நாய் எனும் நண்பன்…!

ஆடு, மாடு, பூனை என்று வீட்டு விலங்குகள் பல இருந்தாலும், அவற்றில் மனிதரின் மனதுக்கு நெருக்கமாக இருப்பது நாய்தான். ஒரு வீட்டில் நாய் வளர்க்கப்படும்போது, அங்குள்ள குழந்தைகளுக்கு இணையான இடத்தைப் பெறுவது இயல்பு.

குழந்தைகளைப் போலவே நாய்களை அதட்டுவதும் அரவணைப்பதும் நம் குடும்பங்களில் வெகு சாதாரண விஷயம்.

வெறுமனே பாதுகாப்பு எனும் நோக்கத்துக்காக வளர்ப்பவர்களிடம், இதனை எதிர்பார்க்க முடியாது. ஆனால், நாய்களை சக உயிராகப் பார்ப்பவர்களின் எண்ணிக்கை மிக அதிகம் என்பதால் அவர்களைப் புறந்தள்ளிவிடலாம்.

இங்கு, ஒவ்வொருரிடமும் நாய்கள் குறித்த பல கதைகள் இருக்கும். வீட்டில் நாய் வளர்த்திராதவர்கள் கூட, தன்னிடம் வாலாட்டி வளைய வந்தனவற்றின் நினைவுகளைச் சுமந்து நிற்பார்கள்.

நாய்கள், நம்மிடம் இருக்கும் கருணையையும் இரக்கத்தையும் இன்னபிற நற்குணங்களையும் நமக்கே தெரிய வைக்கும் உயிர்கள் என்றால் அது மிகையல்ல.

நாய்க்குணம் போல் வருமா?

தன்னை வளர்ப்பவர்கள் என்ன சொன்னாலும் கேட்பது நாய்களின் இயல்பு. நாம் சொல்லும் சொற்களில் 1,000க்கு மேற்பட்டவை நாய்களுக்குப் புரியும் என்கின்றனர் விலங்கியல் ஆராய்ச்சியாளர்கள்.

கிட்டத்தட்ட 2 வயது குழந்தைக்கு என்னென்ன புரியுமோ, அதெல்லாமே நாய்களுக்கும் புரியும்.

சுருக்கமாகச் சொன்னால், நான்கைந்து முறை திரும்பத் திரும்பச் சொன்னால் கப்பென்று பிடித்துக் கொள்ளும்.

சிறு குழந்தைகளிடமும் பெரியவர்களிடமும் நாய்கள் ஒரே மாதிரியாகப் பழகாது. குழந்தைகளிடம் விளையாட்டு காட்டினாலும், வயதானவர்களிடம் பம்மி நிற்பது நாய்களின் வழக்கம்.

தன்னை வளர்ப்பவர்களையும் வளரும் இடத்தையும் காப்பதென்பது நாய்களின் மரபணுக்களில் ஊறிய விஷயம்.

விசுவாசம் என்று நாம் அதற்குப் பெயரிட்டாலும், நாய்களைப் பொறுத்தவரை அது இயல்பான குணம். வீட்டு உரிமையாளரைக் கடவுளராகப் பாவிக்கும் நாய்கள் என்றால், கொல்ல வந்தால் கூட காலடியில் வாலாட்டி கண்களால் கொஞ்சும்.

அதே நேரத்தில், இன்னொரு நாயையோ, வேறொரு விலங்கையோ அல்லது குழந்தைகளையோ கொஞ்சினால், நாய்களிடம் பொறாமை பூக்கும் என்கின்றனர் ஆய்வாளர்கள்.

மிகச்சில நேரங்களில், தெரியாமல் மிதித்துவிட்டாலோ அல்லது சொற்களை உதிர்த்தாலோ, கோபத்தில் வள்ளென்று குரைக்கவும் செய்யும்.

இதனை மட்டும் மனதில் முன்னிறுத்தி, நம்மவர்கள் ‘நாப்பதுக்கு மேல் நாய்க்குணம்’ என்ற பழமொழியைப் படைத்துவிட்டார்கள்.

உண்மையில், நாயிடம் இருக்கும் குணங்கள் நமக்கு ஒருபோதும் கைவராது.

உலகம் முழுக்க 400க்கும் மேற்பட்ட நாய் இனங்கள் அங்கீகரிக்கப்பட்டவையாக உள்ளன. இவற்றில் தமிழ்நாட்டைச் சேர்ந்த கோம்பை, கன்னி, சிப்பிப்பாறை, ராஜபாளையம் உள்ளிட்ட சில நாட்டுநாய் ரகங்களும் உண்டு.

பெரும்பாலும் இவை வேட்டைக்காகப் பழக்கப்படுத்தப்படுகின்றன. இவற்றின் மோப்பசக்தியும் சூழ்நிலையைப் புரிந்துகொள்ளும் ஆற்றலும் கூர்மையான முடிவெடுக்கும் திறனும் அசாத்தியமானதாக இருக்கும்.

கிட்டத்தட்ட 14,000 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே நாய்கள் இந்த பூமியில் இருப்பதாகச் சொல்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள். அப்போது முதல் இந்த உலகில் மனிதர்களுக்கும் நாய்களுக்குமான உறவு பதிவு செய்யப்பட்டதென்றே, இதனைக் கருத வேண்டும்.

பேரு வச்சாலும்..!

குழந்தைப் பருவத்தில் நாய்களை வளர்த்துப் பழகிவிட்டால், அதன்பின் எந்த வயதிலும் நாய்களைக் கண்டு பயம் வராது. நாய் குரைத்தவுடனே முகம் வெளிறிப் போகும் மனிதர்களில் பலர், அதனை அந்நிய கிரகவாசியாகக் கருதுபவர்களாக இருப்பார்கள்.

நாய்களின் உடலில் இருந்து உதிரும் ரோமங்களும், அதில் மறைந்தோடும் உண்ணிகளும் அருவெருப்பு தருபவை. ஆனால், நாய்களை வளர்ப்பவர்களுக்கு அது ஒரு பிரச்சனையே இல்லை.

எனது பதினைந்தாவது வயதில் முதன்முதலாக எங்கள் வீட்டுக்குள் ஒரு நாய்க்குட்டி நுழைந்தது. அது எங்கள் வீட்டு தரையில் வாலை உரசிய கணம் ‘பரணி’ நட்சத்திரம் என்பதால் அதற்கு அப்பெயரையே வைத்தோம்.

வீட்டில் சைவ சாப்பாடு என்பதால், அதையே தின்றாக வேண்டிய கட்டாயம் பரணிக்கு. சில வேளைகளில் எங்கள் கண்ணில் மண்ணைத் தூவிவிட்டு, எங்கிருந்தாவது எலும்பைக் கவ்விக் கொண்டு வந்துவிடும்.

அம்மாவின் அர்ச்சனையையும் தாண்டி, அதைத் தின்பதா வேண்டாமா என்று பரணி முழிக்கும்போது திரைப்பட நகைச்சுவையெல்லாம் ஒரு அடி பின்னால் நிற்க வேண்டியிருக்கும்.

அது மட்டுமல்லாமல் முகத்தோடு முகம் வைத்து கொஞ்சுவது, தூங்கும்போது தோளில் கால் போடுவது, முக்கியமான வேலைகளில் கண்ணும் கருத்துமாக இருக்கும்போது உடலை உலுக்கி ரோமங்களை உதிர்ப்பது,

கோபப்பட்டு கத்தினால் பதிலுக்கு குரைத்து தன் எதிர்ப்பைப் பதிவு செய்வது என்றிருந்த பரணி காலம் இப்போதும் மனதில் மேலெழுகிறது.

அப்படிப்பட்ட நாட்களொன்றில், நாய்களின் சராசரி வயது 10-14 ஆண்டுகள் என்று கேள்வியுற்றபோது அறிவியலின் மீதே சந்தேகம் வந்தது. அது உண்மையென்று அறிந்தபோது மனம் துவண்டு போனது.

பரணிக்கு நாங்கள் பெயர் வைத்தது போல, புதிதாக எந்த நாயைப் பார்த்தாலும் அதன் பெயருக்குப் பின்னிருக்கும் காரணத்தை அறியும் வழக்கம் இன்றும் தொடர்கிறது.

‘டைகர்’ என்று பெயர் வைப்பதுபோல, சமயங்களில் சில முரணான பெயர்கள் நாய்களுக்குச் சூட்டப்பட்டதைக் கண்டு மனதுக்குள் புன்னகைத்ததும் உண்டு.

உண்மையைச் சொன்னால், பெயர் என்பது நாய்களுக்கு கூடுதல் அடையாளம்தான். ஒரேயொரு எழுத்தில் அழைத்தாலும், அதில் அன்பு கலந்திருக்க வேண்டும் என்பதே நாய்களின் எதிர்பார்ப்பு.

நாய் வளர்ப்பு என்பது கலை!

முற்காலத்தில் வீட்டையும் தோட்டத்தையும் காவல் காக்கவே பெரும்பாலும் நாய்கள் பயன்படுத்தப்பட்டன. அது தரும் பாதுகாப்பு கடுமையாக இருக்க வேண்டுமென்று விரும்பி, மனிதர்கள் மற்றும் விலங்குகளைக் கண்டாலே பாய்ந்தோடும் அளவுக்கு வேலிகளுக்குள் அடைத்து வளர்த்தெடுக்கின்றனர் சிலர்.

நாட்டு நாய்கள் தவிர்த்து, லேப்ரடார், ஜெர்மன் ஷெப்பர்டு தொடங்கி பல்வேறு நாயினங்கள் இன்று வீடுகளில் வளர்க்கப்படுகின்றன.

நமது தட்பவெப்ப நிலைக்குத் தகுந்தவையா இல்லையா என்பதைக் கூட கணக்கில் கொள்ளாமல் அலங்காரத்துக்காகவும் ஆடம்பரத்துக்காகவும் கூட சிலர் நாய்களை வளர்த்து வருகின்றனர்.

எந்நேரமும் ஏசி அறை, மெத்தை என்றிருக்கும் இந்நாய்கள் வெயிலைக் கண்டு கண்களைச் சுருக்கும்போது, நான்கு கால் கொண்ட சோம்பேறி மனிதரைப் பார்ப்பது போலிருக்கும்.

குறிப்பிட்ட வயதில் இவற்றின் அழகு குலையும்போது, அவ்வீட்டினரின் அன்பும் குறைவது உண்மையிலேயே சாபம்தான்.

விலைக்கு விற்கும் நோக்கில் கூட, சிலர் நாட்டு நாய்களையும் வெளிநாட்டு மற்றும் கலப்பின நாய்களையும் வளர்த்து வருகின்றனர்.

வீடுகளில் சாதாரணமாக வளர்ப்பவர்களும் கூட, அரிய வகை நாய் எனும்போது பெரும் விலைக்கு விற்பனை செய்வது இப்போது சகஜமாகிவிட்டது.

இதற்கு மாறாக, தெருவில் சுற்றித் திரியும் நாய்களைக் காப்பகங்களில் சேர்க்கவும், வீடுகளில் வளர்க்கவும் சிலர் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

தொற்றுநோய் பரவல் மற்றும் தட்பவெப்ப நிலை மாற்றத்தினால் ஏற்படும் பாதிப்புகளில் இருந்து நாய்களை நலமுடன் வைப்பதும் சவாலான பணிதான்.

காவல், ராணுவ மற்றும் இதர புலனாய்வுப் பிரிவுகளிலும் கூட நாட்டு நாய்களைவிட வெளிநாட்டு நாய் இனங்களுக்கே முக்கியத்துவம் கொடுக்கப்படுவதாகச் சொல்லப்படுகிறது.

அரசு சார்பில் இயங்கும் நாய் இனவிருத்தி மையங்களை திறம்படச் செயல்படுத்தினால், அருகிப்போகும் நாய் இனங்களைத் தடுக்க முடியும்.

“சுயநலமான இந்த உலகத்தில் மனிதர்க்கு துரோகம் இழைக்காத, தவிர்க்காத ஒரேயொரு சிறந்த நண்பன் நாய் மட்டுமே” என்று தன் வேட்டை நாய் பற்றி பெருமைப்படச் சொன்னாராம் ஜெர்மனியைச் சேர்ந்த மன்னர் பிரடெரிக்.

நம்மைச் சுற்றி வாழும் நாய்கள் நலமாக வாழவும், அவற்றோடு நட்புறவு பேணவும் முயல்வதே, நம்மைக் காக்கும் நாயினத்துக்கு நாம் செய்யும் நன்றிக்கடன் ஆக இருக்கும்!

Comments (0)
Add Comment