இந்தியாவில் ‘பாகுபலி’ படத்துக்குப் பிறகு, பான் இந்தியா படங்கள் அதிகரித்துள்ளன. அதாவது ஒரே நேரத்தில் மூன்றுக்கும் மேற்பட்ட மொழிகளில் படங்களைத் தயாரிப்பது அதிகரித்திருக்கிறது. யஷ் நடிக்கும் ‘கே.ஜி.எஃப்: சாப்டர் 2’, ராஜமவுலியின் ‘ஆர்ஆர்ஆர்’, பிரபாஸின் ‘ராதே ஷ்யாம்’, ‘ஆதிபுருஷ்’, அல்லு அர்ஜூனின் ‘புஷ்பா’, துல்கர் சல்மானின் ‘குரூப்’ உட்பட பல படங்கள் வரிசையில் இருக்கின்றன பான் இந்தியா என்ற பெயரில்.
ஆனால், அந்த காலத்திலேயே மூன்று மொழிகளில் படத்தை உருவாக்கி ஒரே நாளில் வெளியிட்ட பெருமையை பெற்றவர் நடிகை பானுமதி. தமிழ் சினிமாவின் மறக்க முடியாத ஆளுமை அவர். நடிகை, இயக்குநர், பாடகி, தயாரிப்பாளர், நாவல் எழுத்தாளர், பாடலாசிரியை, இசை அமைப்பாளர் என பல அவதாரங்கள் எடுத்தவர். பல திறமைகளைத் தன்னகத்தே கொண்ட அவர், தமிழ், தெலுங்கு சினிமாவில் பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்தவர்.
இந்தியாவில் முதன் முதலில் இரட்டை வேடத்தில் நடித்த நாயகியும் அவர்தான். அவர் கதை எழுதி இயக்கி, தனது பரணி ஸ்டூடியோ சார்பில் தயாரித்த படம் சண்டிராணி. 1953 ஆம் ஆண்டு வெளியான இந்தப் படத்தில் பானுமதி இரண்டு வேடத்தில் நடித்திருக்கிறார். என்.டி.ராமாராவ், எஸ்.வி.ரங்காராவ், நாகேஸ்வரராவ், ஹேமலதா உட்பட பலர் நடித்திருந்தனர். சி.ஆர்.சுப்புராமனும் எம்.எஸ்.விஸ்வநாதனும் இணைந்து இசை அமைத்திருந்தனர்.
இந்தப் படத்தின் வாள் சண்டைக்காட்சிகளும் புலியுடனான சண்டைக் காட்சியும் அப்போது பரபரப்பாகப் பேசப்பட்டன. அந்தக் காலகட்டத்தில் ஒரு மொழியில் படத்தை எடுத்து ரிலீஸ் செய்துவிட்டுதான் மற்ற மொழியில் அதை டப் செய்வார்கள். அல்லது காட்சிகள் சிலவற்றை அந்த மொழி நடிகர்களை நடிக்க வைத்து ரீஷூட் செய்து சில மாதங்கள் கழித்து வெளியிடுவது வழக்கம்.
ஆனால் எல்லாவற்றிலும் புதுமையை செய்யும் பானுமதி, ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளிலும் உருவாக்கி, ஒரே நேரத்தில் ரிலீஸ் செய்தார் ‘சண்டிராணி’படத்தை.
இது அந்தக் காலகட்டத்தில் பரபரப்பாகப் பேசப்பட்ட விஷயம். அதோடு இதைச் செய்த பெண் இயக்குநர் என்ற பெருமையும் நடிகை பானுமதிக்கு உண்டு. இந்த படம் ரிலீஸ் ஆன நேரத்தில் பானுமதிக்கு வயது 28-தான் என்பது குறிப்பிடத்தக்கது.
-அலாவுதீன்