கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் தமிழகத்தில் தற்போது வெகுவாக குறைந்துள்ள நிலையில் தொற்று ஏற்படாமல் இருக்க தடுப்பூசிகள் போடப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், “கொரோனா இல்லை என்ற எண்ணம் யாருக்கும் இருக்க வேண்டாம்” என சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், “கொரோனா தடுப்பூசியை சுகாதாரப் பணியாளர்கள் 75 சதவீதம் பேர் செலுத்திக் கொண்டனர். அதேபோல் முன் களப்பணியாளர்கள், தேர்தல் பணியில் ஈடுபட உள்ளவர்களும் கொரோனா தடுப்பூசி போட்டு வருகிறார்கள்.
முதியவர்கள், இணை நோய் உள்ளவர்களுக்கும் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. சென்னையைப் பொருத்த வரையில் 39 ஆயிரம் தெருக்களில் 1000 தெருக்களில்தான் 5 முதல் 6 வரை கொரோனா தொற்று பாதிக்கப்பட்டோர் இருந்து வருகின்றனர்.
திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கோவை, திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் தொற்று குறையாமல் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
குடும்ப நிகழ்ச்சிகளில் அதிக அளவு பங்கு கொள்பவர்கள், முகக் கவசம் அணியாதவர்களுக்கு தான் பாதிப்பு அதிகம் இருப்பதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது.
பேருந்தில் பயணம் செய்பவர்கள், உணவகங்கள், புத்தகக் கண்காட்சியில் கூட பெரும்பாலும் முகக்கவசம் அணிவதில்லை. முடிந்தவரை சமூக இடைவெளி விட்டு முகக் கவசம் அணிந்திருங்கள். தற்போது கொரோனா இல்லை என்ற எண்ணம் யாருக்கும் இருக்க வேண்டாம்” எனக் கூறியுள்ளார்.
04.03.2021 04 : 50 P.M.