எனக்கு மட்டுமே தெரிந்த எம்.ஜி.ஆர்: தொடர்-27
தலையணையை தலையில் சுமந்த இவருக்கு மிகச்சிறிய வயதிலிருந்தே உண்மையில் விளையாட்டில் ஆர்வம் உண்டு.
“சடுகுடு விளையாட்டில் நான் தான் கில்லாடி. மூச்சுப் பிடித்து பாட்டுப் பாடி நடுக்கோட்டைத் தாண்டி எதிர் தரப்புக்குள் புகுந்து சூறாவளியாய்ச் சுற்றிச் சுழன்று, ஏக காலத்தில் எதிரிகள் அத்தனை பேரையும் இழுத்துக் கொண்டு வந்து நடுக்கோட்டை தொடும் வரை ‘தம்’ பிடித்து நிற்பேன். எதிர்தரப்பினர் அத்தனை பேரையும் ‘அவுட்’டாகாமல் திரும்பியதே இல்லை” என்று குழந்தையைப் போல இந்தத் தோட்டத்து நாயகர் என்னிடம் சொன்னது உண்டு.
கிட்டிப்புள், குதிரைக் கல், குறிபார்த்து ஆடும் கோலி விளையாட்டு அத்தனையிலும் இவர் தான் ராஜா.
அந்தக் காலத்திலிருந்த அந்த ஆர்வமே எதிர்காலத்தில் அவர் இருந்தவரை எல்லாவற்றிலும் எதிரொலித்தது.
எந்த ஒன்றிலும் தன்னைத் தகுதியுடையவராக ஆக்கிக்கொள்ள வேண்டும் என்பதில் குறியாக இருப்பார்.
குதிரைச் சவாரி பழகிக்கொள்ள வேண்டும் என்று முடிவு எடுத்து விட்டால் ஸ்டுடியோவில் இருக்கிற குதிரைகளோடு தான் எப்போதும் இருப்பார்.
இரவும் பகலும் பயிற்சி பெற்று அதில் நிறைவு அடையாமல் அவர் திரும்ப மாட்டார். அதுபோலவே சைக்கிள் ஓட்டக் கற்றுக்கொள்ள வேண்டும் என்று ஒருமுறை முடிவு செய்தார். அதைக் கற்றுக் கொள்ளாமல் திரும்பவே இல்லை. முதன் முதலில் அவருக்கு சைக்கிள் ஓட்ட கற்றுக் கொடுத்தது யார் என்று கேட்டால், உங்களுக்கு எல்லாம் ஆச்சரியமாக இருக்கும். கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் அவர்கள்தான் இவருக்கு சைக்கிள் ஓட்ட கற்றுக் கொடுத்தார்.
அதுபோலவே தன் உடலை வலிமையோடும், கட்டுக்குலையாமலும் என்றும் இளமையாகத் தன்னை வைத்துக் கொள்ள வேண்டும் என்ற ஆசை அவருக்கு எப்போதும் உண்டு. அது எப்படி ஆரம்பமானது என்பதை சிரித்துக்கொண்டே ஒருமுறை சொன்னார்.
“நந்தா ராம் பயில்வான் என்ற நடிகர் இருந்தார். அழுத்தம் திருத்தமாய் அழகாக இருப்பார். அவரைப் பார்த்துத் தான் அவரைப் போலவே நானும் இருக்கணும்னு விசேஷ தேகப்பயிற்சி செய்ய ஆரம்பித்தேன்” என்று சொன்னார்.
இப்படி எந்தத் துறையை எடுத்தாலும் அதில் ஒரு சிறந்த மனிதரைப் பார்த்துவிட்டால் நானும் அவரைப் போல் ஆக வேண்டுமென்ற உறுதி இவரிடத்தில் இயற்கையாகவே இருந்தது.
எந்த ஒரு நல்லவரைப் போலவும் இவர் ஆகிவிட முடியும். எந்த ஒரு சிறந்த மனிதரை விடவும் இவர் சீரோடு விளங்க முடியும் என்பதே நம் எல்லோருக்கும் தெரியும். ஆனால் இவரைப் போல் இன்னொருவர் இந்த யுகத்தில் இருக்க இயலுமா? இவருக்கு இவர்தான் உதாரணம். இதை நான் உங்களுக்குச் சொல்லித் தெரிய வேண்டியதில்லை.
அப்போது ரிக்ஷாக்காரர்கள் மீது ஏகக் கெடுபிடி நடந்து கொண்டிருக்கிறது. ரிக்ஷாகாரர்களுக்கு உரிமம் வழங்கப்படவில்லை என்று ஒருபக்கம் அவர்களின் இயக்கமே நின்று போனது.
எது எப்படியோ ‘ரிக்ஷாக்காரன்’ படம் வெற்றி கண்ட பிறகு சென்னை நகர ரிக்ஷாக்காரர்கள் ஒன்றிணைந்து ஏறக்குறைய 6 ஆயிரம் பேருக்கு இந்தத் தோட்டத்தில் இருந்து மழைக் கோட்டுகளை மனமுவந்து வழங்கினார்.
ரிக்ஷா தொழிலாளர்களுக்கு கூட்டுறவு முறையில் ரிக்ஷாக்களை வாங்கிக் கொடுத்து, எந்தத் தொழிலாளியும் எவரிடத்திலும் கைகட்டி நிற்கக் கூடாது என்ற நோக்கோடு, அந்த ரிக்ஷாகளுக்கு அவர்களையே சொந்தக்காரர்கள் ஆக்கினார்.
இன்றைக்கும் இந்தத் தொழிலாளர்களின் மனதில் இது நிச்சயமாக நிறைந்திருக்கும். ‘மழைக் கோட்டு தந்த மகராசன்’ என்று எனது இதயத்து மன்னரை இந்தத் தொழிலாளர்கள் அன்றுதொட்டு இன்றுவரை போற்றுவதை நான் அறிவேன்.
“இவர்களை முழுவதும் புரிந்து கொண்டவன் நான். இவர்களின் கால்களையும் கைகளையும் வணங்குகிறவன் நான்” என்று என் அன்பு நாயகர் சொன்னதுண்டு.
மக்களால் உயர்ந்தவர்கள் அனைவரும் அதை உரிய முறையில் உணர வேண்டும்.
16.10.1988