எழுத்தாளர்கள், படைப்பாளர்களின் பள்ளிப் பிராயம் குறித்தும், அந்தப் பருவம் குறித்த பசுமையான நினைவுகளை அவர்கள் பகிர்ந்து கொள்வதையும் இந்தத் தொடரில் பார்த்து வருகிறோம்.
அந்த வரிசையில் வெற்றிமாறனின் பள்ளிப் பிராயம்.
என் வாழ்க்கையை குறிக்கோளுடன் கூடிய பயணமாக மாற்றிக் கொள்ள பாதை காட்டியவர்கள், எனக்கு என்னையே அடையாளம் காட்டியவர்கள் வரிசையில் முதலில் அம்மா. பள்ளி ஆசிரியர்கள், அவர்களை அடுத்து நண்பர்கள், புத்தகங்கள், சில எழுத்தாளர்கள். எல்லாவற்றையும் தாண்டி சினிமாவிற்கு வரவேண்டும் என்று என்னிடம் கனவாக நிரம்பியிருந்த உணர்வை தீவிரப்படுத்தியவர், அதனை ஒரு தொடர்ந்த அனுபவமாக மாற்றியவர், சினிமாதான் உன் பாதை என வழிகாட்டியவர் அருட்தந்தை ராஜநாயகம்.
லயோலா கல்லூரியில் பி.ஏ. ஆங்கில இலக்கியம் படித்துக் கொண்டிருந்தேன். அடுத்து பி.எல். படிக்கலாம் என்ற ஆசையில் சேர்ந்திருந்தேன். பி.ஏ. படிக்கிற ஒரு மாணவன் 99 கிரெடிட்ஸ் எடுத்திருக்க வேண்டும், அப்போதுதான் அவன் தேர்ச்சி பெறமுடியும். வெறும் பாடங்களை மட்டும் படித்தால் 89 கிரெடிட்ஸ்தான் எடுக்கமுடியும். அதனால் வேறு அலைய்டு படிப்புகளில் சேர்ந்து படிக்கவேண்டும். அதனை நாமே தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். அப்போதுதான் கூடுதல் கிரெடிட்ஸ் வாங்கமுடியும்.
நான் படித்தபோது விஸ்காம் துறையில் டெலிவிஷன் பிரசன்டேஷன் என்று கோர்ஸை அறிமுகப்படுத்தினார்கள். நானும் நண்பர் மார்ட்டினும் சேர்ந்து விண்ணப்பித்தோம். அங்குள்ள மாணவர்களில் பலர் சரளமாக ஆங்கிலம் பேசிக் கொண்டிருப்பார்கள். வசதி வாய்ப்புகள் மிகுந்த பணக்கார வீட்டுப் பையன்களும் பெண்களும் படித்தார்கள். பிரபல இயக்குநர்கள், நடிகர்களின் பிள்ளைகளும் அங்கு படிப்பதைப் பார்க்கமுடியும். இதனால் எங்களுக்கு அந்த வகுப்புகள் பற்றிய தயக்கமும் பதற்றமும் இருந்தது.
அதெல்லாம் முதல் வகுப்பிலேயே காற்றில் பறந்துபோய்விட்டது. “புழுக்கமாக இருக்கிறது வெளியே மரத்தடிக்குப் போய்விடுவோமா?” என்று கேட்டார் அருட்தந்தை ராஜநாயகம். இது மிகப்பெரிய மாற்றமாகத் தெரிந்தது. இப்படி திறந்தவெளி வகுப்புகளில் உட்கார்ந்திருந்த அனுபவமே ஏற்பட்டதில்லை.
அவருடைய அணுகுமுறை பிடித்திருந்தது. ‘திங்கிங் அவுட் ஆப் த பாக்ஸ்’ என்று சொல்வார்களே, அதைத்தான் அவர் செய்தார். வரையறுக்கப்பட்ட எல்லையைத் தாண்டி பார்ப்பதற்குக் கற்றுக்கொடுத்தார். வகுப்பறையை விட்டு வெளியே வந்தது, சுதந்திரமாக கல்வி கற்றலுக்கான ஓர் அடையாளம்.
அடுத்தடுத்த வகுப்புகளில் ஒரு சிச்சுவேஷனை சொல்லி, “காட்சிகளை எழுதி வாருங்கள்” என்று சொன்னார். சக மாணவர்கள் அமைதியாக இருந்தார்கள். “உடனே எழுதவேண்டியதில்லை. டீ குடிச்சுட்டு பிறகு வாங்க. ஆனால் காட்சிகளுடன் வரவேண்டும்” என்றார்.
எந்தப் பேராசிரியரும் இப்படி சொன்னதில்லையே என்று வியப்பாக இருந்தது. நம்பவே முடியவில்லை. நாம் இருக்கவேண்டிய இடம் இதுதான் என்று தோன்றியது. நான் சொல்லிய காட்சியைப் பாராட்டினார். எனக்கோ அப்பாடா! என்றிருந்தது. சினிமாவில் ஆயிரம் சாதித்தாலும், நான் முதன்முறையாக விவரித்த முதல் காட்சி அதுதானே!
ஏதோ நம்பிக்கை துளிர்விட்டிருந்தது. நாம் கடக்கவேண்டிய தூரத்தின் முதல் அடியாக அவருடைய பாராட்டும், காட்டிய அக்கறையும் தெரிந்தன. கேமரா கொடுத்துவிடுவோம். குறும்படம் ஒன்றை எடுத்துவரவேண்டும் என்ற வாய்ப்பு மாணவர்களுக்கு வழங்கப்பட்டது. அடுத்தடுத்து வந்த அவார்டுபோல அது இருந்தது. அதனைப் பயன்படுத்திக் கொண்டோம். அதைத் தொடர்ந்து, அவர் எங்களை கவனிக்க ஆரம்பித்தார்.
கண் தெரியாத ஒரு புல்லாங்குழல் இசைக்கலைஞனுக்கும் அவனுடைய மனைவிக்கும் நடக்கும் உரையாடல். ஒரு நாள் வாழ்க்கை. இதுதான் எங்கள் குறும்படத்தின் கதை. ஆனால் அதற்காக எடுத்து வந்த காட்சிகளில் திருப்தியில்லாமல் இருந்தோம். எடிட்டிங் எதுவுமே வரவில்லை. சினிமா கனவெல்லாம் அவ்வளவுதான் என்ற முடிவுக்கு வந்துவிட்டேன்.
சினிமா நமக்கு வராது என்று நினைக்கத் தொடங்கியிருந்தேன். அதே மனநிலையுடன் அருட்தந்தை ராஜநாயகம் அவர்களைச் சந்தித்தோம். “எடுத்துட்டு வாங்க பார்க்கலாம்” என்றார். எடிட் செய்த குறும்படத்தைப் பார்த்தார். குளோசப் காட்சிகள் எடுக்கவில்லை. நன்றாகத்தான் வந்திருக்கிறது என்று நம்பிக்கை அளித்தார். மீண்டும் துளிர்விட்ட செடியில் ஓரிலை முளைத்த மாதிரி இருந்தது. ஆனாலும் சரியாக செய்திருக்கிறோமா என்ற சந்தேகம் இருந்துகொண்டிருந்ததை தவிர்க்க முடியவில்லை.
அடுத்து ‘லாடம்’ என்றொரு 5 நிமிட படம் எடுத்தோம். டென்னிஸ் பந்துகளைப் பொறுக்கும் சிறுவர்கள் பற்றிய கதை. விளையாடும் வயதில் வாய்ப்பில்லாமல் விளையாட்டுத் திடலில் வேலைபார்க்க நேர்ந்துவிட்ட சிறுவர்கள். முதன்முறையாக நாங்கள் எடுத்த காட்சிகளை பல பேர் பார்க்கும் வாய்ப்பு அப்போதுதான் கிடைத்தது. மெட்ராஸ் சோஷியல் வொர்க் கல்லூரியில் குறும்படப் போட்டி வைத்திருந்தார்கள். அதில் எங்கள் படமும் திரையிடப்பட்டது.
அந்தப் போட்டிக்கு நடுவர்களாக இயக்குநர்கள் மகேந்திரன், பாலுமகேந்திரா, மதன் கேப்ரியேல் ஆகியோர் வந்திருந்தார்கள். எங்கள் படத்துக்கு விருது கிடைக்கவில்லை. என்றாலும், திரையிடப்பட்டதே எங்களுக்கு உற்சாகமாக இருந்தது. பின்னர் எம்.ஏ. படிக்கும்போது இயக்குநர் பாலுமகேந்திரா, லயோலா கல்லூரியில் ஃபிலிம் மேக்கிங் பற்றிய இரண்டு நாள் பயிற்சிப் பட்டறையை நடத்தினார். அதில் ஆர்வத்துடன் கலந்துகொண்டேன்.
அப்போது அவர் சினிமா பற்றி பேசியதும் விளக்கியதும், சினிமாவுக்குப் போனால் அவரிடம்தான் வேலை பார்க்கவேண்டும் என்று உறுதியெடுத்துக் கொண்டேன். அடுத்த சில நாட்களிலேயே பாலுமகேந்திராவிடம் சேர்வதற்கான முயற்சியைத் தொடங்கிவிட்டேன். அது பற்றிய விருப்பத்தை ராஜநாயகம் அவர்களிடம் சொன்னேன். கல்லூரி நாட்களில் கவிதைகள் எழுதி ஒரு தொகுப்பு வைத்திருந்தேன். அதைப் படித்துவிட்டு, “நல்லா இருக்கு” என்று வேறு சொல்லியிருந்தார்.
“தமிழ் தெரிந்த ஒரு பையன் வேண்டும் என்று ஏற்கெனவே அவர் கூறியிருந்தார். நான் அவரிடம் சொல்கிறேன். கவிதைப் புத்தகத்தையும் எடுத்துக்கொண்டு போய் பார்” என்றார் ராஜநாயகம். அதைத் தொடர்ந்து எங்களது மரியாதைக்குரிய இயக்குநர் பாலுமகேந்திராவிடம் உதவி இயக்குநராக பணியில் சேர்ந்தேன். 1997-ஆம் ஆண்டில் அவரிடம் சேர்ந்த நான், ‘அது ஒரு கனாக்காலம்’ வரை பணியாற்றினேன். அவரிடம் சினிமா கற்றுக்கொண்ட காலங்களும் இனிமையான கனாக்காலம்தான்.
கல்லூரிப் படிப்பு, உதவி இயக்குநர், அடுத்து முழுமையான ஓர் இயக்குநராக உயர்ந்தபோதும், நெருக்கடியான தருணங்களில் எல்லாம் ஆறுதலுக்காக நான் தேடும் மனிதர் அருட்தந்தை ராஜநாயகம். அவர்தான் சினிமா பயணத்திற்கான தொடக்கமாக இருந்தார். என் வாழ்க்கையை வடிவமைத்தவர் அவர்தான். அவரே என் ஆசிரியர்.
கல்லூரி வாழ்க்கையைத் தாண்டிப் பார்த்தால் பாலுமகேந்திரா மிகச்சிறந்த பேராசிரியராகத் தெரிகிறார். ஒரு பேட்டியில்கூட, “எங்களிடம் இருப்பது பாலுமகேந்திரா கற்றுக்கொடுத்த சினிமாதான். ஆனால் அதை எங்களுடைய எண்ணத்தில் எடுத்துக்கொண்டிருக்கிறோம். அப்பாவும் நாமும் ஒன்றுதான் என்றாலும் ரேகைகள் வேறுபடுகின்றனவே. வளர்ப்புமுறை, சிறுபிராயத்தில் பார்த்த சினிமாக்கள், உள் மனம் எல்லாமும் சினிமா மொழியை, நாம் இயக்கும் படத்தின் உள்ளடக்கத்தைத் தீர்மானிக்கின்றன. அவருடைய உயரத்துக்கு வரமுடியாது. சின்ன அளவில்தான் அவரை நாங்கள் பின்தொடர்கிறோம்” என்று கூறியிருந்தேன்.
ஆசிரியர்கள் என்மீது தாக்கத்தை ஏற்படுத்தியதுபோல, என் மனப்போக்கை மாற்றியமைத்த இரு புத்தகங்கள் பற்றியும் சொல்லியாகவேண்டும். ஜியாங் ராங் எழுதிய ‘உல்ஃப் டோட்டம்’ என்ற புதினம் பெரும் நிலப்பரப்பில் விரிந்த வாழ்வின் கதையை சொன்னது. அதன்மீதான ஆர்வத்தில் சி.மோகனின் தமிழ் மொழிபெயர்ப்பில் ‘ஓநாய் குலச்சின்னம்’ என்ற தலைப்பில் வெளியிட்டேன். அடுத்து மாணவப் பருவத்தில் படித்த அலெக்ஸ் ஹேலியின் ‘ரூட்ஸ்’ என்ற நூல். சக மனிதன் இன்னொரு மனிதனை எப்படி கொடுமைப்படுத்துகிறான் என்பதைப் புரியவைத்த எழுத்து.
தற்போது மக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ள ‘விசாரணை’ படத்தை எழுத்தாளர் சந்திரகுமாரின் லாக்கப் நாவலைத் தழுவியே எடுத்தேன். “ஒரு நல்ல படம், உன்னை கருவியாக வைத்து அது தன்னைத்தானே உருவாக்கிக்கொள்ளும்” என்பார் பாலுமகேந்திரா. அப்படித்தான் ‘விசாரணை’, என்னை கருவியாக வைத்து உருவாகி மக்களிடம் வெற்றி பெற்றிருப்பதில் மகிழ்ச்சி. இப்படி எல்லாமும் ஒருவகையில் கற்றல்தான். இன்று வரை பல ஆசிரியர்களால் நான் உருவாகி வந்திருப்பதை உணர்கிறேன். அதுதானே உண்மையும்.