அதிமுக கூட்டணியில் விஜயகாந்த் தலைமையிலான தேமுதிக கட்சி 41 இடங்கள் கேட்பதாகவும், அதிமுக 20 தொகுதிகளுக்கும் குறைவாகவே ஒதுக்க சம்மதித்ததாகவும் செய்திகள் வெளிவந்தன.
இதை ஏற்க மறுத்த தேமுதிக, தொடர்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வந்தநிலையில், திமுக கூட்டணியில் பா.ம.க.விற்கு 23 தொகுதிகள், பா.ஜ.க.விற்கு 20 தொகுதிகள் ஒதுக்கப்பட்டதால், தே.மு.தி.க.விற்கு 15 தொகுதிகள் மட்டுமே ஒதுக்கப்படும் என அ.தி.மு.க தரப்பு தெரிவித்ததாக கூறப்பட்டது.
இதனால் அதிருப்தி அடைந்த தேமுதிக இன்று ஆலோசனைக் கூட்டம் நடத்தியது. சென்னை கோயம்பேட்டில் உள்ள கட்சி அலுவலகத்தில் தேமுதிக தலைவர் விஜயகாந்த், மாவட்டச் செயலாளர்களுடன் ஆலோசனை நடத்தினார்.
விஜயகாந்த் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தின் முடிவில், அதிமுக கூட்டணியில் இருந்து தேமுதிக விலகுவதாக அக்கட்சித் தலைவரும், பொதுச்செயலாளருமான விஜயகாந்த் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நடைபெறவுள்ள சட்டசபை பொதுத்தேர்தலில் அதிமுகவுடன் தொடர்ந்து 3 கட்டங்களாக பேச்சுவார்த்தை நடைபெற்றது. தேமுதிக சார்பில் கேட்கப்பட்ட தொகுதி எண்ணிக்கையும், தொகுதிகளையும் ஒதுக்க மறுத்து உடன்பாடு ஏற்படாத காரணத்தினால், மாவட்டக் கழகச் செயலாளர்களின் ஆலோசனைக் கூட்டத்தில் ஏற்பட்ட ஒற்றைக் கருத்தின் அடிப்படையில் இன்றிலிருந்து (மார்ச் 09) அதிமுக, பா.ஜ.க கூட்டணியில் இருந்து தேமுதிக விலகுகிறது” எனக் கூறப்பட்டுள்ளது.
இதனிடையே, இந்த கூட்டணி விலகல் குறித்துப் பேசிய தேமுதிக துணைச் செயலாளர் பார்த்தசாரதி, “தனித்துப் போட்டியிடுவது குறித்து மீண்டும் ஆலோசித்து முடிவெடுக்கப்படும்” எனத் தெரிவித்தார்.
09.03.2021 12 : 13 P.M