நிழல் மனிதரின் நிஜம்!

‘புதிய பார்வை’ ஆசிரியரான ம.நடராசன் துவக்கக் காலத்தில் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டவர். தமிழக செய்தி மக்கள் தொடர்புத்துறை அதிகாரியாக பணியாற்றியவர். கலைஞர் தலைமையில் இவருக்கும், சசிகலாவுக்கும் திருமணம் நடந்திருக்கிறது. அ.தி.மு.க.வில் எந்தப் பொறுப்பும் வகிக்காத நிலையிலும், அதற்காகவே பின்னணியில் தொடர்ந்து இறுதிவரை உழைத்தவர்.

ம.நடராசனின் நினைவு தினத்தையொட்டி (மார்ச்-20) ஏற்கனவே ‘இந்து தமிழ்’ நாளிதழில் (21.03.2018) வெளியான முழுப்பக்க கட்டுரை மீண்டும் உங்கள் பார்வைக்கு…

***

“இருப்பதிலேயே கஷ்டமான விஷயம் – நாம் தவறாகப் புரிந்துகொள்ளப்படும்போது ஏற்படுகிற வேதனைதான். அப்படிப்பட்ட வேதனையை வாழ்நாள் முழுக்க நான் அனுபவித்திருக்கிறேன் என்பதுதான் கொடுமை’’ – சில மாதங்களுக்கு முன் தனியார் மருத்துவமனையிலிருந்து வந்து, உறவினர் வீட்டில் தங்கியிருந்தபோது ம.நடராசன் சொன்ன வார்த்தைகள் இவை.

மருதப்பா நடராசன் என்கிற நடராசன், நண்பர்களால் ‘எம்.என்’ என்று அழைக்கப்பட்டவர். தஞ்சை மாவட்டத்தில் உள்ள விளார் கிராமத்தைச் சேர்ந்தவர். விவசாயக் குடும்பம். பிறந்தது 1942 அக்டோபர் 23-ல். பள்ளிப் படிப்பின்போதே தமிழ் மீது பிடிப்பு ஏற்பட்டது. தஞ்சை சரபோஜி கல்லூரியில் அவர் பட்டப்படிப்பு படித்துக்கொண்டிருந்தபோது, திராவிட இயக்கப் பின்னணியில் உருவாகியிருந்த மாணவர் சங்கத்தின் சார்பில், மொழிப் போராட்டம் உத்வேகத்துடன் இருந்தது. அதில், தஞ்சையில் முன்வரிசையில் இருந்தவர் நடராசன்.

தி.மு.க. ஆட்சி அமைந்ததும் மொழிப் போராட்டத்தில் பங்கேற்ற தகுதியான மாணவர்களுக்குச் செய்தித் துறையில் வேலை கிடைத்தது. அவர்களில் ஒருவர் நடராசன். மக்கள் தொடர்பு அதிகாரி ஆனார். நடராசனுக்கும் சசிகலாவுக்கும் நடந்த திருமணத்தை நடத்திவைத்தவர் அன்றைய முதல்வர் கருணாநிதி.

இதெல்லாம் பலருக்கும் தெரிந்த விஷயங்கள்தான். எம்.ஜி.ஆர்., மறைவுக்கு முன்பே உறவினர்கள் மீது நம்பிக்கை இழந்து, ஜெயலலிதா சலிப்புற்றிருந்த நேரத்தில் அவருக்கு அறிமுகமானார் சசிகலா. நடராசனும் அவருக்குப் பழக்கமானார். விரைவில், ஜெயலலிதாவின் நன்மதிப்பைப் பெற்ற நடராசன், அவரது ஒவ்வொரு அரசியல் நகர்விலும் உடனிருந்தார்.

எம்.ஜி.ஆரின் இறுதி ஊர்வலத்தின்போது ஜெயலலிதா பீரங்கி வண்டியிலிருந்து தள்ளிவிடப்பட்டு, அவமானப் படுத்தப்பட்ட நேரத்தில் அவருக்கு அனுசரணையாகத் துணை நின்றவர்கள் சசிகலாவும் நடராசனும்.

எம்.ஜி.ஆர் மறைந்த பிறகு ஜெயலலிதா தனித்து அணி அமைத்துப் போட்டியிட்டபோது அவருக்குப் பக்கபலமாக நடராசனும் சசிகலாவும் நின்றார்கள். அந்நாட்களில் மத்தியில் இருந்த காங்கிரஸுடனும் ஏனைய மாநிலக் கட்சிகளுடனும் ஜெயலலிதாவுக்கு நல்ல பிணைப்பு உருவான பின்னணியிலும் நடராசனின் உழைப்பு இருந்தது.

ராஜீவ், நரசிம்ம ராவ், குலாம் நபி ஆசாத், பிரணாப் முகர்ஜி, கன்ஷிராம், மாயாவதி என்று பல தலைவர்களுடன் தொடர்பில் இருந்தார் நடராசன்.

தி.மு.க.வை எதிர்த்து இயங்கினாலும், தி.மு.க. தலைவரை ‘கலைஞர்’ என்றே அழைப்பார். ஒருகட்டத்தில் ஜெயலலிதா அரசியலைவிட்டே விலகுவதாக எழுதிக்கொடுத்த கடிதம், திமுக அரசால் கைப்பற்றப்பட்டது இவருடைய வீட்டிலிருந்துதான். அவர் கைது செய்யப்பட்டதும் நடந்தது.

அ.தி.மு.க.வின் இரட்டை இலைச்சின்னம் முடக்கப்பட்டபோது, அதை மீட்டுக் கொண்டுவந்ததில் நடராசனின் பங்கு என்ன என்பது அ.தி.மு.க.வில் அப்போது இருந்தவர்களுக்குத் தெரியும். போடி தொகுதியில் ஜெயலலிதா போட்டியிட்டபோது அங்கேயே தங்கி அவருக்குத் தேர்தல் பணியாற்றினார் நடராசன்.

பின் ஜெயலலிதா கட்சியைக் கைப்பற்றி, முதல்வராக அமர்வதற்கும் முக்கியப் பங்காற்றினார். 1991-ல் போயஸ் கார்டனிலிருந்து அவர் வெளியேறும்வரை, அ.தி.மு.க.வின் மிக முக்கியமான அங்கமாக அவர் இருந்தார். பிறகு, அவருக்கும் ஜெயலலிதாவுக்கும் இடையில் பெரும் இடைவெளி உருவானது என்று தொடர்ந்து சொல்லப்பட்டு வந்தாலும், மிக முக்கியமான தருணங்களில் அ.தி.மு.க.வின் நகர்வுகளில் அவருக்கும் பங்கிருக்கவே செய்தது.

கட்சி எப்போதெல்லாம் நெருக்கடியைச் சந்திக்கிறதோ அப்போதெல்லாம் அவர் பெயர் இரண்டுவிதமாகவும் அடிபடும். குறிப்பாக, கூட்டணிகள் உருவாகும் சமயத்தில்!

ஈழப் பிரச்சினையில் அ.தி.மு.க.வின் நிலைப்பாடு குறித்து அலட்டிக்கொள்ளாமல், தொடர்ந்து புலிகள் ஆதரவுக் கூட்டங்கள் பலவற்றில் பங்கேற்றார் நடராசன். குறிப்பாக, ஈழப் போரின் இறுதிச் சமயத்தில் தொடர்ந்து குரல்கொடுத்துவந்தார்.

தஞ்சையில் அவர் உருவாக்கிய முள்ளிவாய்க்கால் முற்றம் தமிழ் மீதும், தமிழர்கள் மீதும் அவர் கொண்டிருந்த பற்றுக்கு ஒரு சான்று என்று சொல்லலாம். மொழிப் போராட்டம் பற்றியும், முள்ளிவாய்க்கால் இன அழிப்பைப் பற்றியும் இரண்டு தொகுப்பு நூல்களைக் கொண்டுவந்தார். சில ஆவணப்படங்களைத் தயாரித்து, உலகின் கவனத்துக்குத் தமிழர் துயரத்தைக் கொண்டுபோனார்.

‘புதிய பார்வை’ இதழில் ‘நெஞ்சம் சுமக்கும் நினைவுகள்’ என்ற தலைப்பில் தன்னுடைய அரசியல் அனுபவங்களை எழுதினார். ஜெயலலிதா மறைவதற்கு முன்பே, அந்திமக்காலத் தனிமையை ஆழ்ந்து அனுபவித்த உணர்வுடன் ஒரு நாள் சொன்னார்,

“சசிகலாவை இப்பவாவது போயஸ் கார்டனை விட்டு வெளியே வரச்சொல்லி, நாங்க இரண்டு பேரும் தனியா வாழணும்னு நினைக்கிறேன்… பார்ப்போம்” ஜெயலலிதா மறைந்த அன்று ராஜாஜி ஹாலின் உள்ளரங்கில் நின்று பேசிக்கொண்டிருக்கும்போதும் அதையே சொன்னார்.

சசிகலா கைதாகி பெங்களூரு சிறைக்குக் கொண்டுசெல்லப்பட்ட அன்று அவரைச் சந்தித்ததைச் சொல்லும்போது அவருடைய கண்கள் கலங்கியிருந்தன. “எத்தனையோ முறை நான் சொல்லியிருக்கேன்.. கேக்கலை. இப்போ பழி யார் மேலே விழுந்திருக்கு? சசிகலா சிறைக்குப் போகும்போது அழுதாங்க.. என்னாலயும் கண்ணீரை அடக்க முடியலை. அதை நினைக்கிறப்போ என்னால் நிம்மதியாகத் தூங்க முடியறதில்லை’’ என்றவர், மனைவிக்கு இருக்கிற பலவிதமான உடல் உபாதைகளைக் குரல் கமறச் சொன்னார்.

ஜெயலலிதா மறைவை ஒட்டி உருவான சந்தேக நிழல், தன்னுடைய குடும்பத்தினர் மீது படிகிற சூழல் உருவானதைச் சொல்லி அடிக்கடி வருத்தப்பட்டிருக்கிறார்.

“அந்தம்மாவை சசிகலா மாதிரி யாரும் கவனிச்சிருக்க முடியாது. அந்தம்மாவுக்குச் சர்க்கரை கூடியிருக்கு.. பல தொந்தரவுகள்.. தன்னோட உடல் நலனில் அந்தம்மாவுக்கே அக்கறை இல்லாமப் போச்சுங்கிறதுதான் உண்மை. பிடிவாதமா டாக்டர் சொன்னதை மீறிச் சாப்பிடுவாங்க. யாரும் தடுக்க முடியாது. சுகர் லெவல் அதனாலதான் 600-க்கு மேலே போச்சு.

என்ன வைத்தியம் பண்ணலை அவங்களுக்கு? எய்ம்ஸ் ஆஸ்பத்திரியில் இருந்து வந்த டாக்டர்களுக்குத் தெரியும். அவங்க மூலமா பிரதமர் மோடிக்குத் தெரியும். இங்கே இருந்த அமைச்சர்கள் எல்லோருக்கும் தெரியும். ஆனா, இப்போ பழி மட்டும் எங்க குடும்பத்து மேலன்னா என்னங்க நியாயம்?” என்றார், தனக்கு கல்லீரல் ஆபரேஷன் நடப்பதற்கு முன்னால் படுக்கையில் இருந்தபடி.

தன் குடும்பத்தினர் மீது அடுத்தடுத்து வழக்குகள் பாய்ந்தபோது நடராசன் டெல்லி சென்றிருந்தார். அங்கு பா.ஜ.க.வைச் சேர்ந்த சிலரைச் சந்தித்திருக்கிறார். “எங்க குடும்பத்து மேல அடுத்தடுத்து வழக்குப் போடுறீங்க.. நாங்க பொறுத்துக்கிட்டே இருக்கோம். திருப்பி தமிழ்நாட்டில் நீங்க யாருக்கு, என்னென்ன வாங்கினீங்கன்னு, எதில் எதில் தலையிட்டீங்கங்கிற விஷயத்தை நாங்க சொன்னா என்ன ஆகும்?” என்றார்.

டெல்லியிலிருந்து திரும்பிய பின் அவரே சொன்னதுதான் இது. கூடவே, “திராவிடத்தை ஒழிச்சுருவோம்னு பேசுறாங்களே.. திராவிட இயக்கங்கள் நமக்குள்ளே ஒற்றுமை இல்லாமப் பிரிஞ்சு கிடக்கிறதனாலதானே இப்படிப் பேசுறாங்க.. நாம எல்லாம் ஒற்றுமையா செயல்பட்டா என்னவாகும்? ஸ்டாலின்கிட்டே பேசணும்னா நானே பேசுவேன்..’’ என்றார்.

உறுப்பு மாற்றுச் சிகிச்சைக்குப் பிறகு உடல்நலம் தேறியவர், சமீபத்தில் சட்டென்று மஞ்சள்காமாலை பாதிப்புக்கு ஆளாகி, மருத்துவமனையில் சேர்க்கப்பட்டபோதும் நம்பிக்கை குலையாமல் இருந்தார். இரவுநேரத் தூக்கம் குலைந்துபோயிருந்தது. மனைவியைப் பற்றிய வருத்தம் மன அழுத்தத்தைக் கூட்டியிருந்தது.

அவரை நேரில் பார்க்கும் பிரயாசையுடன் இருந்தார். அரை மயக்கத்திலும் மனைவி பெயரை அவர் உச்சரிப்பதாகச் சொன்னார்கள், உடனிருந்து கவனித்துக் கொண்ட மருத்துவப் பணியாளர்கள். தனிமை ஒரு கரும் நிழலைப்போல அவருக்கு அருகில் இருந்தது.

“நான் பேச வேண்டிய நேரம் வந்துடுச்சு. சீக்கிரமே எல்லாத்தையும் சொல்லிடணும்” – மருத்துவமனைக்குச் செல்வதற்கு முன்பு, அவரைச் சந்தித்த நாட்களில் அவர் சொன்னது இது. இறுதி நேரத்திலும், தன் இறுதிக் காலத்தைப் பற்றியும் என்ன பகிர்ந்து கொள்ள விரும்பினார்? எதைப் பேச, எழுத பிரயாசைப்பட்டார்? தெரியவில்லை.

-மணா

  • நன்றி: ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ்
Comments (0)
Add Comment