ரூ.1000, 1500: ஏலம் விடப்படும் வாக்காளர்களின் மதிப்பு!

ஏலம் விடுகிற மாதிரி இருக்கிறது இரு கட்சிகளின் வாக்குறுதிகளைப் பார்க்கிறபோது.

“மகளிருக்கு மாதம் 1000 ரூபாய் வழங்கப்படும்” என்று திருச்சி கூட்டத்தில் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்து அதன் அதிர்வு கூட அடங்கவில்லை.

அதற்குள் மகளிர் தினத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி “குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1500 வழங்கப்படும்” என்று அறிவித்ததுடன், ஒரு குடும்பத்திற்கு ஆண்டுக்கு 6 கேஸ் சிலிண்டர்கள் இலவசம் என்று அதிரடியாக அறிவித்துப் பரபரப்பைக் கிளப்பியிருக்கிறார்.

அறிவிப்புகளைக் கேட்கும் போது எல்லோருடைய மனதிலும் எழும் கேள்வி “எப்படி இந்த வாக்குறுதிகளை இவர்கள் நடைமுறைப் படுத்துவார்கள்? அதற்கான பணம் எங்கிருந்து கிடைக்கும்?” என்பது தான்.

இன்றைக்கு பெட்ரோல், டீசல் விலையும், கேஸ் சிலிண்டர் விலையும் ஏகத்துக்கும் உயர்ந்து கொண்டிருக்கும் நேரத்தில் மத்திய அரசிடம் குறைக்கச் சொல்லிக் குரல் கூடக் கொடுக்காதவர்கள், நாளைக்கு எப்படி 6 கேஸ் சிலிண்டர்களை இலவசமாக வழங்குவார்கள்?

‘கூரை ஏறி கோழி பிடிக்காத…’ என்ற நாட்டுப்புறப் பழிமொழி தான் சட்டென்று நினைவில் ஓடுகிறது.

இலவசப் பட்டியலில் நல்ல ‘கனத்தை’ச் சேர்த்திருக்கிறார்கள். என்பதைத் தவிர, அதற்கான என்ன நடைமுறைத் திட்டத்தை வைத்திருக்கிறார்கள்?

சட்டியில் இருந்தால் அல்லவா அகப்பையில் அள்ளி பரிமாற முடியும்?

ஏற்கனவே பயிர்க்கடன், மகளிர் சுய உதவிக் குழுக்களின் கடன் என்று சகலத்தையும் தேர்தல் ஜூரத்தில் தள்ளுபடி பண்ணியதில் எல்லாம் சுரண்டப்பட்டு, தமிழக அரசுக்கு ஏற்கனவே இருக்கும் கடன் தொகை எவ்வளவு  தெரியுமா?

4 லட்சத்து 56 ஆயிரத்து, 660 கோடி ரூபாய்.

இந்தக் கடன் தொகை அடுத்த நிதியாண்டில் ஐந்து லட்சம் கோடிக்கு மேல் உயர வாய்ப்பிருக்கிற நிலையில், எங்கிருந்து பண வருவாய் கிடைத்து, அறிவித்திருக்கிற திட்டங்களை எல்லாம் எப்படி நிறைவேற்றுவார்கள்?

இந்தத் திட்டங்களைக் கேட்கிற போது காதுக்குள் குளுகுளுவென்று கூட இருக்கலாம்.

ஆனால் தமிழகத்தில் இருக்கிற ஒவ்வொரு தமிழருக்கும் 73 ஆயிரம் ரூபாய் கடன் தலைச்சுமையாக இருக்கிறது. இந்தச் சுமையை மேலும், மேலும் தேர்தல் பரபரப்பில் ஏற்றினால் என்னவாகும்?

திருவள்ளுவர் சொன்ன மாதிரி ‘அச்சு’ முறிந்து போகும்.

ஏற்கனவே மத்திய அரசு மாநிலத்திற்குத் தர வேண்டிய பாக்கியும் வந்து சேரவில்லை. அதற்காகக் குரல் கொடுக்கவும் இங்கு ‘கூட்டணி பராக்கிரமத்தால்’ இயலவில்லை.

அரசு ஊழியர்கள் ஓய்வு பெற்றால், உடனே அவர்களுக்கான நிதியைக் கொடுக்க முடியாமல், ஓய்வு பெறும் வயதை 60 ஆக உயர்த்தியிருப்பவர்கள் நாளைக்கு ஆட்சிக்கு வந்தால், கொடுத்த வாக்குறுதிகளை எப்படிக் காப்பாற்றுவார்கள்?

பிரச்சாரம் செய்கிறவர்களிடம் நாளைக்கு நீங்கள் கேஸ் சிலிண்டர்களை இலவசமாகத் தருவதை விட, இன்றைக்கு எங்கள் வீட்டில் இருக்கிற சிலிண்டரின் விலையை முதலில் குறையுங்கள் என்று சொல்லிப் பாருங்களேன்.

இலவசம் குறித்துப் பேசுகிறவர்கள், சென்ற தேர்தலின் போது பேசி வந்த மதுவிலக்கு பற்றி இதுவரை வாய் திறக்கவே இல்லை.

இனி ஒருவேளை தேர்தல் அறிக்கையில் ஏதாவது சொல்கிறார்களா என்பதைப் பார்க்க வேண்டும்.

காரணம் டாஸ்மாக்கின் மூலம் தமிழக அரசுக்கு வந்து கொண்டிருக்கிற வருவாய் ஆண்டுக்கு சுமார் 28 ஆயிரத்து 800 கோடிக்கும் மேல்.

பணமில்லாத வறட்சியில் வருவாய் கொட்டிக் கொண்டிருக்கிற டாஸ்மாக் ஊற்றை அடைக்க இவர்களுக்கு மனசு வருமா? டாஸ்மாக் மூலம் எவ்வளவு பேர்களின் உடல் நலம் சீரழிந்து, குடும்பமே சின்னா பின்னப்பட்டுக் கொண்டிருப்பதெல்லாம், இவர்களுக்கு முக்கியமாகப் படுமா?

அவர்களுடைய இந்தச் சமயத்தில் வாக்கு மட்டுமே முக்கியமாகப் படும்.

இன்றைக்கு பெட்ரோல், டீசல் விலையால் லாரிக் கட்டணம் எல்லாம் உயர்ந்து, விலைவாசி எல்லாம் உயர்ந்து கொரோனாவுக்கு மேல் நெருக்கடி கொடுத்துக் கொண்டிருக்கையில், இதற்கு – இன்றைக்கு வழி காட்டாதவர்கள், விலைவாசியைக் கட்டுப்படுத்த முடியாதவர்கள்; வாக்குறுதிகளைச் சோப்பு நுரைகளைப் போலக் காற்றில் ஊதித் தேர்தலுக்குப் பிந்தைய நாளையைப் பற்றிக் கனவு காணச் சொல்கிறார்கள்.

ஒரு பக்கம் டாஸ்மாக், தேர்தல் நெருங்கும் நேரத்தில் ஏதாவது கையில் விநியோகப் போகும் பணம்,  இலவச கேஸ் சிலிண்டர் மாதிரிக் கனமான வாக்குறுதிகள் – இதற்கிடையில் தங்களுக்கு முன்னால் வீசப்படும் வாக்குறுதிகளின் மதிப்பு பற்றி வாக்காளர்கள் கொஞ்சமாவது யோசிப்பார்களா?

– யூகி

09.03.2021  12 : 30 P.M

Comments (0)
Add Comment