இந்தியத் திரையிசை சாதனைப் பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் ஏகப்பட்ட பாடல்கள் பாடி பல்வேறு விருதுகளைப் பெற்றிருந்தாலும் ‘பாடும் நிலா’ பாலு என்று ரசிகர்கள் அன்போடு அழைப்பதுதான் நிரந்தர கவுரவம் போல் ஆகிவிட்டது.
சூப்பர் ஸ்டார் என்றால் எப்படி ரஜினியை நினைவு படுத்துமோ, அப்படி பாடு நிலா என்றால் எஸ்.பி.பி.தான். வேறு யாருக்கும் பொருந்தாது.
இந்தப் பெயர் வந்ததே எதிர்பாராததுதான்!
‘இசை ஞானி’ இளையராஜா இசையமைப்பில் பல்வேறு கவிஞர்கள் பாடல்கள் எழுதிக் கொண்டிருக்கிறார்கள். பெரும்பாலும் தனக்கு நெருக்கமான கவிஞர்களைத்தான் தனது படத்தில் பாடல்கள் எழுத வைப்பார் ராஜா.
அவரின் அன்பைப் பெற்றவர்களில் கவிஞர் மு.மேத்தாவும் ஒருவர். ‘உதயகீதம்’ படத்தில் அவர் எழுதிய ‘பாடு நிலாவே… தேன் கவிதை பூ மலர…’ என்ற பாடல் பதிவின்போதுதான் அந்த சுவாரசியமான சம்பவம் நடந்தது. அந்த அனுபவத்தை ஒருமுறை நினைவுகூர்ந்தார் மு.மேத்தா.
“இயக்குநர் கே.ரங்கராஜ் இயக்கத்தில் மதர்லேண்ட் பிக்சர்ஸ் தயாரித்தது ‘உதயகீதம்’. இந்தப்படத்தில் பாடல் எழுதுவதற்காக பிரசாத் ஸ்டுடியோவுக்குப் போயிருந்தேன். இளையராஜா ‘டியூனை’ கொடுத்து பாடல் எப்படி வர வேண்டும் என்பதைச் சொன்னார். எல்லாவற்றையும் கேட்டுக்கொண்டு பாடலை அங்கேயே எழுதி முடித்தேன்.
கதைப்படி நாயகன் பாடகன். சந்தர்ப்ப சூழலால் தூக்குத் தண்டனை கைதியாக சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறான். அவனது பாடலைக் கேட்க ஆயிரக்கணக்கான ரசிகர்கள் காத்துக் கிடக்கிறார்கள்.
இந்நிலையில் நாயகி காதலிக்கிறாள். சிறையில் பல முறை சந்திக்க முயற்சி செய்தும் மறுத்துவிடுகிறான். பிறகு, முயற்சி கைகூடுகிறது. நாயகனைச் சிறையில் சந்தித்து தன் காதலைச் சொல்கிறாள்.
அவனோ அவளுக்கு அறிவுரை சொல்லி காதலை ஏற்க மறுக்கிறான். ஆனால், பிடிவாதமான நாயகி, “நாளை பவுர்ணமி நிலவு. இரவில் நான் வரும்போது எனக்காக ஒரு பாடலை நீங்கள் பாட வேண்டும். அப்படிப் பாடினால்தான் அது என் காதலை ஏற்றுக் கொண்டதற்கான சம்மதமாக நினைத்துக் கொள்வேன். அப்படி பாடவில்லை என்றால் என் உயிரை விட்டுவிடுவேன்” என்று சொல்லிவிட்டுச் சென்றுவிடுகிறாள்.
மறுநாள் இரவு சிறைக்கு வெளியில் இருந்து நாயகி பாடுகிறாள். இதுதான் கதையின் சூழல். இதற்காக நான் எழுதிய பாடல்…
‘பாடு நிலாவே தேன் கவிதை பூ மலர
உன் பாடலை நான் தேடினேன்
கேட்காமலே நான் வாடினேன்
பாடு நிலாவே…’
-என்று பல்லவி தொடங்கும். தொடர்ந்து நாயகி பாடுவாள்.
பெண் :
நீ போகும் பாதை என் பூங்காவனம்
நீ பார்க்கும் பார்வை என் பிருந்தாவனம்
ஊரெங்கும் உன் ராக ஊர்கோலமோ
என் வீடு வாராமல் ஏன் போகுமோ
கைதான போதும் கை சேர வேண்டும்
உன்னோடு வாழும் ஓர் நாளும் போதும்
என் ஜென்மமே ஈடேறவே
(பாடு நிலாவே…)
ஆண் :
ஊரெங்கும் போகும் என் ராகங்களே
உன் வீடு தேடும் என் மேகங்களே
பூ மீது தேன் தூவும் காதல் வரம்
என் நெஞ்சில் நீ ஊதும் நாதஸ்வரம்
காவேரி வெள்ளம் கை சேரத் துள்ளும்
ராகங்கள் சேரும் தாகங்கள் தீரும்
காதல் நிலா தூதாகுமே
பாடும் நிலாவே தேன் கவிதை பூ மலரே
பெண் : உன் பாடலை நான் கேட்கிறேன்
ஆண் : பாமாலையை நான் கோர்க்கிறேன்
பெண் : பாடும் நிலாவே
ஆண் : தேன் கவிதை
பெண் : பூ மலரே
-என்று எழுதி முடித்து இளையராஜாவிடம் காட்டியபோது, பாடல் வரிகள் குறித்த சில சந்தேகங்களையும் விளக்கங்களையும் கேட்டார். நானும் அவரும் சிறிது நேரம் விவாதித்தோம்.
அப்போது அவர், “சிறையில் இருக்கும் நாயகனுக்கு பாடல் எப்படி கேட்கும்?” என்றார். நான், “பவுர்ணமி நிலவின் ஒளி, ஜன்னல் சிறைக் கம்பிகள் வழியே உள்ளே செல்வது போல் பாடல் செல்லும்” என்று சொன்னேன்.
அதை ஆமோதித்த இளையராஜா அவர்கள், “இப்படிச் செய்யலாம்… வெளியிலிருந்து நாயகி, ‘பாடு நிலாவே’ என்று பாடுகிறாள். பாடல் முடியும்போது நாயகன் பதிலுக்கு பாடுவதாக காட்சி வருகிறது. அந்த இடத்தில் நாயகனும் ‘பாடு நிலாவே’ என்று பாடாமல் ஒரு ‘ம்’ சேர்த்துக் கொள்வோம். ‘பாடும் நிலாவே தேன் கவிதை’ என்று இருந்தால் பாடல் இன்னும் அழகாக இருக்கும்” என்று சொன்னார்.
அது உண்மையாகிப் போனது. அதோடு கதாபாத்திரத்தின் உணர்வுகளைப் பிரதிபலிப்பதாகவும் இருந்தது ஆச்சரியம். தமிழுக்கு மட்டும்தான் இப்படியொரு சிறப்பு இருக்கும்.
‘அண்ணே… ஒரு ‘ம்’ சேர்த்தவுடன் பாடல் ‘ஜம்’ என்று வந்துவிட்டது’ என்று இளையராஜாவிடம் சொன்னேன். அவர் இசையமைப்பாளராக மட்டுமல்லாமல் தமிழ் இலக்கியங்களை அறிந்தவராகவும், வெண்பா இயற்றக்கூடிய வல்லமை படைத்தவராகவும் இருப்பதாலும் ஒரு பாடலை இத்தனை அம்சமாக உருவாக்க முடிகிறது.
பாடலை பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் தன் காந்தக் குரலில் பாடி அதை மேலும் அழகுகூட்டியதுதான் பாடலுக்கு கிடைத்த கூடுதல் சிறப்பு. அதோடு, ரசிகர்கள் பாடலின் வரியை அவருக்கு பட்டமாகக் கொடுத்து தங்களின் நிரந்தர அன்பில் கட்டிப் போட்டு விட்டனர்.
‘நிலா’ என்பது ஒன்றுதான். அதேபோல் ‘பாடும் நிலா’ என்றால் அது எஸ்.பி.பாலசுப்பிரமணியம் மட்டும்தான் என்பது போல் இந்தப் பாடல் அவருக்கு அடையாளமாகி உள்ளது” என்றார் கவிஞர் மு.மேத்தா!
நன்றி: தேனி கண்ணன் முகநூல் பதிவு
02.03.2021 01 : 20 P.M