கொரோனா மறுபடியும் பரவிக் கொண்டிருக்கிறது.
சில மாநிலங்கள் தொடர்ந்து முன்னணியில் இருக்கின்றன. குறிப்பாக மகாராஷ்டிராவில் ஒரு நாளில் 11 ஆயிரம் பேர் பாதிக்குமளவுக்குப் பரவிக் கொண்டிருக்கிறது. திரும்பவும் பொது முடக்கம் பற்றிய பேச்சுகள் அடிபடுகின்றன. உயிரிழப்புகளும் அதிகரித்துக் கொண்டிருக்கின்றன.
கேரளா, குஜராத் மாநிலங்களிலும் பாதிப்பு எண்ணிக்கை கூடிக் கொண்டிருக்கின்றது.
சரி, தமிழகம்?
இங்கு தற்போது கொரோனாத் தொற்று அதிகரித்து வருவதாகச் சுகாதாரத்துறை அதிகாரிகள் தரப்பு மெதுவாகச் சொல்ல ஆரம்பித்திருக்கிறார்கள். முகக்கவசம் குறித்து எச்சரித்துக் கொண்டிருக்கிறார்கள்.
தேர்தல் ஆணையம் சில பாதுகாப்புகளை அதிகப்படுத்தியிருப்பதாகச் சொல்கிறது. வாக்குப்பதிவு அன்று வாக்களிக்க வருகிறவர்களுக்குக் கையுறை வழங்கப் போவதாகவும் அறிவித்திருக்கிறது.
தேர்தல் காலம் என்பதால் பொதுவெளிகளில் மக்கள் பாதுகாப்பற்று வர வாய்ப்புகள் அதிகமாகிக் கொண்டிருக்கும் நேரத்தில் முக்கியமான ஒரு கேள்வியைக் கேட்க வேண்டியதிருக்கிறது.
கொரோனா விஷயத்தில் இங்குள்ள அரசு எந்த அளவுக்கு வெளிப்படைத் தன்மையுடன் இருக்கிறது?
ஏன் இதைக் கேட்க வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்கிறது?
அண்டை மாநிலமான கேரளாவில் உள்ள சுகாதாரத்துறை அமைச்சரிடம் “கேரளாவில் கொரோனா பரவுவது பற்றியும், தமிழகத்தில் அவ்வளவாக இல்லையே?” என்று செய்தியாளர்கள் கேட்டபோது, அவருடைய பதில்:
“நாங்கள் வெளிப்படைத் தன்மையுடன் இருக்கிறோம். மற்ற மாநிலங்களைப் பற்றி நாங்கள் சொல்ல முடியாது”
முதலில் தடுப்பூசியில் காட்டக்கூடிய கவனத்தை, அரசு கொரோனா பரிசோதனையில் காட்டுகிறதா?
முன்பு ஏராளமானவர்களுக்குச் சோதனைகள் நடந்தன. அதையடுத்து பலர் பாதிக்கப்பட்ட தகவல்கள் எல்லாம் வெளிவந்தன.
இப்போது அந்தப் பரிசோதனைகள் எல்லாம் குறைந்து தனியார் பரிசோதனை மையங்களில் கொரோனா சோதனைகள் பண்ணிக் கொள்கிறவர்கள் மட்டுமே அதிகம் இருக்கிறார்கள்.
அரசு தரப்பில் நடைமுறையில் எவ்வளவு பேர்களுக்குக் கொரோனா பரிசோதனைகள் நடத்தப்படுகின்றன? அந்த முடிவுகள் வெளியுலகிற்குத் தெரியப்படுத்தப்படுவது முறையாக நடக்கிறதா?
தேர்தல் நேரத்தில் அதற்கு ஏதாவது கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருக்கிறதா?
நாடு முழுக்க ஒரே தினத்தில் ஐந்து லட்சத்து 37 ஆயிரம் பேருக்குக் கொரோனா பரிசோதனை பண்ணியிருப்பதாக மத்தியச் சுகாதார அமைச்சகம் அறிவித்திருக்கிறது.
இதில் எவ்வளவு பேர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள்? எங்கு அந்தப் பரிசோதனைகள் நடந்திருக்கின்றன?
உண்மையிலேயே ஆரோக்கியமானவர்கள் இங்கு அதிகம் இருந்தால் நல்லது தான். ஆனால் நோய்வாய்ப்பட்டவர்களை ஆரோக்கியமானவர்களாக ஒருவேளை காட்ட முயற்சிப்பது ஆரோக்கியமானதாக இருக்காதே!
தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால், தேர்தல் ஆணையமும் கவனம் எடுத்துக்கொண்டு வாக்குப்பதிவு இயந்திரங்களின் செயல்பாட்டைச் சோதிப்பதில் காட்டுகிற கவனத்தை, வாக்களிக்க இருக்கிறவர்களின் உடல் நலத்திலும் காட்டலாமே!
வாக்களிக்கும் நாளன்று வருகிறவர்களின் உடல் வெப்பத்தைக் கணக்கிடுகிற கருவிகளை வைத்திருந்தாலே, கொரோனா பாதிப்பு குறித்த உண்மைத் தன்மை புலப்பட்டு விடும்.
-அகில் அரவிந்தன்
09.03.2021 12 : 19 P.M