நினைவில் நிற்கும் வரிகள்:
உலகத்தில் சிறந்தது எது
ஓர் உருவமில்லாதது எது
ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு வீட்டிலும்
அனுபவமாவது அது
(உலகத்தில்…)
ஆளுக்கு ஆளு தருவதுண்டு
அசலுக்கும் மேலும் வளர்வதுண்டு
நாட்டுக்கு நாடு பெறுவதுண்டு
நல்ல நல்ல திட்டங்களும் வருவதுண்டு
அது இல்லையென்றால் எதுவும் இல்லை
தொழிலில்லை முதலில்லை கடனுமில்லை
சொல்லப்போனால் உலகமெங்கும்
வரவில்லை செலவில்லை வழக்குமில்லை
அதன் ஆயுள் கெட்டி மெல்ல எட்டிப்பார்க்கும் எட்டி
அதுபோடும் குட்டி அதன் பேர் வட்டி
(உலகத்தில்…)
வட்டி கொடுப்போரும் வாங்கி முடிப்போரும்
காணத்துடிப்பது அது
சிலர் எட்டி உதைத்தாலும் கட்டி அடித்தாலும்
இதயத்தில் இருப்பது அது
(உலகத்தில்…)
அறிவையும் கெடுப்பது அழகினில் பிறப்பது
அகிலத்தின் பெருங்கதை அது
அன்று ஆதாம் ஏவாள் அடிக்கல் நாட்டிய
ஆனந்த மாளிகை அது
(உலகத்தில்…)
உலகத்தில் சிறந்தது காதல்
அந்தக் காதல் இல்லையேல் சாதல்
உலகத்தில் சிறந்தது காதல்
வட்டி கொடுப்போரும் வாங்கி முடிப்போரும்
மறக்க முடியாதது
காதல் கட்டி அணைப்போகும் கலந்து மிதப்போரும்
கடக்க முடியாதது
(உலகத்தில்…)
உள்ளே உயிர் வளர்த்து உதிரத்தால் பால் கொடுத்து
அள்ளியிடும் போதெல்லாம் அன்பையே சேர்த்தெடுத்து
தொல்லை தனக்கென்றும் சுகமெல்லாம் உனக்கென்றும்
சொல்லாமல் சொல்லியிடும் தேவதையின் கோவில் அது
பண்பு தெரியாத மிருகம் பிறந்தாலும்
பால் தரும் கருணை அது
சிலர் பசித்த முகம் பார்த்து பதறும் நிலை பார்த்து
பழம் தரும் சோலை அது
இருக்கும் பிடி சோறு தனக்கென்று எண்ணாமல்
கொடுக்கின்ற கோவில் அது
தினம் துடிக்கும் உயிர் கண்டு தோளில் இடம் தந்து
அணைக்கின்ற தெய்வம் அது
அது தூய்மை அது நேர்மை அது வாய்மை
அதன் பேர் தாய்மை
உலகத்தில் சிறந்தது தாய்மை அதை
ஒப்புக் கொள்வதே நேர்மை
உலகத்தில் சிறந்தது தாய்மை
உலகத்தில் சிறந்தது தாய்மை
உலகத்தில் சிறந்தது தாய்மை!
– 1967-ம் ஆண்டு ஜெய்சங்கர் நடிப்பில் வெளிவந்த ‘பட்டிணத்தில் பூதம்’ திரைப்படத்தில் இடம்பெற்ற இப்பாடலை எழுதியவர் கவியரசர் கண்ணதாசன்.
08.03.2021 11 : 55 A.M