‘கால்ஸ்’: இடைவேளைக்குப் பின் கிடைக்கும் இணைப்பு!

ஒரு திரைப்படத்தின் கரு முழுக்கதையாக விரியும்போது எப்படி வேண்டுமானாலும் மாறும் சாத்தியமுண்டு. அப்படி உருப்பெறும் படைப்பு அரைகுறை திருப்தியைத் தந்தால் எப்படியிருக்கும் என்பதற்கான உதாரணமாகி இருக்கிறது ‘கால்ஸ்’.

சமீபத்தில் மறைந்த விஜே சித்ரா இதில் பிரதான வேடமேற்றிருக்கிறார். அந்த வகையில், அவரது திறமைக்கு அஞ்சலி செலுத்தும் விதமாகவும் உள்ளது இப்படைப்பு.

விளம்பரதாரர் அழைப்புகள்!

மொபைல் எண் இணைப்பை பெற்றவுடன் தனியார் வங்கிகள், நிறுவனங்கள் என்று ஏதாவது ஒரு பொருளை, திட்டத்தை மக்களிடம் விற்க அலையும் கும்பலின் அழைப்புகளைச் சந்தித்தே ஆக வேண்டும். அவ்வாறு மொபைலில் தொடர்பு கொள்ளும் பணியாளர்கள், சம்பந்தப்பட்டவர்கள் எத்தகைய சூழலில் இருக்கின்றனர் என்பதை அறியாமல் தங்களது கடமைகளை செவ்வனே மேற்கொள்வார்கள்.

அப்படியொரு நிறுவனத்தில் வேலை செய்கிறார் நந்தினி கோவிந்தன் (வி.ஜே. சித்ரா). தங்களது இணைய இணைப்பை புதுப்பிக்குமாறு, பெறுமாறு வாடிக்கையாளர்களை அழைத்துப் பேசுவது இவரது பணி.

தினமும் குறிப்பிட்ட வாடிக்கையாளர்களை அடைய வேண்டுமென்பது அவருக்கான இலக்கு. அதனை அடையமுடியாமல் தவிக்கிறார் நந்தினி.

ஒருநாள், குறைந்தபட்சம் 20 பேரையாவது இணைப்பு பெற சம்மதிக்க வைக்காவிட்டால் வேலை பறிபோய்விடும் என்று எச்சரிக்கிறார் நிறுவன மேலாளர் (நிழல்கள் ரவி). தன்னை சுற்றியிருப்பவர்களின் நலத்தை விரும்பும் நந்தினி, அன்றைய தினம் வெவ்வேறு நபர்களுக்கு போன் செய்கிறார்.

அவர்களில் பெரும்பாலானோர் வாழ்வா, சாவா சிக்கலில் இருக்கின்றனர். அவர்களோடு பேசும்போதே, இதுநாள்வரை தன் வாழ்வில் சந்தித்த பிரச்சனைகளை உடன் வேலை செய்யும் தோழியோடு (தேவதர்ஷினி) பகிர்கிறார் நந்தினி.

அதனால், பல ஆண்டுகள் மனநலம் சிதைந்து இருந்ததாகச் சொல்லும்போது அதிர்ச்சி பல மடங்காகிறது. இதற்கு நடுவே, பெண் பித்தர்களாக திரியும் 4 இளைஞர்கள் மர்மமான முறையில் கொலை செய்யப்படுகின்றனர்.

அச்சம்பவங்களுக்கும் நந்தினிக்கும் என்ன சம்பந்தம்? தன் வாழ்வில் எதிர்கொண்ட பிரச்சனைகளில் இருந்து அவர் எவ்வாறு விடுபடுகிறார்? இக்கேள்விகளுக்குப் பதில் அளிக்கிறது ‘கால்ஸ்’ திரைப்படம்.

வேதியியல் துணையுடன் கொலைகள் நிகழ்வதை விளக்கியிருப்பது சாதாரண மக்களின் பயத்தை மேலும் அதிகப்படுத்துவதாக உள்ளது.

பெண் குழந்தைகள் மீதான பாலியல் அத்துமீறல், பணியிடத்தில் பெண்களிடம் பாலியல் சீண்டல், பாலியல் குற்றங்களுக்காக பெண்கள் கடத்தப்படுதல் போன்ற பல பிரச்சனைகளை பேசுகிறது இத்திரைக்கதை. கூடவே, இப்பிரச்சனைகளுக்கு பெண்கள் தங்கள் இஷ்டம்போல சுதந்திரமாக வாழ்வதுதான் காரணம் என்று குற்றம்சாட்டுவதையும் கேள்விக்கு உட்படுத்துகிறது.

சித்ராவுக்கு அஞ்சலி!

இப்படத்தின் வெற்றியோ, தோல்வியோ பாதிக்காத அளவுக்குச் சவாலான வேடத்தில் நடித்தது சாதகமான விஷயம். ஆனால், ‘கால்ஸ்’ சித்ராவின் முதலும் கடைசியுமான திரைப்படமாக அமைந்தது அவரது ரசிகர்களின் துரதிர்ஷ்டம்.

தமிழ் திரையுலகம் சித்ராவை இழந்திருக்காவிட்டால், இது போல மேலும் பல நாயகி மைய படங்களில் அவர் நடித்திருக்கக் கூடும். அலுவலகத்தில் உள்ளவர்களோடு அவர் உரையாடும் ஆரம்பகட்ட காட்சிகள் எரிச்சலூட்டினாலும், போகப் போக அவரது நடிப்பு இயல்பைத் தொட்டுவிடுகிறது.

படத்தின் பின்பாதியில் வாழ்க்கை தேடல் குறித்த வசனங்களை பேசும்போது, அவரது மறைவு நம் நினைவில் உறுத்துகிறது.

தேவதர்ஷினி, ஜீவா ரவி, தர்ஷினி, ஆர்.சுந்தர்ராஜன், வினோதினி ஆகியோர் மனதில் பதியும்படியான வேடங்களில் நடித்திருக்கின்றனர். நிழல்கள் ரவிக்கும் அமரேந்திரனுக்கும் சொல்லிக் கொள்ளும்படியான வேடம் இல்லை என்றாலும், தங்களுக்கான காட்சிகளில் செவ்வனே வந்துபோகின்றனர்.

சித்ரா மொபைலில் பேசும்போது எதிர்முனையில் இருப்பவர்களின் வாழ்வும் காட்சியாக விரிகிறது. அவற்றைச் செழுமைப்படுத்தியிருந்தால் திரைக்கதை ‘செம’ என்று சொல்லும் நிலைமை உண்டாகியிருக்கும்.

ஆனாலும், முடிவில் அவர்களது வாழ்க்கை எவ்வாறு நந்தினி கதாபாத்திரத்தால் மாறியிருக்கிறது என்பதைக் காட்டியது அருமையான விஷயம்.

எழுத்து, ஒளிப்பதிவு, படத்தொகுப்பு, தயாரிப்பு வடிவமைப்பு உட்பட படத்தின் முக்கியப் பொறுப்புகளை ஏற்றிருக்கிறார் இயக்குனர் ஜே.சபரீஷ். தமீம் அன்சாரி இப்படத்துக்கு இசையமைத்திருக்கிறார்.

ஒரு கதைக்கான கரு திரைக்கதையாக உருப்பெறுவதும், அதன்பின் காட்சிகளாக எடுக்கப்பெறுவதும், முடிவில் ஒரு திரைப்படமாக உருவாவதும் படத்தில் சம்பந்தப்பட்டோரின் உழைப்பைச் சார்ந்தே அமையும். அப்படியொரு கூட்டுழைப்பு இப்படத்தில் ‘மிஸ்’ ஆகியிருக்கிறது.

திரைக்கதையில் கலைத்து போடப்பட்ட காட்சிகளை ஒரு வடிவத்துக்குள் அடக்கியிருந்தால், இத்திரைப்படம் வேறொரு உயரத்தை தொட்டிருக்கும்.

ஆனாலும், பணிக்குச் செல்லும் பெண்கள், ஓய்வுக்காலத்தை தொட்ட முதியோர்கள், குழந்தைகள் நலம் குறித்து கவலைப்படாத பெற்றோர் என்று பல்வேறு பிரச்சனைகளைப் பேசிய வகையில் இத்திரைப்படம் குறிப்பிடத்தக்கதாகிறது.

கூடவே, தொலைக்காட்சி வாயிலாக மக்கள் மனதில் இடம்பிடித்த விஜே சித்ராவின் ஒரேயொரு திரைப்படம் என்ற வகையிலும் முக்கியமானதாகிறது.

  • பா. உதய்

03.03.2021  05 : 01 P.M

Comments (0)
Add Comment