உறவுகள் தொடர்கதை – 14
திருமணம் என்ற ஏற்பாடு அடுத்த தலைமுறையை உருவாக்க மட்டும் அல்ல. ஆண்/பெண் உறவு திருமண பந்தத்தால் சீரடைகிறது.
இதற்கு அடுத்த கட்டமான தாம்பத்திய உறவுதான் உறவின் ஆரம்பம் என்பது மிக முக்கியமான உண்மை.
அது மட்டுமின்றி, இந்த உறவின் துவக்கம் மூலம்தான், எனக்கானவன் / எனக்கானவள் என்ற உரிமை உருவாக மிக முக்கியமான பங்களிப்பு செய்கிறது.
இந்த உரிமை வந்த பின்தான் மற்ற உணர்வுகளான, பாசம், பாதுகாப்புத் தருதல், ஏற்றுக் கொள்ளுதல், பரஸ்பர அக்கறை, பரஸ்பரம் நம்பிக்கையுடன் சார்ந்து இருக்கத் துவங்குதல், விட்டுக் கொடுத்தலை மகிழ்வாக செய்தல், மனம்விட்டுப் பேச எண்ணம் ஏற்படுதல் போன்ற பல விஷயங்களுக்கு தாம்பத்திய உறவு அச்சாணி.
இது சரியாக இருந்தால், அந்தத் தம்பதியரிடையே, எரிச்சல், கோபம், குறை சொல்லுதல், அலட்சியம், அக்கறையின்மை, டென்ஷன், பரஸ்பரம் தவிர்த்தல், வருத்தத்தோடு இருத்தல், இறுக்கம், விட்டுக் கொடுக்காமை, குறை சொல்லுதல், வாழ்க்கையில் பிடிப்பின்மை ஆகியன இருக்காது.
மேற்குறிப்பிட்டவற்றில் இரண்டிற்கு மேல் இருந்தால், அவர்களுக்குள் இன்னும் தாம்பத்திய புரிதல், ஏற்படவில்லை அல்லது புரிந்தது ஏற்றுக் கொள்ள முடியாமல் அல்லது பிடிக்காமல் இருக்கிறார்கள் என்று அர்த்தம்.
இந்த விஷயத்தைப் பற்றி, திருமணத்திற்கு முன்பிருந்தே கவனத்தில் கொள்ள வேண்டும்.
அதில் முக்கியமானது, பெண்ணைப் பற்றி, குறிப்பாக தோற்ற அழகைப் பற்றி அலங்காரம், ஜோடனைகள் மூலம் ஆணிடம் அநியாய எதிர்பார்ப்பை ஏற்படுத்தாமல் இருப்பது முக்கியம்.
அவளது இயல்பான அழகை, தோற்றத்தை, மெருகூட்டுவது வேறு. இல்லாததை இருப்பது போல அதீத அலங்காரங்கள் செய்து, திருமண தினத்தன்று அல்லது அதற்கு முன்பே நிச்சயம் போன்ற விசேஷங்களிலிருந்து, மிகைப்படுத்தப்பட்ட தோற்றப் பொலிவைக் காட்டுவது வேறு.
உண்மை வேறாக இருந்தால், கடைசியில் ஏமாற்றத்திலும், பிரச்சினையிலும்தான் முடியும்.
இது பற்றிய நவீன நகைச்சுவை கதை உண்டு. ஒரு தம்பதிக்குத் திருமணம் நடக்கிறது. மணப் பெண்ணுக்கு, திருமணப் பெண் அலங்காரம் செய்வதில் சிறந்த ஒரு பெண்மணி மூலம் அலங்காரம் நடக்கிறது.
மணமேடையில், வரவேற்பில் மாப்பிள்ளைக்கு தன் பக்கத்தில் எல்லா அழகையும் பெற்றவளாகத் தெரியும் அந்தப் பெண் தனக்குத்தானா என்ற ஆச்சரியத்தில் மிதக்கிறான்.
மறுநாள் காலையில் அலங்காரம் செய்த பெண்மணியைச் சந்தித்து, ஒரு பரிசுப் பெட்டியைக் கொடுக்கிறான். அவருக்கும் மிகுந்த சந்தோஷம். பிரித்துப் பார்த்தால், ஐஃபோன் வைக்கும் பெட்டி. பரபரப்புடன் பிரித்துப் பார்த்தால், பழைய நோக்கியா 500 செல்பேசி இருந்தது.
ஆத்திரமும், அதிருப்தியுமாய் அந்த மாப்பிள்ளையைத் தொடர்பு கொள்கிறார். அவரைப் பேச விடாமல், புது மாப்பிள்ளை, இடைமறித்து, ‘என்ன எப்படி இருந்தது? நேத்து ராத்திரி எனக்கும் அப்படித்தான் இருந்திச்சி..’
இது தமாஷுக்காக சொல்லப்பட்டாலும், இந்தக் காலத்தில் மிக அதிகமாக இந்தத் தவறுகள் நடக்கிறது.
தாம்பத்தியம் என்பது தனிப்பட்ட விஷயம்தான். ஆனால் அதற்கும் சில பொது விதி இருக்கின்றன. இயல்பான தோற்றம்தான் காலம் முழுவதும் இருக்கப் போகிறது.
மேல்பூச்சு, அலங்காரங்கள் நிச்சயம் தேவைதான். அவை இருப்பவற்றுக்கு மெருகூட்ட வேண்டுமே தவிர, இல்லாததை இருப்பதாய் போலித்தனமாக உருவாக்கக் கூடாது.
இது பெண்ணிற்கு மட்டும்தானா எனக் கேட்கலாம். என்னதான் ஆணுக்கு மேல்பூச்சு அலங்காரம் செய்தாலும், இல்லாததையோ, இருப்பதையோ 20% மேல் கூட்டவோ குறைக்கவோ முடியாது என்பது நிதர்சமான உண்மை.
அதனால்தான், இது போன்ற கதை ஆணை வைத்து உருவாகவில்லையோ எனத் தோன்றுகிறது.
ஆண் / பெண் இருவருக்கும் பொதுவான விஷயம். பாலுறவு பற்றின உணர்வு, அது பற்றிய கற்பனைகள், எதிர்பார்ப்புகள், ஆகியவற்றிலிருந்து தோன்றுவது.
இவை எல்லாமே, பார்த்தவை, கேட்டவை ஆகியவற்றிலிருந்து உருவாகின்றன. அப்படி இருக்கும்போது, அந்தக் கற்பனை உருவாவதற்கான அடிப்படை அம்சங்கள் 80% ஆவது உண்மையாக இருக்க வேண்டும்.
இல்லையானால், ஏமாற்றம், அதிருப்தியாக மாறும். அதிருப்தி ஆத்திரமாக மாறும். அப்புறம் தாம்பத்தியத்திற்கு வழியேது?
திருமணத்திற்குப் பின் தம்பதியர் இருவருமே சில விஷயங்களைப் பற்றி எப்போதும் கவனமாக இருக்க வேண்டும்.
முதலில் பரஸ்பர எதிர்பார்ப்புகள், கற்பனைகள் ஆகியவற்றை மற்றவரிடம் சொல்லிவிட வேண்டும். மற்றவரின் விருப்பம் அடுத்தவருக்கு, சங்கடத்தைத் தந்தால், அது பற்றி தெரிவிக்க வேண்டுவது அவசியம்.
அதே சமயம், அது பற்றி தெரியாமல், முதல் முறையாக தெரிந்தால், அதைப் பழகிக்கொள்ள முயற்சி செய்யவும் தயங்கக் கூடாது.
பாலுறவில் இதைத்தான் செய்யலாம், இதையெல்லாம் செய்யக் கூடாது என்று ஏதுமில்லை. எது பரஸ்பரம் மகிழ்ச்சியைக் கொடுக்கிறதோ, அதுதான், அந்தத் தம்பதியருக்கானது. அவ்வளவுதான்..
அதே சமயம் இதில் இருக்கும் மிக முக்கியமான பெரும் பிரச்சினைகளைக் கொண்டு வரும் விஷயங்களைக் குறிப்பிட்டாக வேண்டும்.
முதலாவது, ஆண்களுக்கானது, செல்பேசியில் மூன்று நொடியில் நீலப்படங்கள் நூற்றுக் கணக்கில் வரும். அதைப் பார்ப்பதால் பல வேண்டாத விளைவுகள் நிரந்தரமான ஏற்படும் என்பது வேறு விஷயம்.
ஆனால், அதைப் பார்த்து விட்டு, பெண் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும், இப்படித்தான் படுக்கையில் நடந்துகொள்ள வேண்டும் என்ற கற்பனை மனதில் ஆழமாக வேரூன்றிவிடும்.
ஏனென்றால், எல்லாப் படங்களிலும், மிக வடிவான பெண்கள்தான் தோன்றுவார்கள். பார்வையாளர்கள் அவர்களைப் பார்த்துக் கிளர்ச்சியடைவதைப் பழக்கமாகக் கொண்டிருப்பார்கள்.
ஆனால், நிஜ வாழ்க்கையில் அப்படிப்பட்ட பெண்கள் என்பது சாத்தியமில்லாதது. அவர்கள் நடிகைகள், பல வழித் தேர்வுகளுக்குப் பின் நடிக்க வந்தவர்கள்.
ஆனால் இந்தப் படங்களையே திரும்பத் திரும்பப் பார்ப்பவர்களுக்கு ஆழ்மனக் கற்பனைகள் அதீதமாகிவிடும். நிழலே நிஜம் என நினைக்கத் தோன்றும். நடிப்பே யதார்த்தமாகத் தோன்றும்.
இதே நினைப்புடன் தனக்கு வரும் துணையும் இருக்க வேண்டும் என்ற எதிர்பார்த்தால், மிகப் பெரும் ஏமாற்றத்துக்கு ஆளாக வேண்டிவரும்.
தாம்பத்திய உறவுச் செயல்பாடுகளும் இப்படித்தான். நினைப்பதுபோல இல்லாவிட்டால், மனம் அதிருப்தியில் தள்ளாடும். அதன் பின் உறவு சாத்தியப்படாது. பிரச்சினைகள் மட்டுமே பலனாக இருக்கும்.
இதுவேதான் பெண்களுக்கும், பார்த்ததை, கேட்டதை, படித்ததை வைத்து, இப்படி இருந்தால்தான், திருப்தி வர முடியும் என்று நினைத்துப் பழகினால், அது நிதர்சனத்திற்கு வெகு தூரத்தில் இருப்பது தெரிய வரும்.
இந்த உறவு, அதன் தன்மை, ஆழம், அழகு, திருப்தி, ஏற்பது எல்லாமே ஒரு விஷயத்தின் அடிப்படையில் இருந்தால், பிரச்சினை அதிகம் வராது.
நாம் பல குழந்தைகளைப் பார்க்கிறோம், அழகாக, அறிவாக, உற்சாகமாக என்று எண்ணிலடங்காத வகையில்.
ஆனால் நமது குழந்தை எப்படி இருந்தாலும் அதற்கென்று ஒரு சிறப்பான இடம் கொடுக்கிறோம் அல்லவா?
ஏனென்றால் அது நம்முடையது. அந்தப் புரிதல், நமது துணைவரைப் பற்றி இருந்தால் பிரச்சினைகள் வராது. தேவையில்லாத ஒப்பீடு இருக்காது.
நம்மிடம், நமக்கு வாய்த்தவரிடம் உள்ள சிறப்புகளைக் கணக்கெடுப்போம். இருப்பதை மகிழ்வுடன் ஏற்போம். இல்லாதவற்றில் எதைப் பெற முடியும், வளர்க்க முடியும் என ஆராய்ந்து அதன் அடிப்படையில் செயல்படுவோம்.
இந்த அணுகுமுறைதான் தாம்பத்திய உறவு வலுப்பட, ஆழமாக தொடர உதவக் கூடியது.
அடுத்ததாக தாம்பத்திய உறவில் ஆண் / பெண் கவனிக்க வேண்டிய விஷயங்கள், இது உடலுக்கு, மனதுக்கு எவ்வளவு நல்லது என்பதைப் பார்க்கலாம்.
- தனஞ்செயன், மனநல ஆலோசகர்