1977-ல் சரித்திரம் படைத்த பாடல்!

அருண் சுவாமிநாதனின் ‘எங்கள் எம்.ஜி.ஆர்’ தொடர்-17

‘இன்று போல் என்றும் வாழ்க’ படத்தில் வரும் ‘இது நாட்டை காக்கும் கை, நம் வீட்டை காக்கும் கை’ பாடலும், ‘அன்புக்கு நான் அடிமை’ பாடலும் புரட்சித் தலைவருக்கு முத்துலிங்கம் எழுதியதில் மிக முக்கியமான பாடல்கள். இந்தப் பாடல் எழுதும்போது ஏற்பட்ட ஒரு சின்ன கசப்பான அனுபவத்தை பற்றி பேசத் தொடங்கினார்.

‘இது நாட்டை காக்கும் கை’ பாடல் கம்போசிங் நடந்து கொண்டிருந்தது. எம்.எஸ்.வி. கொடுத்த மெட்டுக்கு, பாட்டு எழுதி எடுத்துக்கொண்டு, ஏ.வி.எம். படப்பிடிப்பில் இருந்த எம்.ஜி.ஆரிடம் காட்டினேன். பல்லவியைத் தவிர எதுவும் நல்லா இல்ல, மாத்துங்க என்று சொல்லிவிட்டார்.

மறுபடி வாகினி ஸ்டுடியோ வந்து எழுத உட்கார்ந்தேன். வார்த்தைகளே வரவில்லை. அப்படிப்பட்ட நேரங்களில் நடந்து கொண்டோ, சுருட்டு பிடித்தபடியோ சிந்திப்பது என் வழக்கம்.

எம்.எஸ்.வி.யின் அறைக்குப் பின்னால் சவுக்கு மரங்கள் வளர்ந்திருக்கும். அந்த மரங்களைப் பிடித்தபடி நின்று சிந்தித்துக் கொண்டிருந்தேன்.

இதை உள்ளே இருந்து பார்த்துக் கொண்டிருந்த தயாரிப்பாளர் லட்சுமண செட்டியார், “என்னய்யா… முத்துலிங்கம் மரத்த பிடிக்கிறான். மட்டையைப் பிடிக்கிறான், சரணத்தை பிடிக்க மாட்டேங்குறானே” என்றார். அதைக் கேட்டதும் எனக்குக் கோபம் வந்துவிட்டது.

“ஆமாம் நான் அதையிதை பிடிக்குறவன் தான். எதையும் பிடிக்காதவனா பார்த்து… உங்களுக்குப் பிடிச்ச மாதிரி பாட்டு எழுதி வாங்கிக்குங்க” என்று சொல்லிவிட்டு அங்கிருந்து விருட்டென்று வெளியே சென்றுவிட்டேன்.

டைரக்டர் கே.சங்கரும், எம்.எஸ்.வி.யும் வந்து என்னை சமாதானம் செய்தனர். நாங்களெல்லாம் படாத அவமானத்தையா நீங்க பட்டுட்டீங்க. இதற்கெல்லாம் கோபப்பட்டா முன்னேற முடியாது என்று எனக்கு அறிவுரை சொல்லி அழைத்துச் சென்றனர்.

அதன்பிறகு நான் எழுதிய சரணத்தை எம்.ஜி.ஆர். ஓ.கே. செய்தார். காலை 9 மணிக்கு ரெக்கார்ட் செய்யப்பட்டிருக்க வேண்டிய பாடல் இரவு 9 மணிக்கு தான் ரெக்கார்ட் ஆனது. அதுவரை காலையில் இருந்து இரவு வரை ஸ்டுடியோவிலேயே காத்திருந்து பாடிவிட்டுப் போனார் யேசுதாஸ்.

இது தலைவருக்கு மிகவும் பிடித்த பாடல். 1977 சட்டமன்றத் தேர்தல் பிரசாரத்தின்போது இந்தப் பாடல் தெருவுக்குத் தெரு ஒலித்தது. எம்.ஜி.ஆர். வெற்றிபெற்று தமிழக முதல்வரானார்.

அப்போது அமெரிக்காவில் இருந்து வெளியான ‘வாஷிங்டன் போஸ்ட்’ பத்திரிகையில், “சினிமாப் பாட்டை வைத்தே இந்தியாவில் ஒருவர் ஆட்சியை பிடித்து விட்டார்” என்று கட்டுரை வெளியானது. அதில் இந்தப் பாடல் வரிகளையும் என் பெயரையும் குறிப்பிட்டு இருந்தது மறக்க முடியாதது” என்று சொன்ன முத்துலிங்கம், தன் கடுமையான காலகட்டத்தில் எம்.ஜி.ஆர். செய்த ஒரு பேருதவியை நினைவு கூர்ந்தார்.

(சரித்திரம் தொடரும்…)

01.03.2021 12 : 50 P.M

Comments (0)
Add Comment