மின் தடையால் திணறும் சீனா!

-கொரோனா போல் உலக நாடுகளை பாதிக்குமா?

சீனாவுக்கு இது போதாத காலம். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ், அந்நாட்டை உண்டு இல்லையென்று செய்துவிட்டது. அதன்பின் அந்த வைரஸ் உலகம் முழுக்கச் சுற்றிச் சுழன்றடித்து வருகிறது.

கொரோனா வைரஸின் தாக்கம் குறைவதற்குள், இப்போது மின்தடை பிரச்சினை சீனாவின் கழுத்தை நெறித்து வருகிறது.

அந்நாட்டின் பல முக்கியமான நகரங்களில் 6 முதல் 10 மணிநேரத்துக்கு மின் சப்ளை துண்டிக்கப்படுவதுடன், தொழிற்சாலைகளும் வர்த்தக நிறுவனங்களும் முடங்கிக் கிடக்கின்றன.

கடந்த சில மாதங்களாகவே நிலக்கரி மற்றும் இயற்கை எரிவாயுவின் விலை கடுமையாக உயர்ந்து வருகின்றன.

கரியமில வாயுவை வெளியிடுவதைக் குறைக்க, உலக நாடுகள் பலவும் முடிவு செய்துள்ளதால் நிலக்கரி மற்றும் இயற்கை எரிவாயு உற்பத்தியை குறைத்தது இதற்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது.

அதேநேரத்தில் சீனாவின் மின்சாரத்தின் தேவை கடுமையாக உயர்ந்து வந்தது.

இந்தச் சூழலில் நிலக்கரி இறக்குமதியில் ஏற்பட்ட சரிவு காரணமாகவும், கார்பன் உமிழ்வை குறைப்பதற்கான இலக்கை அடையும் நோக்கிலும் சீன அரசு கடந்த ஜூன் மாதம் முதல் மின் பகிர்மானத்தை ரேஷன் முறையில் விநியோகிக்க தொடங்கியது.

24 மணிநேரமும் இயங்கிக்கொண்டிருக்கும் தொழிற்சாலைகள் முதல் வீடுகள் வரை அனைத்துக்கும் இனி ரேஷன் முறையில்தான் மின்சாரம் விநியோகிக்கப்படும் என்று சீன அரசு அறிவித்தது. அதைக் கடுமையாக செயல்படுத்தியும் வருகிறது.

மின்சாரத்தை ரேஷன் முறையில் விநியோகிக்கும் சீன அரசின் முடிவால் அந்நாட்டின் வடக்குப் பகுதியில் உள்ள 20 மாகாணங்களைச் சேர்ந்த மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

செல்போன் விளக்கு வெளிச்சத்திலும் மெழுகுவர்த்தியின் வெளிச்சத்திலும் வாழ்க்கையை நடத்தவேண்டிய சூழலுக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர். ஓரளவுக்கு வசதியானர்கள் ஜெனரேட்டர்களை வைத்து சமாளித்து வருகிறார்கள்.

இந்த மின்வெட்டு பிரச்சினை காரணமாக நிறுவனங்கள் இயங்குவது பாதிக்கப்பட்டுள்ளதால், மக்களின் இயல்பு வாழ்க்கை சீர்கெட்டுள்ளது.

வடகொரியாவில் உள்ள மக்களைப் போல் தாங்கள் கஷ்டப்பட்டு வருவதாக அந்நாட்டு மக்கள் புகார் கூறி வருகிறார்கள்.

இந்த நிலை இப்படியே தொடர்ந்தால், சீன அரசு கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கக் கூடும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

அதே நேரத்தில் இப்போது சீனாவில் தற்போது ஏற்பட்டுள்ள மின் தடை பிரச்சினை, அந்நாட்டை மட்டுமின்றி, கொரோனா வைரஸைப் போன்று உலகம் முழுவதையும் தொற்றிக்கொள்ள வாய்ப்பு இருப்பதாகவும் பொருளாதார வல்லுநர்கள் எச்சரித்து வருகிறார்கள்.

முதல் கட்டமாக மின் தடையால் சீனாவில் இருந்து பொருட்களை ஏற்றுமதி செய்வது குறைந்து விட்டால், பல்வேறு நாடுகளிலும் முக்கியப் பொருட்களின் விலை உயரும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

இதெல்லாம் ஒருபுறம் இருக்க, சீனாவில் ஏற்பட்டுள்ள எரிபொருள் பிரச்சினை, கொரோனாவைப் போல இப்போது இங்கிலாந்து உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளுக்கும் கொஞ்சம் கொஞ்சமாக பரவி வருகிறது.

வாகனங்களுக்கான எரிபொருள் கிடைக்காமல் அந்நாட்டைச் சேர்ந்தவர்கள்  பாதிக்கப்பட்டுள்ளனர். வாகனங்களுக்கு எரிபொருள் நிரப்பும் நிலையங்கள் மூடப்பட்டு கிடக்க, எரிபொருளுக்காக மக்கள் அலைந்து வருகிறார்கள்.

இயற்கை எரிவாயு மற்றும் நிலக்கரியின் விலை உயர்வால் அந்நாடுகளிலும் மின் தடைகள் ஏற்படத் தொடங்கியுள்ளன. இவற்றை எப்படி சரிசெய்வது என்று தெரியாமல் அரசுகள் கையைப் பிசைந்துகொண்டு நிற்கின்றன.

கொரோனா வைரசைப் போல் சீனாவில் தொடங்கி, தற்போது ஐரோப்பிய நாடுகளைச் சுற்றி வளைத்துள்ள எரிபொருள் மற்றும் மின் தடை பிரச்சினை இந்தியாவுக்கும் வந்துவிடக்கூடாதே என்ற அச்சத்தில் ஆட்சியாளர்களும் மக்களும் உள்ளனர்.

-பிரணதி

ChinaCoronaPower Cutஎரிவாயுகொரோனாசீனாமின்தடை
Comments (0)
Add Comment