மனிதர்களின் பல ஆண்டுக்கால கடும் உழைப்புக்கும் தியாகத்திற்கும் ஒருநாள் பலன் இருக்கத்தான் செய்கிறது. நீங்கள் ஒரு மிகச்சிறந்த எலிப்பொறியை பெரிய காட்டுக்குள் செய்தாலும், அதை உலகமே ஒருநாள் கண்டுகொள்ளும். அப்படித்தான் 9 சிறந்த சேவையாளர்களுக்கு அசூபா மேலாண்மை நிறுவனம் சாதனையாளர் விருதுகள் வழங்கி மரியாதை செய்துள்ளது.
அண்மையில் சென்னை எழும்பூரில் டாக்டர் அமீர் ஜஹான், கஸாலி, நகைச்சுவைக் கலைஞர் தங்கதுரை, பின்னணிப் பாடகர் அரவிந்த் உள்ளிட்ட பிரபலங்கள் முன்னிலையில் நடந்த விழாவில் சாதனையாளர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.
தமிழக கல்விச்சூழலில் அரசுப் பள்ளிகளின் மேம்பாட்டுக்காக ஓய்வின்றி எழுதியும் பேசியும் உழைத்தும் வருகிற ஆசிரியை உமா மகேசுவரி, நடிப்புக் கலையைக் கற்பிக்கும் வினோத், பிட்னஸ் உலகில் இளைஞர்களை ஊக்குவிக்கும் சித்தார்த், பேஷன் உலகில் சிறந்தவர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் ஸ்நேகா, சமூக சேவைக்காக அசோக், கிராமப்புற வளர்ச்சிக்காக எழுதிவரும் பவானி, குத்துச்சண்டை வீராங்கனை ரேவதி மற்றும் வடசென்னையில் ராப் மூலம் கலக்கும் விஜே விஜய் ஆகியோருக்கு விருதுகள் வழங்கப்பட்டன.
“கடந்த ஒரு மாதமாக எங்களுடைய குழுவினர் தமிழகம் முழுவதும் தேடி சாதனை மனிதர்களைக் கண்டறிந்தனர். அவர்கள் உழைப்பையும் அர்ப்பணிப்பையும் கொண்டவர்களாக இருந்தார்கள்.
அவர்கள் சமூக வலைத்தளங்களில் இல்லை. பெரிய புகழோ, பொருளாதாரப் பின்னணியோ இல்லை. ஆனால் அவர்கள் தங்கள் செயல்பாடுகளால் உயர்ந்துள்ளனர்” என்கிறார் விருதுகள் வழங்கிய அசூபா மேலாண்மை நிறுவனத்தின் நிறுவனர் அசூபா.
தாய் இணையதளத்திடம் பேசிய சாதனையாளர் விருது பெற்ற ஆசிரியை உமா மகேசுவரி, “விருது என்று கூறி என்னை அணுகியபோது முதலில் மறுத்தேன். ஏற்கனவே பல விருதுகள் என்னைத் தேடி வந்துள்ளன. அதேபோல எங்களுடைய A3 அமைப்பு மற்றவருக்கு விருதுகளைத் தரும் பணியையும் செய்து வருகிறது. நாம் பிறருக்கான வாய்ப்பைப் பறிக்கக்கூடாது என்பதால் மறுத்தேன்.
ஆனால் மக்கள் ஊடக மையத்திலிருந்து சித்ரவேல், கொரோனா ஊரடங்கு காலத்திலும் விடாமல் இயங்கிக் கொண்டுள்ள உங்களை அங்கீகரிக்க வேண்டும் என்றார். விருது தரும் நிறுவனமும் ஓர் இளம் பெண் தொழிலதிபரால் நடத்தப்படுவதும் கூடுதல் சிறப்பு.
A3 அமைப்பின் பணிகளுக்காகத் தலைமைப் பண்புகளுக்கான சாதனை விருதாக வழங்கப்பட்டதில் பெருமிதம். அரசுப் பள்ளிகள் பற்றிய விழிப்புணர்வையும் அக்கறையையும் ஏற்படுத்த விருது மேடையைப் பயன்படுத்திக் கொண்டேன்” என்றார்.
– சங்கத்தமிழ்
05.03.2021 02 : 30 P.M