உலகின் இயல்பு திரும்ப சுற்றுலா செல்வோம்!

செப்டம்பர் 27: உலக சுற்றுலா தினம்

ஏதேனும் ஒரு இடத்தில் இருப்பதைவிட, கொஞ்சமாய் காலாற நடந்து சென்று வருவது எப்போதும் இதமளிக்கும். உடலுக்கு மட்டுமல்ல, உள்ளத்துக்கும் அது உற்சாகம் தரும்.

சுற்றுதலும் காணுதலும் இச்செயல்பாட்டின் மையங்கள். சுற்றுலா எனும் சொல்லின் பின்னாலும் இவையே இருக்கின்றன.

பயணம் சென்று வருவது, சம்பந்தப்பட்ட மனிதரின் எண்ணங்களிலும் செயல்பாடுகளிலும் அது ஏதேனும் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கும்.

குடும்ப உறுப்பினர்கள், உறவினர்கள், நண்பர்கள் சார்ந்ததாக மட்டுமல்லாமல் ஏதேனும் ஒரு அமைப்பு சார்ந்ததாகவோ அல்லது அலுவல் சார்ந்ததாகவோ கூட அச்சுற்றுலா இருக்கலாம்.

களிப்பை மையப்படுத்திய நம் கலாசாரத்தில், ஊர் சுற்றுதலுக்கு எப்போதும் குறைவான இடமே அளிக்கப்பட்டுள்ளது.

வேறுபட்ட சுற்றுலாத்தலங்கள்

தினசரி வாழ்க்கை ஒரேமாதிரியாக இருக்கும்போது, அதிலிருந்து விடுபட விழாக்களும் வைபவங்களும் ஓரளவுக்கு உதவுகின்றன. அதையும் தாண்டி, மனிதர்க்குப் புத்துணர்வு தருவது பயணங்கள்தாம்.

தனியாகப் பயணம் செய்வது ஒரு வகை அனுபவம் என்றால், கூட்டாகச் சேர்ந்து பிரயாணிப்பது வேறொரு வகை.

இம்மாதிரியான சுற்றுலாக்களில் காணுதல், ஊர் சுற்றுதலோடு, சக மனிதரோடு பழகுதலும் எளிதாகும்; புதிய விஷயங்களையும் புதிய மனிதர்களையும் தெரிந்துகொள்ளுதல் மனதின் பரப்பை மேலும் விரிவாக்கும்.

உண்மையில், இந்த இடத்திற்குத்தான் சுற்றுலா செல்ல வேண்டுமென்று எந்த வரையறையும் கிடையாது. உயர்ந்த மலை, அடர்ந்த காடு, ஆளரவமற்ற பாலைவனம், நிறைந்து நிற்கும் நீர்ப்பரப்பு என்று எதையும் ரசிக்கலாம்.

இயற்கை மட்டுமல்லாமல் நம் முன்னோர்கள் உருவாக்கிய குகை ஓவியங்கள் தொடங்கி சிற்பக் கலை, கட்டடக் கலை, கலாசார மற்றும் பாரம்பரிய நினைவிடங்கள் என்று பலவற்றைக் கண்டுகளிக்கலாம்.

காஷ்மீரில் உள்ள லே, அமர்நாத், ஸ்ரீநகர் தொடங்கி தமிழ்நாட்டின் கன்னியாகுமரி வரை, இந்தியாவில் ஏராளமான சுற்றுலாத் தலங்கள் உள்ளன.

மதம் சார்ந்த, கலாசார பாரம்பரியம் சார்ந்த, கண்டுபிடிப்புகள் சார்ந்த, இயற்கையான வினோதம் சார்ந்த இடங்களும் இதில் அடக்கம்.

ஒரு நாட்டின் வானிலை, பூகோள அமைப்பு, மக்களின் கலாசாரம், அங்குள்ள மரபு, தொல்லியல் எச்சங்கள் என்று பல அம்சங்களைச் சார்ந்து மக்கள் சுற்றுலா செல்கின்றனர்.

ஐரோப்பா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் கிழக்காசிய நாடுகளில் இருந்து இந்தியாவுக்குப் பலர் சுற்றுலா வருவதற்கும் இவையே காரணங்களாக இருக்கின்றன.

பூமத்திய ரேகைக்கு அருகே அதீத வெப்பத்தால் வதங்கி சுருண்டு குளிர்பிரதேசத்தை நோக்கி ஒருசிலர் பயணிக்க, ஆர்ட்டிக் பிரதேசத்தின் குளிர்ச்சூழலில் இருந்து வெளியேறி இந்தியா போன்ற நாடுகளில் வெப்பக்காற்றை உள்வாங்க விரும்புபவர்கள் இன்னொரு பக்கம் சுற்றுலாவை அனுபவித்துக் கொண்டிருக்கின்றனர்.

சுத்திப் பார்க்கலாமா!

புகழ்பெற்ற சுற்றுலாத் தலங்கள் மட்டுமல்லாமல், வழக்கத்திற்கு மாறான அல்லது அதிகம் பேர் அறிந்திராத, குறிப்பிடத்தக்க இடங்களைக் கண்டறியும் முயற்சியில் ஈடுபடுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது.

எங்கு சென்றாலும், அதைச் சுற்றி சுற்றுலா தலங்கள் இருக்கின்றனவா என்று தேடும் வழக்கம் இதனால் பெருகியிருக்கிறது. உள்ளூர் மக்கள் மட்டுமல்லாமல், வெளியூரைச் சேர்ந்தவர்களும்கூட சம்பந்தப்பட்ட இடத்தின் பெருமைகளை அறிந்துகொள்ள இது வழிவகுக்கிறது.

உணவு, உடை தொடங்கி அங்கு பின்பற்றப்படும் அனைத்து விஷயங்களும் நமக்குத் தெரிய வருகிறது.

பிளாக்கில் எழுதுவது, யூடியூபில் பதிவிடுவது போன்றவற்றினால் வெளிநாட்டவர்கள் மட்டுமல்லாமல் இந்தியாவிலும் இவ்வழக்கம் அதிகமாயிருக்கிறது.

ஏதேனும் ஓரு இடம் சுற்றுலாதலமாக அறியப்படும்போது, அதன் பொருளாதாரமும் அங்குள்ள மக்களின் வாழ்க்கைமுறையும் கூட மாறிப் போகின்றன. அது பெரிதாகும்போது, உலகப்பந்தில் முக்கியமானதொரு இடத்தைப் பிடிக்கிறது.

சுற்றுலா வளர்ச்சியை மட்டுமே சார்ந்திருக்கும் நாடுகள் பல உண்டு.

சுற்றுலா வளர்ச்சியை மேம்படுத்தவும், சுற்றுலா செல்லும் விழிப்புணர்வை ஏற்படுத்தவும், 1980ஆம் ஆண்டுமுதல் செப்டம்பர் 27 அன்று ‘உலக சுற்றுலா தினம்’ கடைபிடிக்கப்படுகிறது.

இத்தினத்தில்தான் ஐக்கியநாடுகள் உலக சுற்றுலா அமைப்பின் சட்டங்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன. ஒவ்வொரு ஆண்டும் உலக சுற்றுலா தினத்தை ஏதேனும் ஒரு நாடு செயல்படுத்துவது வழக்கம்.

இந்த ஆண்டு, ஆப்பிரிக்க கண்டத்திலுள்ள கொட்டே டி ஐவோரே (côte d’ivoire) இத்தினத்தைக் கொண்டாடுகிறது.

கொரோனா காரணமாக, கடந்த இரண்டு ஆண்டுகளாக உலகம் முழுக்க சுற்றுலா துறை சரிவைச் சந்தித்திருக்கிறது.

2019ஐக்  காட்டிலும் 2020ஆம் ஆண்டு முற்றிலுமாக சுற்றுலா செல்பவர்களின் எண்ணிக்கை குறைந்தது. அதிலிருந்து மீள்வதற்கான நடவடிக்கைகள் உலகம் முழுக்க மேற்கொள்ளப்படுகின்றன.

இதற்கேற்ப, இந்த ஆண்டின் சுற்றுலா தின முழக்கமாக ‘அனைத்தையும் உள்ளடக்கிய வளர்ச்சிக்கான சுற்றுலா’ பின்பற்றப்படுகிறது. உலகம் முழுக்க சுற்றுலாவைச் சார்ந்திருப்பவர்களுக்கு எந்த வழியிலாவது உதவ வேண்டுமென்பதே இந்த நோக்கத்தின் பின்னிருக்கிறது.

என்ன செய்யலாம்?

உலகம் முழுக்க கொரோனா தடுப்பூசி செலுத்தும் செயல்பாடு அதிவேகமாக நடந்து வருகிறது. இதனால், நோய்த்தொற்று கட்டுப்பாடுகளில் பெருமளவு தளர்வும் கடைப்பிடிக்கப்படுகிறது.

நோய்த்தாக்கத்தின் பிடியிலிருந்து மீள முடியுமென்கிற நம்பிக்கை அதிகமாயிருப்பதால், பயணம் மேற்கொள்பவர்களின் எண்ணிக்கையும் தொடர்ச்சியாக அதிகரித்து வருகிறது.

வட பகுதியில் இருப்பவர்கள் இந்த காலத்தில்தான் தான் அதிகம் சுற்றுலா செல்வதை வழக்கமாகக் கொண்டிருக்கின்றனர்.

தென்பகுதியிலோ, இதுதான் அதற்கான தொடக்க காலம். இந்தியாவைப் பொறுத்தமட்டில் ஆகஸ்ட் தொடங்கி ஜனவரி வரை தொடர்ச்சியாகப் பல விழாக்கள் கொண்டாடப்படுகின்றன.

அதனால், அவை சார்ந்து சுற்றுலா  செல்லத் திட்டமிடுபவர்களின் எண்ணிக்கையும் அதிகம்.

கொரோனா பயத்திலிருந்து மெல்ல விடுபட்டுவரும் நிலையில், மீண்டும் நமது பொருளாதார வளத்தை மீட்டெடுக்க வேண்டிய கட்டாயம் நிலவுகிறது. அதை மனதில் வைத்தாவது, மனதில் மிச்சமிருக்கும் பயங்களை உதறிவிட்டு இயல்பு வாழ்க்கைக்குத் திரும்ப வேண்டும்.

அதற்கான உடல் மற்றும் மன பலம் இல்லையென்று தோன்றினால், அதைக் கைக்கொள்வதற்கான வழிகளைத் தேட வேண்டும். சுற்றுலா செல்வதும் அப்படியொரு தீர்வுதான்.

வாருங்கள், சுற்றுலா செல்வோம்; சுற்றுலாவை நம்பியிருப்பவர்களின் வாழ்வை மேம்படுத்தி, நம்மையும் திடப்படுத்திக் கொள்வோம்!

-உதய் பாடகலிங்கம்

Comments (0)
Add Comment