இன்று பகத் சிங்கின் பிறந்தநாள். தேசபக்திக்கு பெயர்போனவர் பகத் சிங். சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டதற்காக ஆங்கிலேய அரசு அவருக்கு தூக்கு தண்டனை விதித்தது.
அப்போதும் கலங்காமல் அதை மகிழ்ச்சியுடன் ஏற்று, இறப்புக்கு பிறகு மீண்டும் இந்தியராக பிறந்து நாட்டுக்காக உழைக்க விரும்புவதாக முழங்கியவர் பகத் சிங்.
அவரது பிறந்த நாளை முன்னிட்டு நாட்டின் பல்வேறு மாநிலங்களிலும், அவரை நினைவுகூறும் வகையில் நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஆனால் இந்தக் கொண்டாட்டங்களுக்கெலாம் உச்சமாக பள்ளி மாணவர்களுக்காக ‘தேசபக்தி’ என்ற புதிய பாடத்தை இன்றுமுதல் தொடங்கியுள்ளது டெல்லி அரசு. இதன்மூலம் இனி தினமும் தேசபத்தி தொடர்பான வகுப்புகளும் டெல்லியில் உள்ள பள்ளிகளில் நடத்தப்பட உள்ளன.
கடந்த 2019-ம் ஆண்டு நடந்த சுதந்திர தின விழாவிலேயே இந்த புதிய பாடத்திட்டத்தை தொடங்கப் போவதாக டெல்லி முதல்வர் கேஜ்ரிவால் அறிவித்திருந்தார்.
இதைத்தொடர்ந்து இதற்கான பாடத் திட்டங்களைத் தயார் செய்யும் பணிகள் நடந்து வந்தன.
அப்பணிகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து ‘தேச பக்தி’க்கு பெயர் பெற்றவரான பகத்சிங்கின் 114-வது பிறந்த நாளில் இந்த பாடத்திட்டம் டெல்லியில் உள்ள பள்ளிகளில் இன்றுமுதல் அமலுக்கு வருகிறது.
8-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் இந்த வகுப்புகள் நடத்தப்பட உள்ளன.
அதே நேரத்தில் 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு வாரம் இருமுறை இந்த வகுப்புகள் நடத்தப்பட உள்ளன.
இந்தப் புதிய பாடத்திட்டத்தைப் பற்றி கருத்து தெரிவித்துள்ள டெல்லி முதல்வர் கேஜ்ரிவால்,
“நம் நாட்டின் வரலாற்றை மட்டும் படிக்காமல், சுதந்திரத்துக்காக போராடிய தலைவர்கள், அவர்கள் செய்த தியாகங்கள், அவர்களின் கனவுகள் ஆகியவற்றைப் பற்றியும் நம் மாணவர்கள் தெரிந்துகொள்ள வேண்டும். அப்போதுதான் அவர்களுக்கும் தேசபக்தி வரும்.
இதன்மூலம் நாட்டின் மீது பற்றுகொண்ட ஒரு சிறப்பான இளம் தலைமுறையை நம்மால் உருவாக்க முடியும்” என்கிறார்.
புதிய பாடம் என்றதும் மாணவர்களுக்கு மேலும் ஒரு சுமையா, இதிலும் அவர்கள் மதிப்பெண் வாங்க வேண்டுமா என்ற கேள்வி பலருக்கும் எழலாம். ஆனால் அதற்கும் டெல்லி அரசு ஒரு பதிலை வைத்துள்ளது.
இந்த பாடத்திட்டத்தில் பள்ளிகளில் வகுப்புகள் நடத்தப்பட்டாலும், மாணவர்கள் அதில் தேர்வு எழுதத் தேவையில்லை. தேர்வு இல்லை என்பதால் இதற்கு மதிப்பெண்களும் இல்லை.
இந்த தேசபக்தி வகுப்புகள், முன்பு இருந்த ‘மாரல் சயின்ஸ்’ வகுப்புகளைப் போன்று மாணவர்களிடையே தேசபக்தியை ஏற்படுத்துவதை மட்டுமே நோக்கமாகக் கொண்டு செயல்படும்.
இந்த வகுப்புகளில் தேசத் தலைவர்களின் தியாகத்தைப் பற்றி சொல்வதுடன், நாட்டுக்காக நாம் செய்து முடிக்கவேண்டிய கடமைகளைப் பற்றியும் மாணவர்களுக்கு விளக்கமாக எடுத்துக் கூறப்பட உள்ளது.
இது மட்டுமின்றி மாணவர்களுக்கு ராணுவத்தில் சேருவதற்கான கவுன்சிலிங்குகளையும் பள்ளிகளில் நடத்த டெல்லி அரசு திட்டமிட்டுள்ளது.
பகத் சிங்கின் பிறந்தநாளன்று டெல்லி அரசால் தொடங்கப்படும் இந்த நல்ல திட்டம், நாடெங்கும் உள்ள பள்ளிகளுக்கு பரவினால் வளமான, தேசபக்தியுள்ள, துடிப்பான ஒரு சமுதாயத்தை உருவாக்கலாம்.