‘ஏழையின் சொல் அம்பலம் ஏறாது’ என்ற பழமொழியை நம்புபவர்கள் எந்தக் காலத்திலும் உண்டு. அதனைத் தகர்க்க நினைப்பவர்கள் அனைவருமே அதிகார பீடத்துக்கு பகை ஆவார்கள்.
போராட்டத்தையும் புரட்சியையும் ஆட்களைத் திரட்டும் அமைப்புகளையும் ‘அலர்ஜி’யாக கருதும் ஒரு சாதாரண தொழிலாளி, அதிகாரத்தை கைக்குள் வைத்துக்கொள்ளத் துணியும் ஆலை முதலாளியை எதிர்க்கிறார் என்பதைப் படிப்படியாக விளக்குகிறது ‘சங்கத்தலைவன்’ திரைக்கதை.
பொதுவுடைமை சிந்தனையைப் பேசும் திரைப்படங்கள் சமகால நிகழ்வுகளுக்கு ஏற்றவாறு கருத்துகளைத் தாங்கி வரும். அந்த வகையில், துணி நெய்யும் ஆலையொன்றில் நிகழும் சுரண்டல்களையும் பாதுகாப்பற்ற பணிச்சூழலையும் இத்திரைப்படம் சுட்டிக்காட்டுகிறது.
பூஜ்யத்தில் இருந்து ஒன்று வரை..!
தாய் இறந்தபின்னர் தந்தை (இயக்குனர் ராம்தாஸ்) இரண்டாவது திருமணம் செய்துகொண்டதால், வீட்டை விட்டு ஓடிப்போனவர் ரங்கநாதன் (கருணாஸ்). மின்சார வாரியத்தில் வேலை செய்யும் கோவிந்தன் நடத்திவரும் துணி ஆலையில் வேலை செய்கிறார்.
ஒருநாள் ஆலையில் மின்சாரம் தடைபட, போதிய வெளிச்சம் இல்லாமல் ஜெனரேட்டர் வைத்து எந்திரங்களை இயக்குகின்றனர். அப்போது, எந்திரத்தில் சேலை சிக்கி இடது கையை இழக்கிறார் திவ்யா என்ற பெண் தொழிலாளி.
திவ்யாவை தனியார் மருத்துவமனையில் சேர்க்கும் ஆலை முதலாளி, அவரது தந்தைக்கு ஆயிரங்களைக் கொடுத்து சரிக்கட்ட நினைக்கிறார். ஆனால், அந்த ஏழைப் பெண்ணின் வாழ்க்கை சிதறிவிடக் கூடாது எனும் நோக்கத்தில், இதுபற்றி ஆலைத் தொழிலாளர் சங்கத்தலைவர் சிவலிங்கத்துக்கு (சமுத்திரக்கனி) தகவல் கொடுக்கிறார் ரங்கன்.
இதனால், வேறு வழியில்லாமல் திவ்யாவுக்கு லட்சங்களில் நிவாரணத் தொகை வழங்குகிறார் முதலாளி. இச்செயலின் பின்னால் இருந்தது ரங்கன் என்று அறியும்போது, அவரது கோபம் பன்மடங்காகிறது.
ஒருமுறை ஆலையில் தீப்பற்ற, ரங்கனை கைது செய்கிறது போலீஸ். அவர் நிரபராதி என்று தெரிந்தபிறகும், அந்த வழக்கில் சிக்க வைக்கும் சதி நடக்கிறது.
அதிலிருந்து தப்பிக்கும் ரங்கன், ஆலைத் தொழிலாளர்களின் நல்வாழ்வை லட்சியமாகக் கொண்டு அச்சங்கத்தில் சேர்கிறார். ஒரு போராட்டத்தின்போது சிவலிங்கம் கைது செய்யப்பட, அந்த பொறுப்பை ரங்கன் ஏற்கிறார். அதன்பின் என்ன நடக்கிறது என்பதை சொல்கிறது மீதமுள்ள திரைக்கதை.
கலவையான வரவேற்பு!
சங்கத்தலைவராக சமுத்திரக்கனி நடித்தாலும், கதை என்னவோ கருணாஸை சுற்றியே நகர்கிறது.
இப்படத்தில் மத்திய வயது ஆண் வேடத்தை வெகு அலட்சியமாகக் கையாண்டுள்ள கருணாஸ், தன் நடிப்பால் அப்பாத்திரத்தை உண்மைக்கு நெருக்கமாக்கி இருக்கிறார். கூடவே, நல்லதொரு குணசித்திர நடிகரை ‘மிஸ்’ செய்கிறோம் என்ற உணர்வை ஏற்படுத்தியிருக்கிறார்.
புலிக்குத்தி பாண்டி உட்பட சமீபத்தில் தான் நடித்த அரை டஜன் படங்களை நினைவூட்டுகிறார் சிவலிங்கமாக வரும் சமுத்திரக்கனி.
சிவலிங்கம் மனைவியாக நடித்திருக்கிறார் பிரபல தொகுப்பாளினி ரம்யா சுப்பிரமணியன். என்னதான் கிராமத்து பெண்ணாக நடித்தாலும், பியூட்டி பார்லரில் இருந்து வந்தது போன்ற தோற்றம் அவரை அந்நியப்படுத்துகிறது.
சிற்றூரில் இருக்கும் ஆலை முதலாளிகளை பிரதியெடுத்தது போன்றிருக்கிறது மாரிமுத்துவின் நடிப்பு. அவரது அண்ணி, மகன் வேடத்தில் நடித்த விக்ரம் ஆனந்த் ஆகியோர் திரைக்கதையோடு பாந்தமாகப் பொருந்திப் போகின்றனர்.
கருணாஸை காதலிக்கும் வேடத்தில் நடித்த சுனு லட்சுமி கச்சிதமாக உணர்வுகளை வெளிப்படுத்துகிறார். “மத்தவங்க போடுற சோத்தை சாப்பிட்டுகிட்டு இருக்க என்னால முடியாது” எனும் வசனத்தின் இடையே சாதீய உணர்வை அவர் வெளிப்படுத்துகையில் நுணுக்கம் தெரிகிறது.
மறைந்த நடிகர் பாலாசிங், சீனுமோகன் இருப்பு படம் தயாராகி வெகுகாலமானதை வெளிக்காட்டுகிறது.
ஒவ்வொரு காட்சியும் கதையை நகர்த்த உதவுகிறது என்றபோதும், இறுதியாக வரும் பதினைந்து நிமிடங்கள் கலவையான உணர்வை உருவாக்குகின்றன. சாதாரண மனிதன் சங்கத்தலைவன் ஆவதாகக் காட்டினாலும், இறுதியில் அது எதிர்மறையான எண்ணமே மனதில் தங்குகிறது.
நாவலைத் தழுவி..
பாரதிநாதன் எழுதிய ‘தறியுடன்’ நாவலை தழுவி இதன் திரைக்கதையை அமைத்திருக்கிறார் இயக்குனர் மணிமாறன். வசனங்களையும் அதனைக் கொண்டே அமைத்திருக்கிறார்.
நெய்யப்படும் வேட்டியின் அடர்த்தி அதிகமானால் பணியாளர் வேலை செய்யும் நேரம் அதிகமாவது, துணியின் தரத்தைக் காரணம் காட்டி சம்பளத்தைக் குறைப்பது, குறைந்தபட்ச பாதுகாப்பு அல்லது காப்பீடு இல்லாமல் பணியாற்ற வைப்பது போன்ற விஷயங்களை ஆங்காங்கே சொல்லியிருப்பது அழகு.
போலவே, எந்த முதலாளியும் சாதியை வைத்து தொழிலாளிக்கு சம உரிமை தருவதில்லை என்று பொட்டிலறைந்தாற்போல சொல்லியிருப்பது நல்ல விஷயம்.
தன்னை அடித்து உதைத்த காவல் துறை அதிகாரிக்கு எதிராக நீதிமன்றத்தில் சாட்சியம் அளிப்பதாக கருணாஸ் கூறும் காட்சி கச்சிதமாக உருவாக்கப்பட்டுள்ளது.
ஆர்.கே.விஜய்முருகனின் கலையமைப்பு, ஜி.பி.வெங்கடேஷின் படத்தொகுப்பு, ஸ்ரீனிவாசன் தேவாம்சத்தின் ஒளிப்பதிவு, ராபர்ட் சற்குணத்தின் இசை அனைத்தும் இயக்குனரின் பார்வையைத் தாங்கிப் பிடிக்கின்றன.
நேர்கோடாக திரைக்கதை பயணித்தாலும், சமுத்திரக்கனி சிறை சென்றபிறகு கருணாஸ் அப்பொறுப்புக்கு வருவதை இன்னும் ஆழமாகத் திரையில் காட்சிப்படுத்தியிருக்கலாம். அதனை தவறவிட்டிருப்பதால், கடைசிகட்ட காட்சிகள் 80களில் வெளியான திரைப்படங்களைப் பார்க்கும் உணர்வை ஏற்படுத்துகிறது.
வாசிப்பாளர்களிடையே வரவேற்பு பெற்ற நாவல் திரைப்படமாகும்போது, மூலத்தில் உள்ள உணர்வு கிடைக்காதது போன்று தோன்றும். சங்கத்தலைவனும் அதற்கு விதிவிலக்கல்ல.
ஆனாலும், நூற்பு ஆலைத் தொழிலாளர்களின் சமகால பிரச்சனைகளை இன்னும் அடர்த்தியாகப் பேசியிருக்கலாம் என்றெண்ண வைப்பது படத்தின் அனைத்து ப்ளஸ் பாயிண்ட்களையும் பின்னுக்கு தள்ளுகிறது.
- உதய் பாடகலிங்கம்
04.03.2021 03 : 50 P.M