தமிழகம், புதுச்சேரி, கேரளா, மேற்குவங்கம், அசாம் ஆகிய 5 மாநிலங்களில் சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ளது. தமிழகம், கேரளா, புதுச்சேரியில் ஒரே கட்டமாக ஏப்ரல் 6-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
இந்நிலையில் வாக்களிக்க வாக்காளர் அடையாள அட்டை இல்லாதவர்கள் ஆதார், மகாத்மா காந்தி ஊரக வேலைத்திட்ட அட்டை, வங்கிக் கணக்குப் புத்தகம் உள்ளிட்ட 11 வகையான அடையாள அட்டைகளை எடுத்துச் சென்று வாக்களிக்கலாம் என இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக தேர்தல் நடைபெற உள்ள மாநில தலைமைத் தேர்தல் அதிகாரிகளுக்கு இந்திய தேர்தல் ஆணையம் கடிதம் எழுதியுள்ளது.
அந்தக் கடிதத்தில், “ஆதார், மகாத்மா காந்தி ஊரக வேலைத்திட்ட அட்டை, வங்கிக் கணக்குப் புத்தகம் உள்ளிட்ட 11 வகையான அடையாள அட்டைகளை எடுத்து சென்று வாக்களிக்கலாம்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாக்களிக்க பயன்படுத்த வேண்டிய ஆவணங்கள்
1.பாஸ்போர்ட்
2. ஓட்டுநர் உரிமம்
3. மத்திய / மாநில / அரசு அலுவலகங்களில் பணியாற்றுவதற்கான அடையாள அட்டை
4. வங்கி / அஞ்சல் அலுவலகம் அளித்த புகைப்படத்துடன் கூடிய பாஸ்புக்
5. பான் கார்டு
6. தேசிய மக்கள்தொகை பதிவின் கீழ் வழங்கப்பட்டுள்ள ஸ்மார்ட்கார்டு
7. MNREGA என்னும் மஹாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறிதியளிப்புச் சட்டம் மூலம் வழங்கப்பட்ட அடையாள அட்டை
8. மத்திய தொழிலாளர் அமைச்சகம் வழங்கும் ஹெல்த் இன்சூரன்ஸ் ஸ்மார்ட்கார்டு
9. புகைப்படத்துடன் கூடிய பென்சன் ஆவணம்
10. எம்.பி/எம்.எல்.ஏ/எம்.எல்.சி-க்களுக்கு அரசு வழங்கும் அடையாள அட்டை
11. ஆதார் அட்டை
என இந்த 11 ஆவணங்களுள் ஏதேணும் ஒரு ஆவணம் வாக்காளர்களுக்கு அவசியமாகும்.
வாக்காளர்கள் தங்களது அடையாள அட்டை இல்லையே என்று வீட்டிற்குள்ளேயே இருந்து விட வேண்டாம். வாக்களித்து ஜனநாயகக் கடமையை நிறைவேற்றுவோம் என இந்தியத் தேர்தல் ஆணையம் அழைப்பு விடுத்துள்ளது.
06.03.2021 12 : 25 P.M.