பொறுப்புடன் செயல்பட நாம் தயாராவோம்!

குடியரசு தினத்தன்று ஒரு வாழ்த்து மழை. நம்முடைய அலைபேசி நிரம்பி வழியும் அளவிற்கு வாழ்த்து மழை.

ஒரு நிலையில் இந்த வாழ்த்துச் செய்திகளைப் பார்த்துப் பார்த்து ஏதோ ஒரு வகையான மன உளைச்சல் வந்து விட்டது. எதையும் நாம் புரிந்து செய்கின்றோமா அல்ல இவைகளெல்லாம் வெற்றுச் சடங்கா என்று கேட்கும் அளவுக்கு ஒரு வெறுப்பு மேலிட ஆரம்பித்தது.

குடியரசு தினத்தன்று நாம் என்ன சிந்திக்க வேண்டும், எப்படி சிந்திக்க வேண்டும் என்கின்ற முறைமையற்று, எதையும் சடங்காக மாற்றி செய்துவிட்டு கடந்து விடும் மனிதர்களாக நாம் மாற்றப்பட்டு விட்டோம் என்பதைத்தான் என்னால் அன்று உணர முடிந்தது.

எனக்கு வாழ்த்துச் செய்தி அனுப்பியவர்களுக்கு ஒரு செய்தியைக் கூற வேண்டும் என்று எண்ணினேன். அதற்கு ஒரு வாய்ப்பாக அன்று எனக்கு ஒரு பள்ளியில் மாணவர்களிடம் காணொளி வாயிலாக பேச அழைக்கப்பட்டிருந்தேன். அந்த வாய்ப்பைப் பயன்படுத்தி மாணவர்களுக்கு உரை நிகழ்த்தினேன். அந்த உரையின் சாராம்சத்தை இங்கு பதிவிடுகிறேன்.

நான் உரையாற்றியது கல்லுப்பட்டியில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க காந்தி நிகேதன் ஆசிரமப் பள்ளியில். அந்த கிராமத்தில் தான்  குமரப்பா கடைசி காலத்தில் வசித்து வந்தார். அது மட்டுமல்ல அந்தப் பள்ளி பல வரலாற்று முக்கியத்துவத்தைப் பெற்ற பள்ளி. இன்று அந்தப் பள்ளிக்கூடம்தான் நமக்குத் தெரிகிறது. அந்த நிறுவனம் ஒரு மாபெரும் காந்திய மக்கள் இயக்கத்தை உருவாக்க செயல்பட்ட பயிற்சிப் பள்ளி. சுதந்திரப் போராட்ட காலத்தில் வாழ்ந்த பல முன்னணித் தலைவர்களுக்குப் பரிச்சயமான ஒரு பயிற்சிக் கூடம். ஆனால் இன்று அது ஒரு வரலாறாக மாறிவிட்டது.

காரணம் காந்தியக் கனவு சிதைக்கப்பட்டதன் விளைவு, காந்தியச் செயல்பாட்டுக் களங்களும் சிதைக்கப்பட்டுவிட்டன. ஆனால் அந்த நிறுவனங்கள் அந்தக் கனவுகளைத் தாங்கிக் கொண்டுதான் செயல்படுகின்றன. அந்தக் கனவுகளை எடுத்துச் செல்வோர் வரும்வரை அந்தக் கனவுகள் அங்கு வரலாற்றுடன் இணைந்து தேங்கி நிற்கின்றன. அந்தக் கனவுகளை மீண்டும் மீண்டும் தூண்டிக் கொண்டேயிருக்க வேண்டும், தகுதியான மனிதர்கள் அவைகளை எடுத்துக் கொண்டு செல்ல வரும்வரை. நிறுவனங்கள் அந்தக் கனவுகளை அடைகாத்து சரியான நேரத்திற்காக காத்திருக்க வேண்டும்.

மானுடக் கண்டுபிடிப்புக்களிலேயே மிக உயர்ந்த கண்டுபிடிப்பு என்பது தன்னைக் கண்டுபிடிப்பது. நாம் யார்? நம் வரலாறு என்ன? நாம் பிறந்த இடத்தின் சிறப்பு என்ன? நம் தாய், தந்தையர் யார்? அவர்களின் நற்பண்புகள் மற்றும் உழைப்பு, தியாகங்கள் என்னென்ன? நாம் படிக்கும் பள்ளியின் சிறப்பு என்ன? நமக்கு வகுப்பெடுக்கும் ஆசிரியரின் குணங்கள் யாவை? நம்முடன் நண்பர்களாக இருப்பவர்களின் பின்னணி என்ன? என்பதை கவனமாக ஆழ்ந்த விழிப்புடன் கண்டு உணர்ந்து செயல்படக் கூடிய எந்த மாணவனும் தன்னைக் கண்டுபிடித்து விடுவான்.

பொதுவாக மானுட வாழ்வு கற்றலில் அமைக்கப்பட்டிருக்கிறது. நாம் வாழும் ஒவ்வொரு நிமிடமும் நாம் நிகழ்த்தும் ஒவ்வொரு செயலிலும் நாம் பார்க்கும் ஒவ்வொரு நிகழ்விலும் நாம் பாடம் படித்துக் கொண்டே இருக்கலாம், அதற்கான கற்கும் தகுதியை மட்டும் நாம் வளர்த்துக் கொண்டால் போதும்.

கற்கும் தகுதி என்பது கற்கும் முறைமையை கைவசப்படுத்திய அனைவரிடமும் இருக்கும். அதைத் தொடர்ந்து கைக் கொண்டு கற்றுக் கொண்டே இருந்தால் வாழ்க்கை செம்மையடைந்து செழுமை பெற்றுக் கொண்டேயிருக்கும். கல்வி கற்பது என்பது வாழ்நாள் முழுவதும் நடைபெறும் ஒரு நிகழ்வு.

அந்த நிகழ்வு என்பது ஆன்ம விழிப்புடன் செயல்பட்டால் மானுடத்தின் உன்னதத்தை தாண்டி தெய்வத் தன்மை பெற்ற மனிதர்களாக மாறிவிடுவர். அது தான் பரிணாம வளர்ச்சி. அப்படிப்பட்ட கல்வியை நமக்கு எந்தப் பல்கலைக் கழகமும் வழங்காது. அதற்கு நாமேதான் முயல வேண்டும். அப்படி முயன்றால் நாமே பல்கலைக் கழகங்களாக மாறிவிடுவோம். இதற்கு ஒரு பல்கலைக் கழகம் வழிகாட்டுகிறது. அதுதான் காந்தி என்னும் பல்கலைக்கழகம்.

நாம் வாழும் குடும்பச் சூழலில், சமூகச் சூழலில், ஆழ்ந்து நம்மைச் சுற்றியுள்ளோரைப் பார்க்க வேண்டும். அப்படிப் பார்க்கும்போது ஒவ்வொரு மனிதருக்குள்ளும் ஒரு தெய்வத்தன்மை பொருந்திய மனிதர் ஒளிந்து கொண்டிருப்பார். அந்தப் புனிதத் தன்மையை ஒவ்வொரு மனிதரிடமும் பார்க்கக் கற்றுக் கொண்டால், நாம் செயல்படும் இடத்தை நமதாக்கிக் கொள்ளலாம்.

நம் தாய் தந்தையரைப் படிக்க வேண்டும். அவர்களிடம் இருக்கின்ற குணங்களை பார்க்க நமக்கு ஒரு புரிதல் வேண்டும். அவர்கள் கட்டியிருக்கின்ற உடைகள் அல்ல நாம் கற்றுக்கொள்ள வேண்டியது. அவர்கள் பேசுகின்ற வாய்மொழி அல்ல அவர்களிடம் கற்றுக் கொள்ள வேண்டியது. அவர்களின் உழைப்பு, அந்த உழைப்பு யாருக்கானது, அந்த உழைப்பு யாரை நோக்கி மையப்படுத்தி செய்யப்படுகிறது என்பதை புரிந்து கொள்ளுகின்ற தன்மை நமக்கு வந்து விட்டால் நாம் கல்விக் கூடத்தில் ஒவ்வொரு நிமிடமும் நம் தாய் தந்தையரின் உழைப்பில் உருவாகும் பைசா செலவழிக்கப்படுகின்றது என்ற உணர்வில், கற்றுக் கொள்ள தொடர்ந்து முயற்சி செய்து கொண்டேயிருப்போம்.

நாம் கற்கும் இடத்தில் நடைபெறும் ஒவ்வொரு நகிழ்விலும் நாம் கற்றுக் கொள்வதற்கு நிறைய இருக்கின்றன. ஆனால் அவைகள் அனைத்தும் நமக்கு புரிந்துவிட்டால், அந்த நிகழ்வுகளில் ஒன்றி கற்றுக் கொள்வோம். கற்றுக் கொள்கின்ற பாங்கு, முறைமை, பக்குவம் நமக்கு வந்து விட்டால் ஒவ்வொரு மணித்துளியும் நமக்கு விலைமதிக்க முடியாத ஒன்றாக மாறிவிடும்.

அது மட்டுமல்ல ஒவ்வொரு நிமிடமும் நாம் கற்றுக் கொள்ளும்போது புரியாதது புரிவதும், தெரியாதது தெரிவதும், அறியாதது அறிவதும், தெளியாதது தெளிவதும், உணராதது உணர்வதும் நமக்கு ஒரு மகிழ்ச்சியையும் தன்னம்பிக்கையையும் தொடர்ந்து பெற்றுக் கொண்டேயிருப்போம்.

அது மட்டுமல்ல அப்படி நிகழும்போது நாம் மனிதத்துவத்தில், பக்குவப்பட்ட மனிதராக, பண்புள்ள மனிதராக, மற்றவர்களை நேசிக்கின்ற மனிதராக, மற்றவர்களால் நேசிக்கப்படும் மனிதராக மாறி வருவதும் நமக்குப் புலப்படும்.

அந்த மனநிலை நம் வாழ்க்கையை பொருளுள்ளதாக அர்த்தமுள்ளதாக மாற்றிவிடும். அதற்கு முதலில் நாம் எப்படி வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பது நமக்குப் புலப்பட வேண்டும். நாம் பொறுப்புடன் ஒரு மகனாக, ஒரு மகளாக, தந்தை தாய்க்கு வாழ்கின்றோமா? அதேபோல் நாம் ஒரு பொறுப்புள்ள மாணவனாக அல்லது மாணவியாக நடந்து கொள்கிறோமா? நாம் ஒரு சமூகத்தில் பொறுப்பு மிக்க சமூகக்குடிமகனாக அல்லது குடிமகளாக வாழ்கிறோமா?

ஒரு நட்பு வட்டத்தில் ஒரு நல்ல நண்பனாக தோழராக அல்லது

தோழியாக நடந்து கொள்கின்றோமா? என்பதை சற்று சீர் தூக்கிப் பார்க்க வேண்டும். நாம் வீட்டில் இருக்கும்போது வீட்டில் குப்பையாக இருந்தால் அந்தக் குப்பையை அகற்ற வேண்டும் என்ற உணர்வை ஏற்படுத்துகிறதா அல்லது நமக்கு அப்படிப்பட்ட உணர்வு உருவாகின்றதா? நாம் வகுப்பறையில் இருக்கும்போது வகுப்பறை தூய்மையாக இல்லை என்றால் நாம் வகுப்பறையை துப்புரவு செய்யாமல் அமரக்கூடாது என்ற உணர்வு நமக்கு வருகிறதா? அதை உடனே நாம் செய்ய வேண்டும் என நம்மை உந்தித் தள்ளுகின்றதா?

நாம் ஒரு கழிப்பறைக்குச் செல்கின்றோம், அது சுத்தமாக இல்லை, அதைச் சுத்தம் செய்ய வேண்டும் என்ற உணர்வு நமக்கு வருகின்றதா? ஒரு கோவிலுக்குச் செல்கின்றோம் அல்லது பிரார்த்தனைக் கூட்டத்தில் கலந்து கொள்கின்றோம், அந்த நேரத்தில் நமக்கு பிரார்த்தனைக்கான சிந்தனை உணர்வு, விழிப்பு வருகின்றதா? அந்த பிரார்த்தனை முறைமைகள் நமக்குத் தெறிந்து சடங்காக இல்லாமல் உணர்வுடன் பிரார்த்தனையில் கலந்து கொண்டு இறைத்தன்மையை உள்வாங்க முடிகின்றதா?

வகுப்பறையில் அமர்ந்துள்ளோம், அந்த வகுப்பு நேரத்தில் ஒரு மணி நேரமோ, முக்கால் மணி நேரமோ நம் ஆசிரியரிடம் இருந்து, கற்றுக் கொள்ளும் ஆர்வத்துடன் வகுப்பில் இருக்க முடிகின்றதா?

நாம் செயல்படும்போது நம் செயல்பாடுகளை அறிவு தீர்மானிக்கிறதா? அல்லது நம் புலன்கள் தீர்மானிக்கிறதா? நம் புலன்கள் அதாவது நாக்கு, மூக்கு, காது, கண்கள், மனம் அனைத்தும் நம் கட்டுப்பாட்டிற்குள் இருக்கின்றனவா? பார்க்கக் கூடாதவை, கேட்கக் கூடாதவை, பேசக் கூடாதவை, நுகரக் கூடாதவை, சுவைக்கக் கூடாதவை எவைகள் என்பது நமக்குப் புரிகிறதா?

அந்தப் புரிதலில் நாம் வாழ்வது தேவையின் அடிப்படையிலா அல்லது ஆசையின் அடிப்படையிலா? இன்று நம்மை புற உலகு புலன்களுக்குத்தான் தீனி போட்டுக் கொண்டுள்ளன. அந்தச் சூழலில் புலன்களின் கட்டுப்பாட்டில் நாம் இருக்கின்றோமா அல்லது நம் கட்டுப்பாட்டில் புலன்கள் இருக்கின்றனவா? என்பதை நாம் சற்று உற்று நோக்க வேண்டும்.

நம் உடல் பற்றிய புரிதல் நமக்கு இருக்கிறதா? நம் உடல் கடிகாரம் சுழலும் விதம் கொண்டு வாழ்கிறோமா அல்லது மனம் போன போக்கில் உடலை செயல்பட விடுகிறோமா என்ற புரிதல் நமக்கு உள்ளதா? நாம் செயல்படும் ஒவ்வொரு கணமும் நமக்கும் இயற்கைக்கும் உள்ள தொடர்பின் அடிப்படையை பின்புலத்தில் வைத்துக் கொண்டு செயல்படுகிறோமா என்பதை நாம் சிந்திக்க வேண்டும்.

இன்றைய சூழலில் நாம் எதிர்காலம் பற்றி சிந்தித்து நம் வாழ்க்கையை நெறிப்படுத்த நமக்குத் தேவை சிக்கன வாழ்வு. அனைத்திலும் தேவை சார்ந்தவைகளை மட்டுமே நாம் பயன்படுத்த வேண்டும். அது நீர் ஆனாலும் சரி, பொருளானாலும் சரி, உணவு ஆனாலும் சரி, உடையானாலும் சரி அனைத்தும் தேவையை பூர்த்தி செய்வதாக நம் செயல்பாடுகளை அமைத்துக் கொள்ள வேண்டும்.

உலகப் பணக்காரனான வாரன் பப்பட் கூறுவான் “ஆசைக்கு வாழ்பவன் ஒரு நேரத்தில் தன் தேவைக்கு அத்தியாவசியமான பொருளைக் கூட விற்று வாழ வேண்டிய சூழலுக்குத் தள்ளப்படுவான்” என்று.

எனவே நாம் பொறுப்பு மிக்கவர்களாக, பொதுநலம் கருதி, கட்டுப்பாடுடைய வாழ்வை வாழ நம்மை ஆயத்தப்படுத்திக் கொள்ள வேண்டும். நம் வாழ்விற்கும், வளத்திற்கும், பாதுகாப்பிற்கும் மேம்பாட்டிற்கும் நாம் பொறுப்பேற்றுக் கொள்ள வேண்டும்.

கட்டுரை ஆசிரியர் டாக்டர் க.பழனித்துரை

(தொடர்புக்கு: gpalanithurai@gmail.com)

காந்தி கிராமப் பல்கலைக் கழகத்தின் முன்னாள் பேராசிரியர்.

சமூக நலத்திட்டங்கள் சார்ந்த 82 நூல்களை ஆங்கிலத்திலும், தமிழிலும் எழுதியிருப்பவர்.

126 ஆய்வுக் கட்டுரைகளைச் சமர்ப்பித்திருப்பவர்.

க.பழனித்துரை

ஊடகங்களில் சுமார் நூற்றுக்கணக்கான கட்டுரைகளை எழுதியிருக்கிற இவர், எழுபது சிறப்பு வெளியீடுகளையும் கொண்டு வந்திருக்கிறார்.

ஜெர்மெனியில் உள்ள கொலோன் பல்கலைக் கழகத்தின் வருகைதரு பேராசிரியர்.

பஞ்சாயத்து ராஜ் உள்ளிட்ட பல்வேறு மக்கள் நலன் சார்ந்த திட்டங்கள் வெளிவருவதற்குத் தன்னுழைப்பைத் தந்திருப்பவர்.

12.03.2021  12 : 30 P.M

Comments (0)
Add Comment