சென்னைப் புத்தகக்காட்சி நூல் வரிசை: 4
அந்திமழை இதழில் ‘நட்சத்திரங்களுடன் ஒரு வண்ணத்துப்பூச்சி’ என்ற பெயரில் இயக்குநர் ராசி அழகப்பன் அனுபவத் தொடராக எழுதி வந்த சுவையான கட்டுரைகள் தொகுக்கப்பட்டு நூலாக வெளி வந்திருக்கிறது.
உவமைக் கவிஞர் சுரதா, வலம்புரிஜான், நா.காமராசன், புரட்சித் தலைவர் எம்ஜிஆர், கலைஞர் மு.கருணாநிதி, பாரதிராஜா, விட்டாலாச்சார்யா, இளையராஜா, பெரியார்தாசன், எடிட்டர் பி.லெனின், சாண்டில்யன், ரஜினிகாந்த், மகேந்திரன், பாலு மகேந்திரா, பரீக்ஷா ஞானி, கமல்ஹாசன் உள்ளிட்ட 45 நட்சத்திர ஆளுமைகளோடு பயணித்த அனுபவங்களை நேர்மறையோடு பதிவு செய்துள்ளார் ராசி அழகப்பன்.
கமல்ஹாசன் பற்றிய கட்டுரையில், “நேர்மறையான செய்திகளைச் சொல்வது எப்போதும் வாழ்வின் பயணத்திற்கு உதவும் என்று நம்புகிறவன். எனது பயணத்தில் எனக்கான அனுபவங்களை நான் அவ்விதமாகவே பார்க்கிறேன். கமல் ஒரு நடிகராக இருந்தாலும் பன்முகத் தன்மை கொண்டவராகவே தென்பட்டார்.
அவரிடம் எழுத்தாற்றல், சிந்தனை, செயல்பட எடுத்துக் கொள்ளும் முனைப்பு, அதே சமயத்தில் திரையுலகில் சக போட்டியாளர்களை வென்றெடுக்கிற வியூகம் ஆகியவை தனித்தன்மைகள். எனக்கொரு சந்தர்ப்பம் என்பதாகத்தான் நான் அவருடன் பயணப்பட்டேன். அடிப்படையில் குடும்ப உறவுகளை அதிகம் பெற்றிராத நான் சமூக எண்ணங்களின் வெளிப்பாட்டுச் செயல்களில் அன்பின் பெருக்கை அடைந்தேன்” என்று நினைவுகூர்கிறார் ராசி அழகப்பன்.
நட்சத்திரங்கள் ஆகாயத்தின் வியப்புக் குறிகள். அவைகளின் வெளிச்சம் பூமிக்கு எப்போதும் பயன்தரக் கூடியதல்ல. அந்த வெளிச்சத்தில் அமர்ந்து உலகப் பொதுமறை திருக்குறளை வாசிக்கக் கூட இயலாது… ஆனால் அந்த ஜொலிப்பு எவரையும் வசீகரிக்க வல்லது.
நட்சத்திரங்களின் சங்கமத்தில் நிலா கவிஞனின் பாடு பொருளாகி விடுகிறது. இரவின் இருட்டுப் போர்வையில் நட்சத்திரங்களின் உலா எவரையும் கனவு காண வைக்கிற வியப்பு எனத் தொடரின் தொடக்கத்தில் கவித்துவத்துடன் எழுதத் தொடங்கியுள்ளார்.
உவமைக் கவிஞர் பற்றிய கட்டுரையில், “சுரதா எனது பள்ளி நாட்களில் வேட்டவலம் வந்து சேர்ந்தார். மீசையில்லாமல் மொழு மொழு வென்று தோளில் பூ போட்ட சால்வை போர்த்திக்கொண்டு வந்தார். அவரிடம் நான் என் கவிதைக்குப் பரிசு வாங்கினேன். கண்ணாடி போட்ட கருவிழிக்குள் எப்போதும் நையாண்டியும், நக்கலும் குதித்துக் கொண்டிருப்பதைப் பார்த்தேன்.
நான் கண்ணதாசன், கலைஞர் மு.கருணாநிதி இவர்களின் கவிதைகளை வாசித்துவிட்டு எவ்வாறு கவிதை எழுதுவது என எனக்குள் ஒரு தீர்மானம் செய்துண்டு வேட்டவலம் பள்ளிக்கு அருகே உள்ள மணலில் அமர்ந்து எழுதியது ‘இந்திய சோவியத் நட்புறவுப் பாலம்’ என்ற கவிதை. அதை வாசித்துக் காட்டி சுரதாவிடம் பரிசு பெற்றபோது வண்ணத்துப்பூச்சி கொஞ்சம் நிறம் மாறி பறக்க எத்தனித்தது” என்று கவித்துவ மொழி நடையில் அனைத்துக் கட்டுரைகளையும் எழுதியிருக்கிறார் ராசி அழகப்பன்.
பாலகுமாரன் பற்றி எழுதுகிறபோது நடந்த அனுபவத்தை மறக்காமல் வைத்திருக்கிறார் நூலாசிரியர். “பாலகுமாரன் அவர்களை நான் சில சமயம் படித்து அறிந்திருந்தாலும் நேரில் பார்த்ததில்லை. அவரை முதலில் சந்தித்தது ‘தாய்’ வார இதழ் அலுவலகத்தில்தான். நான் உதவி ஆசிரியராகப் பணியாற்றிக் கொண்டிருக்கிறேன். எனக்கு அப்போது 21 வயது இருக்கும்.
ஆசிரியர் வலம்புரிஜான் என்னை அழைப்பதாக மணி சொன்னார். உள்ளே போனேன். ஆசிரியர் அறையில் ஒருவர் அமர்ந்துள்ளார். வலம்புரிஜான் அவர்கள் ‘இவர்தான் பாலகுமாரன்’ நமக்கு ஒரு தொடர் எழுத இருக்கிறார். அவரிடம் கதை கேளுங்கள்’ என்று சொல்லி அறிமுகம் செய்தார்” என்று தொடங்குகிறார். நாமும் அங்கே நிற்பதைப் போல உணரும் எழுத்து.
எண்பதுகளின் தொடக்கத்தில் சென்னையில் இலக்கிய முகமாகத் துவங்கி தாய், மய்யம், தேன்மழை எனப் பத்திரிகைகளில் பணியாற்றி, பின் திரைப்படத்தில் இயக்குநர் குழுவில் வேலை பார்த்து பெற்ற அனுபவங்களைக் காலப் பெட்டகமாகப் பதிவு செய்துள்ளார் ராசி அழகப்பன்.
நட்சத்திரங்களுடன் ஒரு வண்ணத்துப்பூச்சி: ராசி அழகப்பன்
வெளியீடு: அந்திமழை,
எண்:17, விஜயாநகர் முதல் தெரு,
வளசரவாக்கம், சென்னை – 600087
விலை: ரூ.275
– தான்யா
20.03.2021 12 : 30 P.M