தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்த வண்ணம் இருந்ததால் 9 முதல் 12-ம் வகுப்பு வரை மட்டுமே பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. கடும் கொரோனா கட்டுப்பாடுகளுடன் மாணவ, மாணவிகள் பள்ளிகளுக்குள் அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள்.
1 முதல் 8-ம் வகுப்பு வரை பள்ளிகளை திறப்பது குறித்து கல்வித்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
இதனிடையே கொரோனா நோய்த்தொற்று பரவலைக் கட்டுப்படுத்த எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நேற்று சென்னை தலைமைச் செயலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில், வரும் பண்டிகை காலங்களில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வது குறித்தும், 1 முதல் 8-ம் வகுப்பு வரை பள்ளிகளைத் திறப்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.
ஆலோசனையின் முடிவில், வரும் பண்டிகை காலங்களில் பொதுமக்கள் அதிகம் கூடுவதன் காரணமாக, கொரோனா நோய்த்தொற்றுப் பரவக்கூடும் என்பதைக் கருத்தில் கொண்டு ஏற்கனவே விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் 31-10-2021 காலை 6 மணி வரை தொடர்ந்து அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சமுதாயம், அரசியல், கலாசார நிகழ்வுகள், திருவிழாக்கள், குடமுழுக்கு உள்ளிட்ட செயல்பாடுகளுக்கு ஏற்கனவே விதிக்கப்பட்ட தடை தொடர்ந்து நடைமுறையில் இருக்கும் என்றும், நோய்த்தொற்று பரவாமல் இருக்க பெருமளவில் மக்கள் ஒன்று கூடக்கூடிய நாட்களாகிய வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய கிழமைகளில் அனைத்து வழிபாட்டு தலங்களும் தொடர்ந்து மூடப்பட்டு இருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.
#ஊரடங்கு #முகஸ்டாலின் #TamilNadu #corona #lockdown