தமிழகத்தில் ஊரக உள்ளாட்சித் தேர்தல்கள் 2019 டிசம்பரில் நடந்தன. அப்போது விடுபட்ட மற்றும் புதிதாக உருவாக்கப்பட்ட மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சித் தேர்தலை நடத்துவதற்கு, இந்தாண்டு செப்டம்பர் 15 வரை அவகாசம் அளித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
அதன்படி விடுபட்ட 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சித் தேர்தல் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், உள்ளாட்சித் தேர்தல்களை நடத்துவதற்கு அவகாசம் கேட்டு, தமிழகத் தேர்தல் ஆணையம் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டிருந்தது.
அண்மையில் இதை விசாரித்த தலைமை நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான அமர்வு, “ஒன்பது மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளதால், அங்கு தேர்தல் நடத்த அவகாசம் கேட்பது பொருந்தாது” எனக் கூறியது.
அதே நேரத்தில் நகர்ப்புற உள்ளாட்சிகளுக்குத் தேர்தல் நடத்த ஏழு மாதம் அவகாசம் கேட்டுள்ளதை ஏற்க முடியாது என்றும் கூறியிருந்தது. இந்த வழக்கு தற்போது மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது, “நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை நடத்த எவ்வளவு நாட்கள் அவகாசம் வேண்டும்” என தமிழகத் தேர்தல் ஆணையம் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் முகுல் ரோஹத்கியிடம், தலைமை நீதிபதி அமர்வு கேட்டது.
இதற்கு பதிலளித்த முகுல் ரோஹத்கி, “தமிழகத்தில் புதிதாக ஆறு மாநகராட்சிகளும், 28 நகராட்சிகளும் உருவாக்கப்பட்டுள்ளன. அவற்றில் தேர்தல் தொடர்பான நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.
அதனால் ஏழு மாதங்கள் அவகாசம் வேண்டும். 2022, ஏப்ரல் மாதத்துக்குள் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்களை நடத்தி முடிப்போம்” எனக் கூறினார்.
இதன்பின் நீதிபதிகள் பிறபித்த உத்தரவில், “நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்கள் நடத்த ஏழு மாதம் அவகாசம் கேட்பதற்காக கூறியுள்ள காரணம், ரொம்ப அற்பமாக உள்ளது. உங்களுக்கு நான்கு மாதங்கள் அவகாசம் வழங்குகிறோம்; அதற்குள் தேர்தல் நடத்த வேண்டும்” எனக் கூறினா்.