காலிஸ்தான் பூமியில் காங்கிரசை வீழ்த்தும் கேப்டன்!

இந்தியாவில் வயது முதிர்ந்த கட்சி காங்கிரஸ். பேச்சிலும், எழுத்திலும் ஜனநாயகம் உள்ள கட்சி.
இதனால் மூத்தத் தலைவர்களிடையே முரண்பாடு ஏற்பட்டு, அவ்வப்போது பிளவு பட்டதுண்டு.

இந்திரா காந்தி இருந்தபோது, அவருக்கு எதிராக காமராஜர் உள்ளிட்ட பெரும் தலைவர்கள் போர்க்கொடி தூக்கியதால், தேசிய அளவில் காங்கிரஸ் துண்டானது. நாளடைவில் அதனை சரி செய்தார் இந்திரா.

ராஜீவ்காந்தி காலத்தில், வி.பி.சிங் கலகம் செய்து, காங்கிரசில் இருந்து சில தலைகளை இழுத்துச் சென்று தனிக்கட்சி ஆரம்பித்தார். பிரதமராகவும் உயர்ந்தார்.

கொஞ்ச நாட்களில் வி.பி.சிங் பதவி இழந்தார். அவரது கட்சியும் காணாமல் போனது. தேசிய அளவில் அப்போதும் காங்கிரசுக்கு சேதாரம் ஏதும் ஏற்படவில்லை.

இந்திராவும், ராஜீவும் வசீகரமிக்க மக்களை ஈர்க்கும் தலைவர்களாக இருந்ததே இதற்கு பிரதான காரணம்.

நேரு குடும்பத்தில் இருந்து காங்கிரஸ் கட்சியின் நான்காம் கட்டத் தலைவராக சோனியா பதவி ஏற்ற பின், பல பிளவுகளைச் சந்தித்து வருகிறது. ஆனால், அதனை சோனியாவால் சரி செய்ய முடியவில்லை.

ஒவ்வொரு மாநிலத்திலும் உடைந்து நொறுங்கும் காங்கிரஸ், மக்களவையில் எதிர்க்கட்சி அந்தஸ்தை கூட பெற முடியாத அளவுக்கு வீழ்ந்து விட்டது.

முதல் காரணம் – சோனியாவிடம் அரசியல் அனுபவம் இல்லை. இரண்டாம் காரணம் – இந்திரா, ராஜீவ் ஆகியோருக்கு இருந்தது போல், ஆலோசகர்கள் இல்லை.

மேற்குவங்கத்தில் இருந்து வீழ்ச்சி ஆரம்பமானது. அந்த மாநிலத்தில் செல்வாக்கு மிக்கத் தலைவராக திகழ்ந்த மம்தா பானர்ஜியை மேலிடம் கண்டு கொள்ளாததால் காங்கிரசை உடைத்தார்.

திரினாமூல் காங்கிரஸ் என்ற தனிக்கட்சி தொடங்கினார். முதல்வர் ஆகி விட்டார். அந்த மாநிலத்தில் காங்கிரஸ் துடைத்து எறியப்பட்டு விட்டது. அண்மையில் நடந்த சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு ஒரு சீட் கூட கிடைக்கவில்லை.

அடுத்ததாக ஆந்திரா.
அந்த மாநிலத்தில் காங்கிரசைக் கட்டிக் காத்த ராஜசேகர ரெட்டி ஹெலிகாப்டர் விபத்தில் மரணித்தார்.

அவரது மகன் ஜெகன் மோகனைப் புறக்கணித்து, மக்கள் செல்வாக்கு இல்லாதவர்களை முதல்வர் பதவியில் அமர்த்தியது காங்கிரஸ் தலைமை.
விளைவு? ஒய்.எஸ் ஆர். காங்கிரஸ் என்ற பெயரில் தனிக்கடை விரித்தார் ஜெகன் மோகன் ரெட்டி.

அப்பாவின் செல்வாக்கு அவருக்கு உதவியது. முதல்வரானார். அங்கும் காங்கிரஸ் காலி.
எதிர்க்கட்சியாக சந்திரபாபு நாயுடுவும், மூன்றாவது இடத்தில் பாஜகவும் உள்ளன.

புதுச்சேரியிலும் அதே கதை. நான்கு மாதங்களுக்கு முன்பு ஆளும் கட்சியாக இருந்த காங்கிரஸ், கடந்த சட்டசபைத் தேர்தலில் இரண்டு இடங்களில் மட்டும் ஜெயிக்கிறது. எதிர்க்கட்சி அந்தஸ்தை கூட பெற முடியவில்லை.

வீழ்த்தியது வேறு யாருமல்ல காங்கிரசில் இருந்த ரங்கசாமி தான்.

இன்னும் நான்கு மாதங்களில் சட்டசபைத் தேர்தலைச் சந்திக்க போகும் பஞ்சாப் மாநிலத்திலும், காங்கிரஸ் வீழ்ச்சி தொடர்கதையாகும் சூழல். காரணம் சோனியா, ராகுல், பிரியங்கா ஆகிய மூவரும் தான்.

இந்தியாவில் காங்கிரஸ் வலிமையாக உள்ள நான்கைந்து மாநிலங்களில் பஞ்சாபும் ஒன்று.
அங்கு முதல்வராக இருந்த கேப்டன் அமரீந்தர் சிங்குக்கு தேவையில்லாத குடைச்சலைக் கொடுத்து, அவரை வீட்டுக்கு அனுப்பிவிட்டது காங்கிரஸ் மேலிடம்.
(மேலிடம் என்றால் நேரு குடும்பம் தான்)

அமரீந்தர் சிங் மக்கள் மத்தியில் செல்வாக்கு மிக்கவர். கடந்த மக்களவைத் தேர்தலில் தனது மாநிலத்தில் இருந்து திரளான எம்.பி.க்களை ஜெயிக்க வைத்தவர்.

அவருக்குப் போட்டியாக கிரிக்கெட் வீரர் சித்துவுக்கு கொம்பு சீவி விட்டு, அமரீந்தரை காலி செய்தது காங்கிரஸ்.

அவர், ’’பஞ்சாபில் காங்கிரசை காலி செய்யாமல் ஓய மாட்டேன்’’ என சங்கல்பம் செய்து, தனிக்கடை விரிக்கத் தயாராகி விட்டார்.

உ.பி. எம்.பி.தொகுதியில் வெற்றிபெற முடியாத ராகுல், தன்னை உதாசீனப்படுதியதை அவரால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.

அதனால் தான் ‘’ராகுலுக்கு அனுபவம் இல்லை. ராகுல் ஆலோசகர்கள் அவரை தவறாக வழி நடத்துகிறார்கள்‘’ என பகிரங்கமாகவே குற்றம் சாட்டினார் அமரீந்தர் சிங்.

தனிக்கட்சி தொடங்குவது குறித்து அமரீந்தர், தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.

அவர் ஜெயிப்பாரா? என்பது நிச்சயம் தெரியவில்லை. ஆனால் காங்கிரசை ஜெயிக்க விடமாட்டார்.

ஆண்டுக்கு ஒரு மாநிலத்தை இழந்து வரும் காங்கிரஸ், அடுத்த ஆண்டு ஆரம்பத்தில் தேர்தல் நடக்கும் பஞ்சாபில் ஆட்சியை இழப்பது உறுதி என்றே அரசியல் நோக்கர்கள் சொல்கிறார்கள்.

2019 ஆம் ஆண்டு ஜுலை மாதம் கர்நாடகத்தில் ஆட்சியை இழந்தது. 2020 மார்ச் மாதம் மத்திய பிரதேசத்தில் ஆட்சியை பறி கொடுத்தது. கடைசியாக கடந்த மே மாதம் புதுச்சேரியில் வீழ்ந்தது.

எஞ்சி இருக்கும் ஒரே மாநிலம் சத்தீஸ்கர் மட்டுமே.

எப்படி இருந்த காங்கிரஸ் இப்படி ஆயிற்றே!

-பி. எம்.எம்.

Comments (0)
Add Comment