கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் 20-ம் தேதி ஐ.நா-வில் நடைபெற்ற கூட்டத்தின்போது, உலக நாடுகள் ஒன்றிணைந்து அரிய வனவிலங்குகளைப் பாதுகாக்கும் பொருட்டு ஒரு ஒப்பந்தத்தை உருவாக்கின.
சர்வதேச வர்த்தக சாசனத்தில் ஒப்பந்தம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, மாா்ச் 3-ம் தேதியை ‘உலக வனவிலங்கு’ தினமாக ஐ.நா அறிவித்தது.
அதன்படி உலகம் முழுவதும் வனவிலங்கு தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.
வனவிலங்குகளின் பாதுகாப்பை அடிப்படையாகக் கொண்டு, ஆண்டுதோறும் ஒவ்வொரு ‘கரு’வில் இந்த தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.
அந்த வகையில், இந்தாண்டு, ‘காடுகளை நம்பியுள்ள உயிரினங்களின் வாழ்வாதாரத்தை பாதுகாத்தல்’ என்ற கருத்தை மையப்படுத்தி வனவிலங்கு தினம் கொண்டாடப்பட்டது.
2019 நவம்பர் தொடங்கி, 2020 ஜனவரி வரை ஆஸ்திரேலியாவில் ஏற்பட்ட காட்டுத்தீயில் சிக்கி பறவைகள், விலங்குகள், ஊர்ந்து செல்லும் மிருகங்கள் உள்ளிட்ட 50 கோடி விலங்குகள் வரை உயிரிழந்ததாகவும், சுமார் 480 மில்லியன் பாலூட்டிகள், பறவைகள் மற்றும் ஊர்வன போன்றவை தீ விபத்தால் பாதிக்கப்பட்டிருக்கும் எனவும் அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகின.
அப்பகுதியில் உயிரிழந்த வன விலங்குகளைத் தவிர தீக்காயத்தால் பாதிக்கப்பட்டும், தீ விபத்தால் தங்கள் இருப்பிடங்களை இழந்தும் லட்சக்கணக்கான வனவிலங்குகள் காட்டுப் பகுதியில் சுற்றி வந்தது பாா்ப்போாின் மனதை உலுக்கியது.
மேலும் மனித செயல்பாடுகளால் சுற்றுச்சூழல் அமைப்புகளுக்கு முக்கியத்துவம் வாய்ந்த 14 வகையான உயிரினங்கள் அழிவின் விளிம்பில் இருக்கின்றன.
தேனீக்கள், ஒட்டகச் சிவிங்கிகள், பெரிய குரங்குகள், கடல் ஆமைகள், பூச்சிகள், பறவைகள், ஓட்டுமீன்கள், சுறாக்கள், யானைகள், திமிங்கலங்கள், பவளப் பாறைகள், மீன்கள் மற்றும் செடிகள் உள்ளிட்ட 14 வகையான உயிரினங்கள் மனிதர்களின் சுயநல செயல்பாடுகளால் பெரியளவில் அச்சுறுத்தப்படுவதாகக் கூறப்படுகிறது.
வனவிலங்குகள் அதிகளவில் அழிந்து வருவதால், விலங்குகளைப் பாதுகாக்க வேண்டியது மிகவும் அவசியம் என்பதை உணரும் வகையில் விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன.
காடுகளையும், விலங்குகளையும் காப்பது குடிமக்களாகிய நம் ஒவ்வொருவரின் கடமை என்பதை உணா்ந்து சுற்றுச்சூழலை பாதுகாத்து வனவிலங்குகளைப் பேணிக் காப்போம்.
04.03.2021 12 : 40 P.M