கர்நாடகா மாநிலத்தைச் சேர்ந்த ஒரு மலை கிராமத்தில் இருந்து வந்த நரிக்குறவர்கள் குழுவாக எம்.ஜி.ஆரைக் காண வந்திருந்தனர். அதில் வயதில் மூத்த நரிக்குறவர் ஒருவர், வெற்றிலை போட்ட வாயுடன் எம்.ஜி.ஆரைக் கட்டியணைத்து முத்தமிட்டார்.
அவரது உதடுகளின் அடையாளம் எம்.ஜி.ஆரின் கன்னத்தில் பதிந்து விட்டது. இதை எதிர்பாராத எம்.ஜி.ஆரின் உதவியாளர்கள் வேகமாகப் பாய்ந்து அவரை விலக்க முற்பட்டனர்.
அவர்களைத் தடுத்த எம்.ஜி.ஆர். சிரித்துக் கொண்டே, ‘‘விடுங்கப்பா, அவங்க என்னை குடும்பத்தில் ஒருத்தனா நினைக்கறதால அன்பை இப்படிக் காட்டுறாங்க. இதில் தவறு ஒன்றுமில்லை’’ என்று சாதாரணமாகக் கூறினார்.
மறுநாளும் அதேப்போல் எம்.ஜி.ஆரைப் பார்க்க நரிக்குறவ மக்கள் வந்துவிட்டனர். கிளம்பிக் கொண்டிருந்த எம்.ஜி.ஆர்., அவர்களிடம் நலம் விசாரித்தார். முதல் நாள் அவரை முத்தமிட்ட அந்த நரிக்குறவர், ‘‘உங்க தயவால என் ஆசை நிறை வேறிடுச்சு சாமி’’ என்றார்.
‘‘என்னது?’’ என்று எம்.ஜி.ஆர். கேட்டதற்கு,
‘‘நம்பள மாதிரி ஆளுங்கள நீங்க பாக்க மாட்டீங்கன்னு சிலர் சொன்னாங்க. அவர்களிடம் உங்களை முத்தமிட்டு காட்டுறேன்னு சபதம் செய்தேன். ஜெயிச்சுட்டேன். என்னை மன்னிச்சுடுங்க சாமி’’ என்று கூறினார்.
அதைக் கேட்டு சிரித்த எம்.ஜி.ஆர்., ‘‘பரவாயில்லை. இனிமேல் இதுபோன்று வேறு யாரையும் முத்தமிடுவதாக சபதம் செய்யாதே. வம்பா போயிடும்’’ என்று சொல்லி, பணியாளர்களை அழைத்து, வந்திருந்த அனைவருக்கும் சாப்பாடு போடச் சொல்லி அவர்களுடன் சாப்பிட்டு அவர்களை வழியனுப்பி வைத்தார்.
– நன்றி முகநூல் பதிவு
03.03.2021 12 : 30 P.M