சினிமாவில் எனக்குக் கிடைத்த முதல் வாய்ப்பு!

‘மெட்டி ஒலி’ சோகப் பாடலுக்கு கிடைத்த வரவேற்பில், கொஞ்சமல்ல அதிகமாகவே மெதப்பில் அலைந்தேன். இனி தொடர்ந்து வாய்ப்புகளாகக் குவியும் எனச் சொன்னது கனவு மனது.

அதற்குள் திரைப்படங்களுக்கு பாடல்கள் எழுதி, பட்டுக்கோட்டை, கண்ணதாசன், வாலி, வைரமுத்து எனத் தொடரும் திரைப்பாடலாசிரியர்களின் வரிசையில் என்னையும் அமர வைத்து கோட்டைக் கட்டியது, வெட்கமற்றக் கற்பனை. ஆனால் அவ்வளவு எளிதா அது?

ஒவ்வொருவரிடமும், “நல்லா எழுதுவேன் சார்” என்று கெஞ்சிக் கூத்தாடியும் வாய்ப்பு கிடைக்கவில்லை. சினிமாவில்தான் இல்லை. டிவி தொடர்களிலாவது வாய்ப்பு கிடைக்குமா என்று அலைந்து சோர்ந்திருந்த நேரத்தில்தான், டீ கடையில் அறிமுகமான உதவி இயக்குனர் ஒருவர், “நாங்க ஒரு ஆபிஸ் போட்டிருக்கோம். புது டீம், கிராமத்து கதை, டைரக்டரை பார்க்கிறீங்களா?” என்றார்.

இப்படியொரு வாய்ப்புக்கு காத்துக்கிடந்தவனுக்கு போதாதா இந்த ஒரு வார்த்தை!. அவர் சொன்ன நேரத்தில், சொன்ன இடத்தில் இருந்தேன் மறுநாள். கதாநாயகி தேர்வில் பிசியாக இருந்தார் அந்தப் புது இயக்குனர். மதியம் வரையிலான காத்திருப்புக்குப் பிறகு, அவரைப் பார்க்கும் வாய்ப்புக் கிடைத்தது.

“ட்யூனுக்கு எழுதுவீங்களா?” என்று பலமுறை கேட்டுவிட்டு, அந்த ட்யூனை ஒலிக்கவிட்டார். ஆரவாரமில்லாத காதல் ஏக்கப் பாடல். பிரபல பாடகியின் கணவர் இசை அமைப்பாளராக அறிமுகமாக இருந்த படம் அது. ட்யூன் சிறப்பாக இருந்தது. சில ட்யூன்களில் வார்த்தைகள் வழுக்கும். சில வார்த்தைகளை இழுக்கும். இந்த ட்யூன் இழுப்பதாக இருந்தது. கதையை விளக்கிவிட்டு பாடலுக்கான சிச்சுவேசனை சொன்னார் இயக்குனர்.

பிறகு நான்கு நாட்கள் நேரம் கேட்டுவிட்டு, ட்யூன் கேசட்டை வாங்கிவிட்டு வந்தேன். நிஜமாகவே அந்த இசை சுகமான வார்த்தைகளைச் சுவாரஸ்யமாக இழுத்துக்கொண்டது. இரவு முழுவதும் அதே சிந்தனை. வார்த்தைகளோடு அதிகம் போராடிய நாள் அது. நான்கைந்து பல்லவி, நான்கு சரணங்களுடன் அந்த அறிமுக இயக்குனரைச் சந்தித்தேன். நான் முதலில் எழுதிய பல்லவியையே தேர்வு செய்தார்.

இசையமைப்பாளரை கோட்டூர்புரத்தில் உள்ள அவருடைய வீட்டில் சந்தித்தோம். நான்கைந்து இடங்களில், என் பாடல் மீட்டரில் பொருந்தவில்லை. நெடில் வரவேண்டிய இடத்தில் குறில் பொருந்தவில்லை என்றார். பிறகு அங்கேயே மாற்றிக் கொடுத்தேன். அவருக்குத் திருப்தி.

அடுத்த வாரம் ஷூட்டிங். போய்விட்டு வந்த பிறகு ரெக்கார்டிங் பண்ணிக்கொள்ளலாம் என்று சொல்லிவிட்டார்கள். அதற்குள் நான்கைந்து பேரிடம், சினிமாவில் பாடல் எழுதியிருப்பதாகச் சொல்லிவிட்டேன். என் முதல் திரைப்பாடல் இந்தப் படத்தில் வருகிறது என்று. என்னைப் போலவே அவர்களும் எதிர்பார்த்திருந்தனர். சில மாதங்களுக்குப் பிறகுதான், அந்தப் படம் முதல் ஷெட்யூலோடு டிராப் ஆன விஷயம் எனக்குத் தெரிந்தது.

அடைந்த வேதனைக்கு அளவில்லை. அடுத்தும் இதேபோல புதுமுகங்கள் நடிக்கும் படம். இதைப் போலவே உதவி இயக்குனர் ஒருவரால் அந்த இயக்குனரிடம் அறிமுகப்படுத்தப்பட்டேன். சிச்சுவேஷன் கேட்டு டியூனை வாங்கி, எழுதி, எல்லாம் சரியான பிறகு, அந்தப் படம் தொடங்கப்படாமலேயே போய்விட்டது. இதுவும் எனக்கு தாமதமாகவே தெரிந்தது.

“எனக்கு மட்டும் ஏன் தொடர்ந்து இப்படி நடக்குது?” என்று கலங்கிப் போனேன். பிறகு இன்னும் சில இயக்குனர்களின் கதவைத் தட்டி வாய்ப்பு கேட்டு ஓய்ந்து, “நமக்கு தகுதியில்லையோ?” என்று என்னை நானே நொந்து கொண்டலைந்த நேரத்தில்தான், நண்பர் ஒருவர் உதவியுடன் அந்தப் பிரபலமான இயக்குனரை நுங்கம்பாக்கத்தில் சந்தித்தேன்.

என் சினிமா கனவுகளுக்கு முதன் முதலில் இறக்கைக் கட்டிவிட்ட அந்த இயக்குனர், பலரை அறிமுகம் செய்திருக்கிற பிரபு சாலமன்!

அப்போது ‘லீ’ படத்துக்கான வேலைகளில் அவர் இருந்தார். நடிகர் சத்யராஜ் தயாரிப்பில், அவர் மகன் சிபி சத்யராஜ், நிலா நடிப்பில் உருவாகத் தொடங்கியிருந்தது படம். அலுவலகத்தில் உதவி இயக்குனர்களோடு அமர்ந்திருந்த அவரைச் சந்தித்தேன்.

என்னைப் பற்றி விசாரித்துவிட்டு பிறகு, “விரைவில் அழைக்கிறேன்” என்றார். சொன்னபடியே அழைத்தார். டி.இமான் இசையில் உருவான ட்யூன் இனிமையாகவே இருந்தது. இரண்டு மூன்று நாட்களுக்குப் பிறகு, நான் எழுதியவற்றைக் கொண்டு சென்றேன். முதலில் கொஞ்சம் இலக்கியமாகவே சில பல்லவிகளை அமைத்திருந்தேன்.

இசை அமைப்பாளர் டி.இமான், “கொஞ்சம் எளிமையா இருந்தாதான் மக்களிடம் ஈசியாக ரீச்சாகும்” என்றார். பிரபு சாலமனும் அதை ஏற்றுக்கொண்டார். பிறகுதான் “தண்டோரா தொண்டைக்காரி/ டம்மாரப் பேச்சுக்காரி” என்று வரிகளுடன் அந்தப் பல்லவியை எழுதினேன். அவர்களுக்குப் பிடித்துப் போனது. என் முதல் சினிமா பாடல், குத்துப்பாடலில் ஆரம்பித்தது இப்படித்தான்.

(தொடரும்…)

08.03.2021 2 : 03 P.M

Comments (0)
Add Comment