தமிழ்த் திரைப்பட இயக்குநர் சற்குணத்தின் முதல் திரைப்படம் விமல், ஓவியா நடித்த ‘களவாணி’. குறைந்த பட்ஜெட்டில் உருவான அந்தப் படம் பெரும் வரவேற்பைப் பெற்றது.
அதைத் தொடர்ந்து வாகை சூடவா, நையாண்டி, சண்டிவீரன் முதலான வெற்றித் திரைப்படங்களை இயக்கிய சற்குணத்தின் ‘வாகை சூட வா’ திரைப்படம் சிறந்த திரைப்படத்திற்கான தேசிய விருதைப் பெற்றுத் தந்தது.
தன்னுடைய வெற்றிகளுக்குக் காரணம், தான் வணங்கும் குலதெய்வம் தான் என்று கூறும் சற்குணம், தனது குலதெய்வம் முனியப்பன் பற்றி நம்மிடையே பகிர்ந்து கொண்டார்.
“என்னைப் பொறுத்தவரை குலதெய்வங்கள் என்பவை நமது முன்னோர்கள் தான். நம்மைக் காப்பதிலும் வாழ வைப்பதிலும் அவர்களைக் காட்டிலும் அக்கறை வேறு யாருக்கு இருக்க முடியும்.
நான் பிறந்தது தஞ்சை மாவட்டம், ஒரத்தநாடு வட்டம், ஆம்பலப்பட்டு கிராமத்தில். 18 தெருக்களைக் கொண்ட அந்தப் பெரிய கிராமத்தின் வடக்கே உள்ள தேத்தாடிக் கொள்ளைத் தெரு என்ற இடத்தில் தான் நான் பிறந்தேன்.
என்னைப் பொறுத்த வரையில் எனக்கு இரண்டு குல தெய்வங்கள். எங்கள் கொள்ளுத் தாத்தா பிறந்து வளர்ந்த ஊர், கண்டியர் கிராமம். அங்கு உள்ள ‘பட்டவன்’ எனது முதல் குலதெய்வம். என் தாத்தா, அப்பா, நான் என எல்லோரும் பிறந்து வளர்ந்தது ஆம்பலப் பட்டில்தான். அதனால் இங்குள்ள முனியப்பன் என் இரண்டாவது குலதெய்வம்.
என் தாய் வழி குலதெய்வமும் முனியப்பன் தான். அதனால், நாங்கள் முனியப்பனையே அதிகம் வழிபடுவோம். பொதுவாக கிராமங்களில் இந்தக் குலதெய்வங்களைப் பற்றி பல்வேறு கதைகள் சொல்வார்கள். புதிதாகக் கேட்பவர்களுக்கு வேடிக்கையாகவும் கேலியாகவும் இருக்கும். ஆனால் சற்று ஆராய்ந்து பார்த்தால் அந்த தெய்வத்தின் மேல் அவர்கள் கொண்டுள்ள நம்பிக்கையை நாம் உணர்ந்துகொள்ள முடியும்.
என் அம்மா கூட ஒரு கதை சொல்லுவாங்க. எங்கள் குலதெய்வம் முனியப்பன் கோயிலைச் சுற்றிலும் ஒரே காடாக இருக்கும். அதற்கு முனியப்பன் காடு என்று பெயர்.
கருவை மரங்கள் நிறைந்த காடு அது. முனியப்பன் வாசம் செய்யும் கருவ மரம் ஒன்றை வெட்ட ஒரு ஆள் அரிவாள் எடுத்துச் சென்றாராம். மரத்தை அவர் வெட்ட முயன்றபோது அவருடைய அரிவாள் இரண்டாக உடைந்து விழுந்ததாகச் சொல்வார்கள்.
“இதெல்லாம் நம்பற மாதிரியாமா இருக்கு” என்று நான் கேட்டேன். அதற்கு என் அம்மா, “போடா உனக்கு என்ன தெரியும் முனியப்பனைப் பற்றி” என்று சொல்வார்.
அவர்களின் அந்த நம்பிக்கையைத் தான் நான் கடவுளாகப் பார்த்தேன். அந்த தெய்வங்களை அடையாளம் காட்டிய தங்கள் முன்னோர்கள் மீது அவர்கள் கொண்டுள்ள இந்த அதீத நம்பிக்கைதான் அவர்களைச் சிறப்பாய் வாழ வைத்துக் கொண்டிருக்கிறது.
குல தெய்வத்தைப் பற்றிய கவிதை ஒன்றை நான் படித்தேன். அந்தக் கவிதை தன் சொந்த ஊரிலிருந்து வெளியூர் அல்லது வெளி மாநிலங்களில் உள்ள தெய்வத்தை வணங்கச் செல்லும் மக்கள் தங்கள் ஊரிலுள்ள குலதெய்வக் கோயிலைக் கடக்கும் போது அந்தக் கோயிலின் உள்ளே குடிகொண்டுள்ள சாமி இவர்களைப் பார்த்து சொல்வது போல் அமைந்த கவிதை அது.
“நம்புங்கடா பாவிகளா… நாங்களும் சாமிங்க தான்!” என அந்தக் கவிதை தொடங்கும். எத்தனை உண்மையான வரிகள் பாருங்கள். வழிவழியாக நம் குலம் காத்து வரும் தெய்வங்களை விடுத்து, நம்மைக் காத்திடவும் சிறப்பாக வாழ வைக்கவும் வேண்டி, வேறு எங்கோ இருக்கும் கடவுளை நாடிச் சென்று கொண்டிருக்கிறோம்.
நமது முன்னோர்கள் வழிபட்ட பாரம்பரிய தெய்வங்களை வணங்குவதில் உள்ள மகிழ்ச்சி வேறு எதிலும் கிடைப்பதில்லை.
எங்களின் குலதெய்வமான முனியப்பனுக்கு கன்னிப் பொங்கல் அன்று திருவிழா நடக்கும். அன்று அனைவரும் ஒன்றுகூடி விழாவைச் சிறப்பாக நடத்துவோம். கிடா வெட்டி, சமைத்து, முனியப்பனுக்குப் படையலிட்டு, பூஜைகள் நடத்துவோம். நாடகம், கூத்து என திருவிழா அன்று ஊரே மகிழ்ச்சியாய் இருக்கும்.
அதேபோல், பயிர் விளைந்து அறுவடைக்குத் தயாராகும் தருவாயில் முனியப்பனுக்கு ஒரு விழா எடுப்போம். அப்போது விளக்குபூஜை நடக்கும். பச்சரிசி இடித்து மாவிளக்கு போட்டும், கறி செய்தும் படைப்பார்கள்.
மிக எளிமையாக முனியப்பனுக்கு திருவிழாக்கள் நடந்தாலும், அதில் எங்களுக்குக் கிடைக்கும் மகிழ்ச்சிக்கும் மனநிறைவுக்கும் ஈடு இணை வேறு இல்லை.
முனியப்பன் சாமி எப்போதும் வெட்ட வெளியில் தான் குடி கொண்டிருப்பார். கோயிலில் மண்டபங்களும் கூடங்களும் அமைத்தாலும் அவர் இருக்கும் இடம் எப்போதும் வெட்டவெளியாகத் தான் இருக்கும். அவரது கோயிலைச் சுற்றி சங்கிலிக் கருப்பர், நொண்டிக் கருப்பர் என பல்வேறு சிறு தெய்வங்களின் சன்னதி இடம்பெற்றிருக்கும்.
எங்கள் கிராமத்தைப் பொறுத்தவரை பெயர் சூட்டுதல், காதுகுத்துதல், திருமணம், கிரகப் பிரவேசம் என்று யார் வீட்டில் எந்த விசேஷம் நடந்தாலும் முதல் அழைப்பு முனியப்பசாமிக்குத்தான்.
புதிதாய் வாகனம் வாங்கினாலும் முதலில் முனியப்பன் கோயிலுக்குச் சென்று பூஜை செய்த பிறகுதான் எல்லாம்.
இப்படி எங்கள் கிராமத்து மக்களின் உணர்வுகளோடு ஒன்று கலந்து இருக்கிறார் எங்கள் முனியப்பசாமி.
என்னை பொறுத்தவரையில், எனக்கு தெய்வங்கள் மீது நம்பிக்கை இருக்கிறதா, இல்லையா என்பதைத் தாண்டி எங்களின் குலதெய்வங்கள் என்பவை எங்களது முன்னோர்கள் வழிபட்டவை என்ற வகையில் அந்த தெய்வங்கள் மீது எனக்கு அதீத மரியாதை இருக்கிறது.
எனது வாழ்வில் நடந்த அனைத்திற்கும் என் குலதெய்வம் சாட்சியாய் நின்றிருக்கிறது.
நான் பிறந்ததும் முதன் முதலாக என் அம்மா, என்னைத் தூக்கிப்போனது எங்கள் குலதெய்வக் கோயிலுக்குத்தான். குழந்தையாக இருந்த எனக்கு மொட்டை அடிக்கப்பட்டது, காது குத்தப்பட்டது, என் திருமணத்தின் முதல் பத்திரிகை வைத்து பூஜிக்கப்பட்டது எல்லாம் முனியப்பசாமி கோயிலில் தான்.
எனக்கு திருமணம் முடிந்ததும் என் மனைவியை நான் முதன்முதலில் அழைத்துச் சென்றதும் எங்கள் முனியப்பன் கோயிலுக்குத் தான்.
திரையுலகில் நுழைந்து இன்று நான் இந்த அளவிற்கு உயர்ந்து இருக்கக் காரணம் என் திறமை மட்டுமல்ல, அதற்கான முதல் காரணம் என் அம்மாவும், அவர்கள் முனியப்பன் மேல் வைத்த நம்பிக்கையும்தான்.
முனியப்பன் என்னைக் கண்டிப்பாய் மேலும் மேலும் உயர்த்தி வைப்பார் என்று முழு நம்பிக்கையுடன் என் அம்மா தொடர்ந்து வேண்டிக்கொண்டே இருக்கிறார்கள். அவர்களின் அந்த இடைவிடாத வேண்டுதல் தான் என்னை தேசிய விருது வாங்கும் அளவிற்கு உயர்த்தி வைத்திருக்கிறது.
முனியப்பசாமி மீது நான் கொண்டுள்ள நம்பிக்கை அழியாத வரை எங்கள் வாழ்வு உயர்ந்து கொண்டே இருக்கும் என்பதில் எனக்கு எந்த மாற்றுக் கருத்தும் இல்லை.
குலதெய்வங்கள் நம் முன்னோர்கள் அடையாளம் காட்டிய தெய்வங்கள் என்பதைவிட, அந்த தெய்வங்கள் நமது குலத்தில் உதித்த முன்னோர்களே என உணரும்போது அவர்கள் எப்படியும் நம்மைக் காத்து வழி நடத்துவார்கள் என்ற நம்பிக்கையும் கூடவே வரும்.
அந்த நம்பிக்கை இருக்கும் வரை நம் வாழ்வில் என்றும் எங்கும் எதிலும் வெற்றிதான்!”
– அகில் அரவிந்தன் எழுதிய ‘பிரபலங்களின் குலசாமிகள்’ நூலிலிருந்து…
02.03.2021 02 : 50 P.M