்கு வாய்ப்பு தந்தார் பாலச்சந்தர்.

இன்னொரு நர்ஸ் ஆக வரும் ஷோபாவுக்கு, சவுகார் ஜானகியை மேஜரின் கோபத்தில் இருந்து காப்பாற்றும் பாத்திரம். அதைத் தவிர அவருக்கு வேறு வேலையில்லை.

கடன் வசூல் செய்பவராக வரும் ஹரிகிருஷ்ணன், சேல்ஸ் ரெஃப் ஆக வருபவர் கூட சட்டென்று நம்மைச் சிரிக்க வைத்துவிடுவது சிறப்பு.

இந்த கலைஞர்களை எல்லாம் மீறி, ‘நீர்க்குமிழி’ முழுவதும் நிலைத்திருப்பது நாகேஷ் மட்டுமே.

நாகேஷ் இல்லாவிட்டால் இப்படத்துக்கு உயிரே இல்லை என்று சொல்லிவிடலாம். அந்த அளவுக்குத் தனது திறமைகளை இதில் கொட்டியிருப்பார்.

எவ்வளவு சீரியசான காட்சி என்றாலும், அவர் பேசும் வசனங்களில் டைமிங் காமெடி இருக்கும். அதனைக் கேட்டவுடன் சிரிப்பு வந்தாலும் கூட, உடனடியாகக் காட்சியின் தன்மைக்கு நம் மனம் மாறிவிடும் வகையில் அவரது நடிப்பு அமைந்திருக்கும்.

மிகத்தேர்ந்த நடிப்புக் கலைஞர்களால் மட்டுமே, இதனைத் திரையில் சாத்தியப்படுத்த முடியும். ’அபூர்வ சகோதரர்கள்’ படத்தில் இதே உத்தியை வில்லத்தனத்துடன் கலந்து பயன்படுத்தியிருப்பார் நாகேஷ்.

‘கன்னி நதியோரம்’ பாடலில் ஜெயந்தியுடன் சேர்ந்து உடலை வளைத்து நடனமாடியவாறே வரிகள் பிசகாமல் வாயசைத்திருப்பதை ‘வாவ்’ என்ற ஒற்றைச்சொல்லுக்குள் அடக்கிவிட முடியாது.

மரங்களைச் சுற்றி வந்து நாயகர்கள் நடனமாடிய காலத்தில், நாகேஷின் முதுகு தரையைத் தொட முனைந்ததற்கு டான்ஸ் மாஸ்டர் சுந்தரத்துக்குத்தான் ‘சபாஷ்’ சொல்ல வேண்டும்.

மொத்தத்தில் நாகேஷின் நடனம், நடிப்பு திறமையை ரசிகர்களுக்கும் படைப்பாளிகளுக்கும் வெளிக்காட்டுவதற்கான படைப்பாக அமைந்துபோனது ‘நீர்க்குமிழி’.

அதுவே, பின்னாட்களில் நகைச்சுவை பாத்திரங்களை மீறி குணச்சித்திர வேடங்களிலும் நடிக்கும் வாய்ப்புகளை அவருக்கு வாரி வழங்கியது.

நிமாய் கோஷும் பாலச்சந்தரும்!

தமிழ் சினிமாவிலும், சினிமா கலைஞர்களின் வாழ்விலும் சில மாற்றங்களை உருவாக்கிய பெருமைக்குரியவர் நிமாய் கோஷ்.

மும்பை, கொல்கத்தாவை அடுத்து சென்னையில் திரைப்படச் சங்கம் தொடங்கி, கமர்ஷியல் சினிமா அம்சங்களைத் தாண்டிய படைப்புகள் ரசிகர்கள் சென்றடையக் காரணமாக இருந்தவர்.

திரைப்படத் தொழிலாளர்களின் நலனுக்காகப் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டவர்.

ஒளிப்பதிவாளரான நிமாய் கோஷ், இசையமைப்பாளர் எம்.பி.சீனிவாசனுடன் இணைந்து, கிட்டத்தட்ட 50 பங்குதாரர்களுடன் கூட்டு சேர்ந்து நிதி திரட்டி (CROWD FUNDING), 1960ஆம் ஆண்டு ‘பாதை தெரியுது பார்’ எனும் திரைப்படத்தை இயக்கியவர்.

கம்யூனிஸ்ட் தலைவர் ப.ஜீவானந்தம் இப்படத்தின் தொடக்க விழாவில் கலந்துகொண்டார் என்பதிலிருந்தே, இக்கதையின் பேசுபொருளை அறிந்துகொள்ள முடியும்.

இப்படியொரு பின்னணி கொண்ட நிமாய் கோஷ், பாலச்சந்தரின் நீர்க்குமிழி, அனுபவி ராஜா அனுபவி, பத்தாம்பசலி படங்களில் இணைந்து பணியாற்றியிருக்கிறார்.

’நீர்க்குமிழி’யில் கதையின் இருண்மைக்குத் தகுந்தவாறு நிமாய் கோஷின் ஒளிப்பதிவும் ஒளியமைப்பும் அமைந்திருக்கும்.

மூன்று கட்டில்களை மட்டுமே பிரதானமாகக் கொண்ட ஒரு திரைக்கதையைச் சுவையாக்கியதில் நிமாய் கோஷின் கேமிரா நகர்வுகளுக்கு பெரும் பங்குண்டு.

மேஜர் சுந்தர்ராஜன் வருகையை, அவரது பார்வையில் மருத்துவமனையின் இயல்பைக் காட்டி உணர்த்துவது ஒளிப்பதிவின் திறத்துக்கு ஒரு சோறு பதம்.

பாலச்சந்தரின் ‘நீர்க்குமிழி’ நாடகத்தை ரசித்தவர்கள், படம் பார்த்தபோது நிச்சயம் நிமாய் கோஷ் உருவாக்கிய மாற்றங்களை உணர்ந்திருப்பார்கள்.

நிமாய் கோஷ், பி.என்.சுந்தரம், மாருதிராவ், என்.பாலகிருஷ்ணன் என்று வெவ்வேறு ஒளிப்பதிவாளர்களுடன் கைகோர்த்த பாலச்சந்தர், ஒருகட்டத்தில் பி.எஸ்.லோக்நாத்துடன் இணைந்து பல படங்களில் பணியாற்றினார்.

1985 முதல் 1996 வரை பாலச்சந்தரின் ஆஸ்தான ஒளிப்பதிவாளராக ரகுநாத ரெட்டி இருந்தார். சின்னத்திரைக்கு பாலச்சந்தர் நகர்ந்தபோதும், அவரது பக்கபலமாகத் தொடர்ந்தார்.

ஆடி அடங்கும் வாழ்க்கை!

’நீர்க்குமிழி’யின் படத்தொகுப்பாளர் வி.பி.நடராஜன், கலை இயக்குனர் ரங்கண்ணா ஆகியோரும், கதையோட்டத்தை பார்வையாளர்களுக்குக் கடத்துவதில் பெருமளவில் பாலச்சந்தருக்குத் துணை நின்றிருக்கின்றனர்.

அதேபோல, குறைவான பாடல்கள் படத்தில் இடம்பெற்றதும் கேமிரா நகர்வுக்கேற்ப அமைந்த பின்னணி இசையும் ‘நீர்க்குமிழி’யை வித்தியாசப்படுத்தின.

எம்.எஸ்.விஸ்வநாதன், இளையராஜா, வி.எஸ்.நரசிம்மன், அம்சலேகா, ஏ.ஆர்.ரஹ்மான், தேவா உட்படப் பல்வேறு இசையமைப்பாளர்களோடு பணியாற்றிய அனுபவம் கொண்டவர் கே.பாலச்சந்தர். அவரது முதல் படத்தின் இசையமைப்பாளர் என்ற பெருமைக்குரியவர் வி.குமார்.

தொலைபேசித் துறையில் பணியாற்றிய குமார், ‘கண் திறக்குமா’ என்ற நாடகத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார்.

பாலச்சந்தர் எழுதிய ‘வினோத ஒப்பந்தம்’ எனும் நாடகத்தில் அவரோடு முதன்முதலாக இணைந்து பணியாற்றினார். அதுவே, முதன்முறையாக சினிமாவில் இசையமைக்கும் வாய்ப்பையும் வழங்கியது.

ஆலங்குடி சோமு எழுதிய ’நீரில் நீந்திடும் மீன்’, ‘கன்னி நதியோரம்’ பாடல்கள் கதையோடு கலந்திருந்தாலும் சுரதா எழுதிய ‘ஆடி அடங்கும் வாழ்க்கையடா’ ரசிகர்களின் மனதோடு நிரந்தரமாக ஒட்டிக்கொண்டது.

சோகமான பாடல்களைக் கேட்கவிரும்புபவர்களின் ‘ஹிட் லிஸ்டி’ல் கட்டாயம் இப்பாடலுக்கு இடமுண்டு.

‘ஆடி அடங்கும் வாழ்க்கையடா’ பாடல் பதிவின்போது, அதனைச் சீர்காழி கோவிந்தராஜன் தான் பாட வேண்டுமென்பதில் உறுதியாக இருந்தாராம் பாலச்சந்தர்.

அதற்குக் காரணம், பாடல் வரிகளில் இருந்த அழுத்தத்தை குரலில் வெளிப்படுத்த அவரே சரியான சாய்ஸ் என்று நினைத்தது தான்.

நீர்க்குமிழியில் வி.குமாரின் அசோசியேட் ஆக பணியாற்றியவர் ஆர்.கே.சேகர். இவர், பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் தந்தை.

இடையிடையே எம்.எஸ்.வி., கே.வி.எம். ஆகியோரோடு கைகோர்த்தாலும் கூட நாணல், மேஜர் சந்திரகாந்த், எதிர் நீச்சல், இரு கோடுகள், நவகிரகம், நூற்றுக்கு நூறு, பத்தாம்பசலி, வெள்ளி விழா, அரங்கேற்றம் என பல படங்களில் வி.குமாரோடு இணைந்து பணியாற்றினார் பாலச்சந்தர்.

கதை சொல்லலில் புதிய வீச்சு!

மனிதர்கள் அல்லாது அவர்கள் பயன்படுத்தும் பொருட்கள், புழங்கும் இடங்கள், கால மாற்றம் மூலமாக கதை சொல்வதென்பது புதிதல்ல. அந்த வகையில், ’நீர்க்குமிழி’ கதையும் 7ஆம் எண் வார்டை சுற்றி வருகிறது.

பெரும் நட்சத்திரங்களைச் சுற்றி மட்டுமே கதை பின்னப்பட்ட காலகட்டத்தில் இப்படியொரு உத்தியை பயன்படுத்த அசாத்திய துணிச்சல் வேண்டும். அது, இயக்குனர் பாலச்சந்தரிடம் நிறையவே இருந்ததென்பதைப் பின்னாளில் ரசிகர்கள் புரிந்துகொண்டனர்.

மூன்று நோயாளிகள், அவர்களோடு சம்பந்தப்பட்ட உறவினர்கள் மற்றும் கடன் வசூல் செய்யும் நபர், இரண்டு மருத்துவர்கள், இரண்டு செவிலியர்கள், ஒரு மெடிக்கல் ரெப்ரசன்ரேட்டிவ் மற்றும் இக்கதாபாத்திரங்களின் பின்னே நடமாடும் மருத்துவமனையின் இதர பணியாளர்கள், நோயாளிகள் என்று மொத்தமே இரண்டு டஜன் நடிப்புக்கலைஞர்களை சுற்றிச் சுழல்கிறது ‘நீர்க்குமிழி’ கதை.

நோயாளிகள் நலம் பெற வேண்டுமென்று மருத்துவமனையைச் சேர்ந்தவர்கள் சிகிச்சை மேற்கொள்வதையும், நோய் தீர வேண்டுமென்று நோயாளிகள் வேண்டுவதையும் மட்டுமே சார்ந்த தட்டையான நிகழ்வுகளைக் கொண்டிராமல், தொடர்ச்சியாக ஓரிடத்தில் இருந்துவரும் சில மனிதர்களின் ஏற்ற இறக்கங்களைக் கொண்ட வாழ்க்கைப் பயணத்தைக் காட்டுகிறது.

கதையின் மையம் வேறுபட்டிருந்தபோதிலும் காதல், நகைச்சுவை, த்ரில், சென்டிமெண்ட், ஆத்திரம் மற்றும் வன்மம் என்று வழக்கமான தமிழ் திரைப்படங்களுக்கே உரிய அம்சங்கள் வெவ்வேறு அளவுகளில் இடம்பெற்று புதிய வீச்சைத் தந்தன.

அதுவே, கே.பாலச்சந்தரின் அறிமுகத்தை இருகரம் கொண்டு ரசிகர்கள் வரவேற்பதற்கும் காரணமானது.

சோர்வைத் தரும் ’ட்ரீட்மெண்ட்’!

பெரும்பாலான திரைப்படங்களில் பெண் பாத்திரங்களைக் காதலுக்கும் கோபத்துக்கும் காமத்துக்கும் மட்டுமே பயன்படுத்திவந்த நிலையில், தனது படங்களில் சுயாதீனமிக்க பெண் பாத்திரங்களைத் தொடர்ந்து படைத்தவர் கே.பாலச்சந்தர்.

அரங்கேற்றம், அவள் ஒரு தொடர்கதை, அபூர்வ ராகங்கள் உட்படப் பல்வேறு படங்களில் அது உச்சம் பெறுவதற்குத் தொடக்கமாக அமைந்தது ‘நீர்க்குமிழி’.

சௌகார் ஜானகி நடித்த இந்திரா பாத்திரம், காதலைத் துறந்து மருத்துவத் துறையில் மென்மேலும் முன்னேறி மனித சமூகத்துக்குச் சேவையாற்ற விரும்பும்.

’ஒரு வட்டத்துக்குள் சுழலும் பெண் மனம்’ எனும் கற்பிதத்தை, இக்கதையில் வரும் செவிலியர்கள், அருணின் பெரியம்மாவும் கூட சுக்குநூறாக்குகின்றனர்.

வழக்கமாக, சாகும் தருணத்தில் ஒரு பாத்திரம் விடுக்கும் வேண்டுகோள் படத்தின் முடிவில் ஏற்கப்படுவதே திரைக்கதை ‘க்ளிஷே’க்களின் அடிப்படை.

இக்கதையில், அருண்-இந்திரா காதல் கல்யாணத்தில் கனிய வேண்டுமென்ற சேதுவின் விருப்பத்தை மீறியிருப்பார் பாலச்சந்தர்.

அருண் வாழ்நாள் முழுவதும் கால்பந்து விளையாடமுடியாமல் போய்விட, வயிற்று வலியை முழுதாகக் குணப்படுத்தாமல் மருத்துவமனையை விட்டு வேலாயுதம் கிளம்பிச் சென்றுவிடுவார்.

அதாவது, திரைக்கதையை நகர்த்தும் மூன்று பாத்திரங்களுமே வாழ்வில் ‘சுபம்’ என்ற ஒன்றைத் தவறவிட்டிருக்கும். மேஜர் சுந்தர்ராஜன், சௌகார் ஜானகி நடித்த பாத்திரங்களுக்கும் இதே கதைதான்.

இதையெல்லாம்விட, திரைக்கதையில் நிரம்பியிருக்கும் வெறுமையும் சோகமும் பார்வையாளர்களே மேலும் அயர்ச்சியுற வைக்கிறது.

’வாழ்வில் துன்பத்தை தவிர வேறொன்றுமில்லை’ என்ற எண்ணம் படம் பார்த்து முடிந்ததும் தானாக எழுவதே ‘நீர்க்குமிழி’யை மீண்டும் ஒருமுறை ரசிக்க வேண்டுமென்ற எண்ணத்தைத் தள்ளிப்போடுகிறது.

’மேஜர் சந்திரகாந்த்’, ’புன்னகை’, ‘தாமரை நெஞ்சம்’, ‘புன்னகை மன்னன்’ உட்பட பாலச்சந்தர் எழுதி இயக்கிய பல படங்கள் இதே உணர்வை ஏற்படுத்தியவை; இவற்றில் சில பெருவெற்றிகளைப் பெற்றிருக்கின்றன.

மாறாக, வாழ்வு மீது நம்பிக்கையை விதைக்கும் ’உன்னால் முடியும் தம்பி’, ‘வானமே எல்லை’ போன்ற பாலச்சந்தரின் வேறு சில படைப்புகள் ரசிகர்களின் கொண்டாட்டத்தைத் தவறவிட்டிருக்கின்றன. இது விளக்கங்களுக்கு அப்பாற்பட்ட முரண்.

டைட்டிலுக்கு எதிர்ப்பு!

வழக்கமான வணிகக் கணக்குகளுக்கு அப்பாற்பட்டு, பெருலாபத்தை எதிர்பார்க்கும் வழக்கம் சினிமாவுலகில் இன்றளவும் தொடர்கிறது. அதனால், தொட்டதெற்கெல்லாம் சகுனம், சடங்கு பார்ப்பதும் கூடத் தொடர்கிறது.

நீர் மற்றும் குமிழி இடையே ‘க்’ இடம்பெற்றது முதல் அமங்கலமான சொல்லாகக் கருதப்படும் ‘நீர்க்குமிழி’ எனும் தலைப்பு நிலைத்திருக்கவும் நிறையவே மெனக்கெட்டிருக்கிறார் கே.பாலச்சந்தர்.

நாடகத்தில் இருந்த டைட்டிலே சினிமாவுக்கு வேண்டுமென்ற அவரது பிடிவாதம், அவரைச் சுற்றியிருந்தவர்களின் சந்தேகங்களையும் எதிர்ப்புகளையும் தயக்கமேயின்றித் தாண்டிவிட்டது.

இந்த டைட்டிலால் படமே முடங்கிவிடும், எதிர்காலமே இருண்டுவிடும் என்பது போன்ற பேச்சுக்களை பாலச்சந்தர் கட்டாயம் எதிர்கொண்டிருப்பார்.

தெலுங்கில் ’நீர்க்குமிழி’ ரீமேக் செய்யப்பட்டபோது வைக்கப்பட்ட பெயர் ‘சிரஞ்சீவி’. இதிலிருந்தே, அந்த காலத்தில் எந்த அளவுக்கு சினிமாவை சில சென்டிமெண்ட்கள் ஆட்டிப் படைத்தது என்று அறியலாம்.

ஆனால், தமிழில் எந்தப் படைப்பு கே.பி.யை அடையாளம் காட்டியதோ அதன் தெலுங்கு ரீமேக் ஒரு மாபெரும் ஜாம்பவானின் வீழ்ச்சிக்கு வகை செய்து அவரது திரைவாழ்வையே திசைதிருப்பியது. அவர், ’நடிகையர் திலகம்’ சாவித்திரி.

‘சிரஞ்சீவி’யை தயாரித்து இயக்கி நஷ்டத்தை எதிர்கொண்ட சாவித்திரி, பின்னாட்களில் இயக்குனராகவும் நடிகையாகவும் தனது திறமையைத் தொடர்ந்து வெளிக்காட்டினாலும் அவரது செல்வ வளம் சரிந்துபோனது துரதிர்ஷ்டமான விஷயம்.

பெரும் பாய்ச்சலின் முதல் அடி!

வித்தியாசமான இயக்குனராக கவனம் பெற்ற பாலச்சந்தர், சிவாஜியை நாயகனாக வைத்து ‘எதிரொலி’ என்ற படத்தை மட்டுமே இயக்கியிருக்கிறார்.

தொடக்க காலத்தில், அவரது கதைகளின் நாயகனாக முத்துராமன், நாகேஷ் போன்ற நடிகர்களே இடம்பெற்றனர்.

’எதிர்நீச்சல்’ படத்துக்குப் பிறகு பாலச்சந்தரின் இயக்கத்தில் நடிக்க வேண்டுமென்று ஜெமினி கணேசன் விரும்பியதாகவும், அக்கூட்டணி அமைய முதல் அடி எடுத்து வைத்ததாகவும் ஒரு தகவல் உண்டு.

திரையில் கதை சொல்லும் விதம் தாண்டி எம்.ஜி.ஆர், சிவாஜி அல்லாத இதர நடிப்புக் கலைஞர்களுடன் கைகோர்த்ததே, அந்நாட்களில் பாலச்சந்தரின் படங்களில் அப்படியென்ன இருக்கிறது என்று சில ரசிகர்கள் முகம் திருப்பக் காரணமானது.

தெலுங்கு, கன்னடம், இந்தி மொழிகளில் படம் இயக்கியபோதும், இவ்வழக்கத்தை அவர் தொடர்ந்தார்.

திரையின் முன்னால் பல புதுமுகங்களை அறிமுகப்படுத்தினார். பாலச்சந்தரின் மோதிரக்கையால் குட்டுப்பட்ட பல கலைஞர்கள், இந்தியா முழுக்கப் புகழுடன் விளங்குவது நாமறிந்த விஷயம்.

எத்தனையோ நாடகக் கலைஞர்கள் தமிழ் திரையுலகில் கால்பதித்து வந்த சூழலில், பாலச்சந்தரின் வரவும் பத்தோடு பதினொன்றாகவே கருதப்பட்டிருக்கும்.

ஆனால் நடுத்தர வர்க்கத்தினர் சந்திக்கும் பிரச்சனைகளும், அவர்களது உளவியல் சிக்கல்களும், பாலியல் முரண்பாடுகளும் கதையோட்டத்தின் அடிநாதமாக இருப்பதில் கவனம் செலுத்தினார் பாலச்சந்தர்.

நாடகங்கள் திரையுருவம் பெற்றபிறகு, அவ்வுத்தியே மென்மேலும் திரைப்படங்கள் இயக்க அவருக்குக் கைகொடுத்தது.

இதன் தொடர்ச்சியாக, வேற்று மொழிகளில் புகழ்பெற்ற நாடகங்கள், திரைப்படங்களில் இருந்து ‘இன்ஸ்பிரேஷன்’ பெறும் வழக்கமும் கைவந்தது.

தனக்கென்று தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கிக் கொண்டதே, தமிழ் சினிமாவில் ஸ்ரீதருக்கு பிறகு ஒரு தேர்ந்த இயக்குனராகப் பாலச்சந்தர் புகழ் பெற வழி வகுத்தது.

அந்த காலகட்டத்தில் பெருவாரியாக இருந்த கிராமங்களை சினிமா படைப்பாளிகள் குறிவைத்தபோது, நகரத்தில் வசிப்பவர்களையும் அதை நோக்கி நகர்ந்தவர்களையும் பற்றிப் பேசின பாலச்சந்தரின் திரைப்படங்கள்.

நகரம் ஒரு நரகம் என்று சொன்னவர்களுக்கு, அந்நரகத்தின் ஒரு பகுதியைக் காட்டியது அவர் முன்வைத்த உலகம்.

அந்த வகையில், ’இயக்குனர் சிகரமாக’ அறியப்படும் கே.பாலச்சந்தரின் பெரும் பாய்ச்சலுக்கான முதல் அடியாக அமைந்துபோனது ‘நீர்க்குமிழி’.

****

படத்தின் பெயர்: நீர்க்குமிழி, இசையமைப்பு: வி.குமார், பாடல்கள்: சுரதா, ஆலங்குடி சோமு, கலை: ரங்கண்ணா, கே.பி.முத்து, உடை: பி.எஸ்.மாணிக்கம், ஒப்பனை: பாபு, ராமசாமி, ரங்கசாமி, ஒளிப்பதிவு: நிமாய் கோஷ், ஒலிப்பதிவு: இ.ஐ.ஜீவா, கே.என்.ஷண்முகம், படத்தொகுப்பு: வி.பி.நடராஜன், ப்ராசஸிங்: ஏவிஎம் ஸ்டூடியோ லாபரட்டரீஸ், ஸ்டூடியோ: அருணாசலம், தயாரிப்பு: ஏ.கே.வேலன், கதை, வசனம், இயக்கம்: கே.பாலச்சந்தர்

நடிப்பு: நாகேஷ், வி.கோபாலகிருஷ்ணன், மேஜர் சுந்தர்ராஜன், சௌகார் ஜானகி, ஜெயந்தி, எஸ்.என்.லட்சுமி, ஷோபா, ஐ.எஸ்.ஆர்., தண்டபாணி

-உதய் பாடகலிங்கம்

Comments (0)
Add Comment