தமிழகத்தில் கூட்டணி ஆட்சிக்கான அச்சாரமா?

தமிழகத்தில் இதுவரை நடந்துள்ள சட்டமன்றத் தேர்தல்களில் அறுதிப் பெரும்பான்மை பலம் கிடைக்காத நிலையில் கூட, கூட்டணி ஆட்சி அமைவதற்கான சந்தர்ப்பங்கள் அமையவில்லை.

தி.மு.க.வுக்கு அப்படியொரு சந்தர்ப்பம் உருவானபோது கூட, அதைத் தவிர்க்கவே முயன்றது.

அண்டை மாநிலமான புதுச்சேரியில் கூட்டணி ஆட்சி என்பது இயல்பாக நடந்த அளவுக்குத் தமிழகத்தில் இயல்பான சூழ்நிலை இல்லை.

கடந்த சில தேர்தல்களின் போது, பொதுவுடமை இயக்கங்கள் கூட்டணி ஆட்சி தேவை என்ற முழக்கத்தை முன்வைத்திருக்கின்றன. அண்மையில் மறைந்த தா.பாண்டியன் இந்தக் கருத்தைத் தொடர்ந்து வலியுறுத்தி வந்திருக்கிறார்.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவரான தொல்.திருமாவளவனும் கூட்டணி ஆட்சிக்கான தேவையை உணர்த்தி வந்திருக்கிறார். புதிய தமிழகம் டாக்டர் கிருஷ்ணசாமி சொல்லி வந்திருக்கிறார்.

அ.தி.மு.க.வும், தி.மு.க.வும் கூட்டணி ஆட்சி என்கிற குரலைப் புறக்கணிப்பதில் ஒரே நேர்கோட்டில் இருந்திருக்கின்றன. அதே கட்சிகள் மத்திய அமைச்சரவையில் அங்கம் வகித்து முக்கியப் பொறுப்புகளை வகித்தபோதும், தமிழகத்தில் கூட்டணி என்றாலே பாராமுகமாகவே இருந்திருக்கின்றன.

அப்படியொரு கூட்டணி ஆட்சி தமிழகத்தில் ஒருவேளை அமைந்திருந்தால், ஆளும் கட்சி தன்னிச்சையாக முடிவெடுத்து, மக்கள் விரோதச் செயல்பாடுகளில் இறங்க முடியாது. குறைந்தபட்சம் கூட்டணிக் கட்சிகளின் ஒப்புதலை எதிர்பார்க்க வேண்டிய அவசியம் நேர்ந்திருக்கும்.

இம்முறை தி.மு.க கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகள் கூட்டணி ஆட்சி என்கிற முழக்கத்தை முன்வைக்கவில்லை.

ஆனால் அ.தி.மு.க கூட்டணியில் தொகுதிப் பங்கீடு பற்றிப் பேசிக் கொண்டிருக்கும் பா.ஜ.க கூட்டணி ஆட்சி பற்றிப் பேசுகிறது. டபுள் எஞ்ஜினால் தான் தமிழகம் முன்னேற முடியும் என்கிறார் பா.ஜ.க. வின் முக்கிய அதிகார மையமான அமித்ஷா.

டபுள் எஞ்ஜின் என்று அவர் சொல்வது கூட்டணி ஆட்சியைத் தான் என்றே அர்த்தப்படுத்திக் கொள்ள வேண்டியிருக்கிறது..

அரசியல் கட்சிகளின் கூட்டணிக் கணக்குகளும், கூட்டணி ஆட்சி பற்றிய எதிர்பார்ப்புகளும் எப்படியோ இருக்கலாம்.

கொரோனா காலத்தில் பல விதங்களில் தொடர் சரிவைச் சந்தித்துக் கொண்டிருக்கும் வாக்காளர்களின் மனதில் என்ன விதமான கணக்குகள் இருக்கிறதோ?

மே – 2 ஆம் தேதி தான் தெரியும்.

-யூகி

01.03.2021  12 : 50 P.M

Comments (0)
Add Comment