எந்த நிலைக்குப் போனாலும் எளிமை மாறாதவர்!

சின்னதான சிமிண்டுப் பூச்சிலான திண்ணை; ஓடு வேய்ந்த வீடு; என்று எளிமையான சூழ்நிலையில் ராமேஸ்வரம் முஸ்லிம் தெருவில் பிறந்து வளர்ந்த முக்கியமான வி.ஐ.பி. அப்துல்கலாம்.

ஆடம்பரமில்லாத அந்த வீட்டில் அப்துல் கலாமுடன் பிறந்தவர்கள் நான்கு பேர். மூன்று பேர் இறந்துவிட ராமேஸ்வரத்தில் இருப்பவர் அப்துல் கலாமின் அண்ணன் முகமது முத்துமீரான் லப்பை மரைக்காயர். அப்துல் கலாமுக்கு பாரத ரத்னா கொடுக்கப்பட்டபோது கலாம் தனது சார்பில் விருதைப் பெற்றுக் கொள்ளச் சொன்னது இவரைத்தான்.

கலாம் மீது அதீத பாசம் வைத்திருந்த இவர், கலாம் பற்றிப் பேசுகிறபோது மிகுந்த தயக்கம் காட்டினார். “தம்பியைப் பத்தி நான் என்ன சொல்லப் போகிறேன்?” பணிவுடன் சொல்ல, நம்மிடம் பேசினவர் கலாமின் மைத்துனரான  எம்.எம்.ஏ.காஜா முகைதீன்.

“கலாம் ராமேஸ்வரத்தில் படித்தது யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஒரு சாமியாரிடம். கலாமின் சித்தப்பா மகன் சம்சுதீன் மரைக்காயர் அப்போது தினமணி ஏஜெண்டாக இருந்தார். வீட்டிலுள்ள பொருளாதாரச் சூழ்நிலையில் வீடு வீடாகப்போய் தினமணி பேப்பர் போடுவார் அப்துல்கலாம்.

கடுமையான பஞ்ச காலத்தில் ராமநாதபுரத்திற்குப் போய் எட்டாவது வகுப்பில் சேர்ந்து படித்தார்கள், என் தம்பி நூர்தீனும், கலாமும். இன்டர்மீடியட் முடித்த பிறகு என் அண்ணா அகமது ஜலாலுதீன் மரைக்காயர் தான் கலாமை திருச்சியிலுள்ள செயிண்ட் ஜோசப் கல்லூரியில் சேர்த்தார்.

அதன்பிறகு படிப்படியாக முன்னேறிவிட்டார் கலாம். வீட்டில் திருமணம் செய்ய அவரை வற்புறுத்தினார்கள்.

ஆனால் திருமணமே செய்து கொள்ளாமல் விஞ்ஞான ஆராய்ச்சியில் மும்முரமாகி விட்டார். வீட்டில் குடும்பத்தினர் மீது, குறிப்பாக அண்ணன் மீது மிகுந்த மரியாதையுடன் இருப்பார். அவர்களுக்கு நிறைய உதவியிருக்கிறார்” என்று சொல்லிக் கொண்டு போன காஜா முகைதீன் ஒரு சம்பவத்தை நினைவு கூர்ந்து சொன்னார்.

“ராமேஸ்வரத்தில் பல வருடங்களுக்கு முன்பு தை மாதத்தில் லக்ஷ்மண தீர்த்தத்தில் தெப்பத்திருவிழா நடந்தது. ட்ரம்களை அடுக்கி மேடை போட்டு அதில் சுவாமி வலம் வந்து கொண்டிருக்கும்போது, ட்ரம்மில் ஓட்டை விழுந்து, மேடை சரிந்து குளத்திற்குள் மூழ்கிவிட்டது சுவாமி சிலை.

பக்தர்களிடம் ஒரே பதட்டம். அந்தச் சமயத்தில் கை கொடுக்க வந்திருக்கிறார்கள் கலாமின் முன்னோர்கள்.

உடனடியாக கீழக்கரைப் பகுதியிலிருந்து முத்துக் குளிக்கிற முஸ்லீம் இளைஞர்களை வரவழைத்திருக்கிறார்கள். அவர்களைக் குளத்தில் இறக்கி சுவாமியை அப்படியே நகைகளுடன் மேலே கொண்டு வந்தபோது சுற்றியிருந்தவர்களுக்கு ஒரே பரவசம். காணிக்கையாக ஏதாவது செய்ய வேண்டுமே!

இனி சுவாமி புறப்படுவற்கு முன்பு ‘முதல் மரியாதை’ கலாமின் முன்னோர்களுக்கு; என்று அறிவித்துவிட்டார்கள்.

அதன்படி சமீபகாலம் வரை கலாமின் அண்ணனுக்கு ‘முதல் மரியாதை’ கிடைத்திருக்கிறது. அதற்கிடையில் மதப்பாகுபாடுகள் எழுந்து, மரியாதை நிறுத்தப்பட்டதில் ராமேஸ்வரம் முஸ்லீம்களுக்கு வருத்தம்.

“ஆனால் கலாம் மதத்திற்கு அப்பாற்பட்ட மாதிரி இருப்பவர். அணுசக்தி விஞ்ஞானியான பிறகும் இங்குள்ள சொந்த பந்தங்களின் நல்லது, கெட்டதுகளுக்கு வந்திருக்கிறார். ராமேஸ்வரத்துக்கு அவர் வந்தால் எப்போதும் நாலு முழவேட்டி தான் கட்டுவார்.

ரொம்ப மெதுவாகப் பேசுவார், ரொம்ப காலமாக சொந்த வீட்டில் போன் இல்லாததால் எங்க வீட்டுக்குத்தான் போன் பண்ணி அண்ணனுடன் பேசுவார்.

வயதான காலத்தில் அண்ணன் பக்கத்துத் தெருவிலிருந்து வருவது பொறுக்காமல் நாங்கள் கலாமிடம் சொன்ன பிறகு தான் அவரது வீட்டிற்குப் போன் கனெக்சனே வந்தது. எந்த நிலைக்குப் போனாலும் அவரது எளிமை மட்டும் மாறவில்லை” பாசத்துடன் சொல்கிறார் காஜா முகைதீன்.

”முதல்முறையாக வெளிநாட்டுக்குப் போய்விட்டு வந்த பிறகு ஒரு முறை ராமேஸ்வரத்திற்கு வந்தார் கலாம். அவரைக் கூட்டிக்கொண்டு போய் இங்குள்ள ஸ்கூலில் பேசச் சொன்னோம். சொந்த ஊரிலிருந்து போனதைப்பற்றி நெகிழ்ந்து போய்ப் பேசினார் கலாம்”

அணுசக்தி, அணுகுண்டு, அதன் சர்வதேச எதிரொலி – இதற்கெல்லாம் நேர் எதிராக ஒரு எளிமையின் அடையாளத்துடன் இருக்கிறது கலாம் பிறந்து வளர்ந்த வீடு.

– மணா

08.03.2021 3 : 33 P.M

Comments (0)
Add Comment