ஹெச்.ராஜா: தொடர்ந்து மீறும் அநாகரீக எல்லைகள்!

அரசியலில் ஆபாசமாகவும், அநாகரீகமாகவும் பேசுவதற்கென்றே சிலர் எப்போதுமே இருந்து  வந்திருக்கிறார்கள்.

இதில் தேசியக்கட்சி , மாநிலக்கட்சி என்கிற பேதங்கள் எல்லாம் இல்லை. எல்லாக் கட்சிகளிலும் இப்படிப் பேசுவதற்கென்றே பெயர் பெற்ற பேச்சாளர்கள் இருந்திருக்கிறார்கள்.

பெரும்பாலும் கட்சிகளின் முன்னணித்தலைவர்கள் இப்படிப்பட்ட பேச்சைப் பொதுவெளியில் தவிர்த்து வந்திருக்கிறார்கள்.

அண்மைக்காலத்தில் குடிநீரில் சாக்கடை நீர் கலந்த மாதிரி சில கட்சிகளின் முக்கியத் தலைமைப் பொறுப்பில் இருப்பவர்கள் கூட, அநாகரீகமாகப் பேச ஆரம்பித்துவிட்டார்கள்.

தேர்தலுக்கு முந்தைய பிரச்சார நேரத்தில் தி.மு.க.வைச் சேர்ந்த ஆ.ராசா கொச்சையான படி, அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியைப் பற்றிப் பேச, பெரும் சர்ச்சை எழுந்து, முடிவில் மன்னிப்புக் கேட்டார் ராசா.

தற்போது பா.ஜ.க.வின் மூத்த பிரமுகர்களில் ஒருவரான ஹெச்.ராஜாவின் அநாகரீகமான பேச்சு சர்ச்சைக்குள்ளாகி இருக்கிறது.

ஹெச்.ராஜா இப்படிக் கொச்சையாகப் பேசுவது முதல் முறையல்ல. இதற்கு முன்னால் திராவிட இயக்கத் தலைவர்கள் முதல் திருமா, சீமான் என்று பலரையும் வசை பாடியிருக்கிறார். நீதிமன்றத்தையும் வசை பாடி அது தொடர்பான வழக்கு நடந்து கொண்டிருக்கிறது.

வரம்பு மீறிய பேச்சுகளால் ஊடகங்களுக்குத் தொடர்ந்து தீனி போட்டுக் கொண்டிருக்கும் ஹெச்.ராஜா தற்போது ஊடகத்தினரையே தரக்குறைவாகத் திட்டியிருக்கிறார். செய்தியாளர்கள் சந்திப்பின் போது வெளிப்படையாகத் தான் இந்த அநாகரீகப் பேச்சைப் பேசியிருக்கிறார்.

சென்னை பத்திரிகையாளர் மன்றம் உள்ளிட்ட அமைப்புகள் ஹெச்.ராஜாவின் அத்துமீறலான இந்தப் பேச்சைக் கண்டித்திருக்கின்றன. ராஜா அப்படிப் பேசியதை நியாயப்படுத்தி ஊடகத்திலேயே சில பா.ஜ.க ஆதரவாளர்கள் பேசியிருக்கிறார்கள்.

தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலைக்கு, அதுவும் முன்னாள் காவல்துறை அதிகாரிக்கு. இத்தகைய பேச்சின் விபரீதம் தெரியாத ஒன்றல்ல. தேர்தல் நேரத்தில் அ.தி.மு.க.வுடன் கூட்டணியில் இருந்த பா.ம.க.வை விமர்சித்தார் என்கிற காரணத்திற்காக அ.தி.மு.க.வைச் சேர்ந்த புகழேந்தி மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு கட்சியை விட்டே அவர் நீக்கப்பட்டார்.

ஆனால் ஹெச்.ராஜா விஷயத்தில் பல முறை அத்துமீறி அவர் பேசியும், பா.ஜ.க தலைமை அதைக்  கண்டு கொள்ளாத மௌனத்துடன் தான் இதுவரை இருந்திருக்கிறது.

எந்தக் கண்டனத்தையும் கூட அது பதிவு செய்யவில்லை. அப்படி என்றால் ராஜாவின் பேச்சில் இருக்கும் அநாகரீகத்தை அது ஏற்றுக் கொள்கிறதா? ஏன் அவர் பேசுவதை மௌனமாக அது அனுமதிக்கிறது?

முன்பெல்லாம் ஊடகத்தினர் தங்களுக்கு எதிரான அநாகரீகமான விமர்சனங்களைத் தாங்கள் கூட்டாக இணைந்து எதிர்கொண்டிருக்கிறார்கள். கண்டித்திருக்கிறார்கள். மன்னிப்புக் கேட்க வைத்த நிகழ்வெல்லாம் கூட நடந்திருக்கின்றன.

அநாகரீகமாக நடந்து கொண்டவரை ஊடகத்தினர் தொடர்ந்து புறக்கணிப்போம் என்பதைச் செயலில் காட்டியிருக்கிறார்கள்.

தற்போது யாரோ ஒரு ‘அட்மின்’ மீதோ, தொழில் நுட்பம் மீதோ ஹெச்.ராஜா பழி போட முடியாது. ஒட்டுமொத்த ஊடகத்தினரைப் பச்சையாகப் பொதுவெளியில் வெளிப்படையாகத் திட்டியிருக்கிறார்.

திராவிட இயக்கத் தலைவர்களைப் பிறாண்டி, நீதித்துறையினரைப் பிறாண்டித் தற்போது ஊடகத்தினரைப் பிறாண்டியிருக்கிறார்.

எந்தக் கட்சியில் என்ன பொறுப்பில் இருந்தாலும், குறளின் படி யாகாவாராயினும் நாவைக் காக்க வேண்டும். மீறினால் கண்டிக்கப்பட வேண்டும். சொல் இழுக்குப் பட வேண்டும்.

மன்னிப்புக் கேட்கவில்லை என்றால் ஒட்டுமொத்த ஊடகமும் பேசிய நபரை மொத்தமாகப் புறக்கணிக்க வேண்டும்.

*

– யூகி

Comments (0)
Add Comment