சதுர பிரபஞ்சம்: ஒரு காட்டுப் பறவையின் பாடல்கள்

சென்னைப் புத்தகக் காட்சி நூல் வரிசை: 6

கோ.வசந்தகுமாரன், எதார்த்த வாழ்வின் அனுபவங்களைக் கவித்துவம் ததும்பும் கவிதைகளாக எழுதும் சமகாலக் கவி. தஞ்சாவூருக்கு அருகிலுள்ள ஒரத்தநாடு சொந்த ஊர். அரசுப் பணியில் இருந்தாலும் எழுதுவதின் மூலம் வாழ்க்கையை உயிர்ப்புடன் வைத்திருக்கிறார். வசந்தங்களை மட்டும் எழுதாமல் மனித வாழ்வின் வருத்தங்களையும் சிக்கனமான வார்த்தைகளால் கவிதை செய்திருக்கிறார்.

முதல் கவிதைத் தொகுதி ‘பாலைவனத்துப் பூக்கள்’. அடுத்து ‘சொந்த தேசத்து அகதிகள்’, ‘மனிதன் என்பது புனைபெயர்’, ‘மழையை நனைத்தவள்’ தொகுப்புகளுக்குப் பிறகு அழகிய வடிவமைப்புடன் நேர்த்தியான அச்சில்  குறுங்கவிதைகள் கொண்ட நூலாக ‘சதுர பிரபஞ்சம்’ வெளிவந்திருக்கிறது.

திருப்பூர் தமிழ்ச் சங்க விருது, தமுஎச விருது, மனித வள மேம்பாட்டுத் துறையின் உதயபாரதி தேசிய விருது என விருதுகளும் பரிசுகளும் பெற்றாலும், எமக்குத் தொழில் கவிதை என்ற கொள்கையுடன் எழுதிவரும் வசந்தகுமாரன், மழையை நனைத்தவள் தொகுப்பில் காதல் ரசம் சொட்டச் சொட்ட கவிதைகள் எழுதித் தீர்த்துள்ளார். சதுரப் பிரபஞ்சத்தில் அனுபவச்சாறை பிழிந்து கவித்துவம் குறையாமல் தந்திருப்பதில் வென்றிருக்கிறார்.

“சிறகுகள் நரைத்த

ஒரு காட்டுப் பறவையின்

தீப்பிடித்த

பாடல்கள் இவை

இதய யாழ் கொண்டு

இசையமைத்துக் கொள்ளுங்கள்”

-என்ற கவிதையுடன் தொடங்கும் சதுர பிரபஞ்சம், 230 பக்கக் கவிதை நூல். இவரது கவிதைகளில் பொங்கி வழியும் ரொமான்டிக் தன்மை தத்துவமும் பேசுகிறது. சில இடங்களில் வாழ்வின் நிரந்தரமற்ற நிலையையும் தொட்டுக்காட்ட தவறுவதில்லை.

“எல்லாவற்றையும் கவிஞனே சொல்லி முடித்துவிடும் போக்கிலிருந்து மாறி, பாதி கவிதையை நீங்கள் சொல்லி, மீதி கவிதையை வாசகன் பங்கேற்று எழுதி முடிப்பதற்கான வாய்ப்பை இந்தக் கவிதைகளில் தந்திருக்கிறீர்கள்.

இதனால் கவிஞன் பயன்படுத்தும் எந்தச் சொல்லிலும் வாசகனின் சொல்லப்படாத சொல்லும் பங்கேற்று கவிதை பன்முக அர்த்த பரிமாண விஸ்தீரணங்களைப் பெற்றுச் சிறக்கிறது” என்று கலை விமர்சகர் இந்திரன் முன்னுரையில் குறிப்பிடுவதை கவிதைகளை வாசிக்கும்போது நீங்கள் கண்டுணரலாம்.

“றெக்கையில்லாவிட்டால் என்ன

இன்னொரு கிரகத்திலிருந்து

பார்க்கிறவனுக்கு

நீ வானத்தில் இருப்பாய்”

என்ற கவிதை சோர்வுற்ற மனிதர்களின் ஆத்மாவில் நம்பிக்கைத் திரியை ஏற்றி வைக்கிறது. நம்பிக்கை, நம்பிக்கையின்மை, எதார்த்தம், எதார்த்தமின்மை, காதல், காமம், ஏமாற்றம் எனச் சிறு கவிதைகளின் வழியாக வாழ்வின் பெருஞ்சித்திரத்தை வரைகிறார் கவிஞர் வசந்தகுமாரன்.

“உதிர்ந்துகிடந்த

இறகெடுத்து

ஒரு பறவையை வரைந்தேன்

சிறகடிக்க

ஒரு வானத்தை

வரைந்துகொண்டது

அந்தப் பறவை”

என்ற கவிதையில் மிகப்பெரிய கற்பனை நமக்குள் குடிபுகுந்து விடுகிறது. ஒரு சில கவிதைகளை கூடுதல் வரிகளுடன் எழுதியிருக்கலாமே என்ற எண்ணத் தோன்றுகிறது.

“ஆயிரம் சிறகுகள் தரித்த பறவை நான்,

கூண்டுக்குள் இருக்கிறது என் வானம்”

என்ற கவிதை காட்சி ரீதியான அனுபவத்தை வாசகனுக்கு வழங்குகிறது. அவரது கவிதைகள் அனைத்திலும் வார்த்தைகள் புதுப்புது வண்ணங்களைப் பூசிக்கொள்கின்றன.

சுண்டக் காய்ச்சிய குழம்பைப்போல வார்த்தைகளைப் பயன்படுத்துவதில் அவருக்கு நேர்ந்திருக்கிற எழுத்துத் தேர்ச்சி கவிதைக்கு ரசனை கூட்டுகிறது. எதார்த்த வாழ்வின் தரிசனத்தை மூன்று வரிகளிலேயே கவிதைகளுக்குள் சுருக்கி வைத்திருப்பது வித்தையாகத் தெரிந்தாலும், அங்கே நீண்ட கவிதைகளின் தவிப்பை உணரமுடிகிறது.

‘சதுரப் பிரபஞ்சம்’

ஆசிரியர்: கோ. வசந்தகுமாரன்

வெளியீடு: டிஸ்கவரி புக் பேலஸ், 6 மகாவீர் காம்ப்ளக்ஸ்,
முனுசாமி சாலை, கே.கே.நகர். சென்னை – 78.
விலை: ரூ. 200

05.03.2021  1 : 30 P.M

Comments (0)
Add Comment