புறநானூற்றுப் பாடல் குறும்படமாக!

தொழிலதிபரும் திரைப்பட தயாரிப்பாளருமான கார்த்திகேயன் மணி, 2000 ஆண்டுகள் பழமையான தமிழ்க் கவிதையை அடிப்படையாகக் கொண்டு குறும்படம் எடுத்திருக்கிறார்.

‘புறம்’ எனப்பெயரிடப்பட்ட இந்தக் குறும்படம், சங்க காலப் பெண் கவிஞர் ஒக்கூர் மாசாத்தியார்  2,000 ஆண்டுகளுக்கு முன்பு எழுதிய தொன்மையான தமிழ்க் கவிதையை கதைக்களமாகக் கொண்டது.

போரில் கணவனை இழந்த ஒரு விதவைத் தாய், தன்னுடைய ஒரே மகனை அடுத்த போரில் அவனைப் பங்கேற்க வைக்கத் தயார் செய்கிறாள். புறநானூற்றின் 279 வது பாடலை அடிப்படையாகக் கொண்டு இந்த ‘புறம்’ குறும்படம் உருவாக்கப்பட்டுள்ளது. 23 நிமிடங்கள் ஓடக்கூடியது.

இந்தக் குறும்படம் உருவாவதற்கு எது உந்துசக்தியாக இருந்தது என்பது பற்றிப் பேசிய இயக்குநர் கார்த்திகேயன் மணி, “இந்தக் குறிப்பிட்ட கவிதையை நான் ஏன் தேர்ந்தெடுத்தேன் என்றால் கவிதையில் வெளிப்படுத்தப்பட்டுள்ள பொருள்நயம் மிகவும் அற்புதமானவை. நமது சமகால சமூகத்திற்கு மாறாக உள்ளவை.

அந்தக் காலகட்டத்தில் இருந்த சமூக மதிப்புகளையும், அப்போது சமூகம் எப்படி இருந்தது என்பதையும் இந்தக் காட்டியுள்ளேன்.

சங்க இலக்கியத்தில் அற்புதமான, ஊக்கமளிக்கும் மற்றும் வித்தியாசமான கதைகள் இருப்பதை உணர்ந்து,  நம் வரலாற்றை ஒரு சமகால கலை வடிவத்திற்கு கொண்டு வருவதற்கான நேரம் வந்துவிட்டது என்பதையும் உணர்ந்ததால் தான் இந்தப் படம் எடுக்க முடிவெடுத்தேன்.

நான் ஒரு தமிழனாக இருந்தாலும், இதுபோன்ற கதைகள் / கவிதைகள் இருப்பதை இப்போது தான் நான் உணர்ந்து கொண்டேன்.

இந்தப் படத்தை எடுத்து முடிக்க கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகள் பிடித்தன. சங்க இலக்கியம் பற்றிய நிறைய வாசிப்பு இருந்தது.

அது தொடர்பாக ஆராய்ச்சி செய்தும், அதோடு சிறந்த புரிதலைப் பெற அறிஞர்களிடம் பேசிய பிறகே இந்தப் பணியில் இறங்கினேன்.

இந்தக் குறும்படத்தில் அப்போதிருந்த மக்கள் எப்படித் தமிழ்ப் பேசினார்கள் என்பதைக் காட்ட நாங்கள் எங்களால் முடிந்தவரை முயற்சித்துள்ளோம்.

இதில் இடம்பெற்றுள்ள  தமிழ்-பிராமி ஸ்கிரிப்டை எந்தத் தமிழ் படமும் முன்னதாகக் குறிப்பிடவில்லை என்று நான் நினைக்கிறேன். நாங்கள் அதைச் செய்துள்ளோம்” என்று நெகிழ்ச்சியோடு கூறினார்.

Comments (0)
Add Comment