பெரியார் நம் காலத்தின் தேவை!

சென்னை புத்தகக் காட்சி நூல்வரிசை: 3

சேலத்தைச் சேர்ந்த கவிஞர் பழ.புகழேந்தி எழுத்தில் வசந்தா பதிப்பக வெளியீடாக வந்திருக்கிறது ‘எமைத் திருத்தி வரைந்த தூரிகை.’ மூடத்தனம் எனும் முடைநாற்றம் வீசுகின்ற காடு மணக்க வந்த கற்பூரப் பெட்டகமான தந்தை பெரியாரைப் பற்றி எழுதப்பட்ட கவிதை நறுக்குகளின் தொகுப்பு.

நூலின் முன்னுரையில் நூலாசிரியர், “மூப்பின் உச்சத்திலிருந்து முடியாத சூழலிலும் மூத்திரச் சட்டியோடு ஊரெல்லாம் பயணித்து, மூச்சடங்கும் முன்புவரை பேச்சடங்காமல் அவர் உழைத்ததெல்லாம்  தனக்கென்று எதையும் எதிர்பார்த்து அல்ல. சுயமரியாதையோடு வாழ்ந்து தொலை என்பது தவிர நம்மிடம் இருந்து எதையும் எதிர்பார்க்கவில்லை அவர்.

இறந்து இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகும் அதிகமான எதிர்வினைகளை எதிர்கொள்ளும் ஒரே தலைவர் அவர்தான். நிரந்தர எதிரிகளும் அவ்வப்போது புறப்பட்டுக் காணாமல்போகும் எதிரிகளும் அவரை எப்பாட்டுப்பட்டாவது அப்புறப்படுத்திவிட ஆலாய்த் தவிக்கிறார்கள். பெரியாரின் வரலாற்றைத் திரிப்பதற்கு மட்டும் அரை நூற்றாண்டுக்குள்ளாகவே அவசரப்படுகிறார்கள்” என்று சுட்டிக்காட்டுகிறார்.

முதல் கவிதையே  எதார்த்தச் சூழலின்  வெப்பத்தைக் காட்டுவதாக இருக்கிறது. ஆனால் இதைக் கவிதை என்ற வகைமைக்குள் அடக்குவது குறித்துப் பலர் மாறுபடலாம். இன்னும் கொஞ்சம் கலைப்படுத்தி இருக்கலாம் என்று சிலர் கவலை கொள்ளலாம். ஓர் எழுத்து அதன் பேசுபொருளை வைத்தே தன் வடிவத்தைத் தீர்மானித்துக் கொள்ளும் என்ற அழுத்தமாக நம்புகிறார் பழ.புகழேந்தி.

ஆம்
எங்களின் இலக்கும் அதுதான்
பெரியார் தேவைப்படாத
சமூகத்தை அடைவது

புராணப் புதைகுழியில்
மூழ்கியவர்களை நோக்கி
நீண்டதொரு கைத்தடி
கைப்பற்றியவர்கள்
கரையேறிக் கொண்டோம்

ஏறத்தாழ
அரை நூற்றாண்டுக்கு முன்பு
கல்லறைக்குள் போனவரைத்தான்
கொல்ல மெனக்கெடுகிறார்கள்
இன்னும்!

என்று நான்கைந்து வரிகளுக்குள் நறுக்குகளாக எழுதியிருக்கிறார். கவிதை என்று  எடுத்துக்கொள்ளாவிட்டாலும், பெரியார் பற்றிய சிந்தனைத் தெறிப்புகள் என்று நாமே ஒரு பெயரை வைத்துக் கொள்ளலாம்.

ஆதிப் பயணங்கள் குறித்து
அக்கறையில்லை
அய்யாவுக்கு

மீதி தூரத்தின்
புதர்களைக் களைவதே
அவர் இலக்கு.

-என்கிறார் நூலாசிரியர். ஒவ்வொருவர் கையிலும் ஒரு கருவி இருக்கிறது. என் கையில் இருக்கும் கருவி எழுத்து. நிகழ்காலத் தேவையின் பொருட்டு நான் ஆற்றியிருக்கும் வினைதான் இந்த நூல் என்றும் வழிமொழிகிறார்.

இன்றைக்கும் தமிழ் வெளியில் நீடித்து நிலைத்து நிற்கும் அசைக்க முடியாத ஆளுமை தந்தை பெரியார். அவரது சிந்தனைகளைச் சகல பரிமாணங்களைக் கொண்டு தமிழ்ச் சமூகத்தின் மாற்றங்களுக்கு வித்திட்டவை.

பெரியார் இன்னும் நம்மிடையே வாழ்கிறார் என்று பின்னுரையில் குறிப்பிட்டுள்ள அ.கார்த்திகேயன், இன்றைய சூழலில் இப்படியொரு ஆக்கம் வெளிவருவது காலத்தின் தேவை. இதை உருவாக்குவதற்குத் துணிச்சலும், கொள்கை மீது தீராப்பற்றும் வேண்டும் என்கிறார். அது உண்மைதான் என்பதை நூலை வாசிக்கும்போது உணர்வீர்கள்.

எமைத் திருத்தி வரைந்த தூரிகை.
ஆசிரியர்: பழ.புகழேந்தி
வெளியீடு: வசந்தா பதிப்பகம்,
பாரகலூர், வெட்னிகரடு,
முல்லை நகர், தாரமங்கலம், சேலம்.
விலை: ரூ.80

– தான்யா

01.03.2021  01 : 55 P.M

Comments (0)
Add Comment