கோஷ்டிப் பூசல்களின் வரலாறு!

தேர்தல் பார்வை: மேற்கு வங்கம் – 2

திருவிளையாடல் படத்தில் பெரும்புகழ் பெற்ற தருமி – சிவபெருமான் கேள்வி பதில் காட்சியில் ஒரு கேள்வியும் பதிலும் இங்கே குறிப்பிடத்தக்கது. “சேர்ந்தே இருப்பது? வறுமையும் புலமையும்” என்பதாக இருக்கும்.

அதுபோல மேற்குவங்க காங்கிரசில் அன்றிலிருந்து இன்று வரை சேர்ந்தே இருப்பது, கட்சியும் கோஷ்டியும் என்று சொல்லலாம். 1947க்குப் பிறகிலிருந்து காங்கிரஸ்தான் ஆட்சியில் இருந்தது, அதுவும் முப்பது வருடங்களுக்கு.

ஆனால் அதற்குள்ளாக, கோஷ்டிப் பூசல், கட்சி உடைதல், புதியக் கட்சி பிறத்தல், அது மறுபடியும் காங்கிரசுக்குள் ஐக்கியமாதல். அப்படி பிரிந்த கோஷ்டி, அதுவரை எதிர்த்து வந்த இடது சாரிகளுடன் கூட்டு வைத்தல், அப்படி கூட்டு வைத்து, அதன் மூலம் தாய்க் கட்சியை அல்லது அதிலிருந்து பிரிந்து ஆட்சியைப் பிடித்த கட்சியை ஆட்சியிலிருந்து இறக்குவது போன்றவற்றைத் தொடர்ந்து செய்து வந்தார்கள்.

இத்தனைக்கும் அந்த மாநிலத்தை ஆண்டவர்கள் அனைவரும் மெத்தப் படித்தவர்கள். 1942-லிருந்து 1962-வரை ஆட்சி செய்த பி.சி.ராய் என்று அறியப்படும் டாக்டர் பிதான் சந்திர ராய், அவரது பெயருக்கு பின்னால், 13 எழுத்துக்கள் வரும்படியான பட்டங்கள் பெற்ற மருத்துவர். கல்வியாளர், சுதந்திரப் போராட்ட வீரர், அதன் கூடவே அரசியல்வாதி. நவீன மேற்குவங்க சிற்பி என்று கூறுவார்கள்.

இவரது பிறந்த நாளான ஜூன் ஒன்றாம் தேதிதான் தேசிய மருத்துவர் தினமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. அனைத்துத் தரப்பினரின் நன் மதிப்பைப் பெற்றவர். உயிரோடு இருக்கும்போதே நாட்டின் உயர்ந்த விருதான ‘பாரத ரத்னா’ கௌரவத்தைப் பெற்றவர். இப்போது பா.ஜ.க.வும், பி.சி.ராய் முறையிலான ஆட்சியை வழங்குவோம் என்று சொல்லியிருக்கிறது.

பி.சி.ராய்

அப்படிப்பட்டவர் முதல் பதினைந்து வருடங்கள் அதாவது 1962 வரை முதல்வராக இருந்தார். முதல் சில வருடங்கள், பிரிவினையை அடுத்த கலவரங்கள், பிரச்சினைகளைச் சந்தித்து கட்டுக்குள் கொண்டு வந்தார். அடுத்தது விவசாயிகள் பிரச்சனை பெரிதாக உருவெடுத்தபோது, அதனையும் சமன் செய்தார். இப்படி தொடர்ந்து அந்த மாநிலம் பிரச்சினைகளிலேயே சிக்கியிருந்ததால், அந்தப் பொறுப்பை ஏற்பதற்கு வேறு யாரும் பிரச்சினைகள் செய்யவில்லை என்று சொல்லலாம்.

அவர் மறைந்ததும் காங்கிரசின் கோஷ்டிப் பூசல் ஆரம்பித்தது. 1950 களிலிருந்தே காங்கிரசில், அதுல்ய கோஷ் மற்றும் பிரஃபுல்ல சந்திர கோஷ் என்ற கோஷ்டிகள் இருந்தன. இவர்களது செயல்பாடுகளால் காங்கிரஸ் அரசின் நீதித்துறை அமைச்சராக இருந்த இளம் காங்கிரஸ் தலைவர் சித்தார்த்த சங்கர் ரே பதவியை ராஜினாமா செய்தார்.

இவர் பி.சி.ராய்க்கு மிகவும் பிடித்தமானவர். ஆனால் கோஷ்டிப் பூசலால் முழுதுமாக விலகி, இளம் கம்யூனிஸ்ட் தலைவரான ஜோதி பாசுவுடன் சேர்ந்த நான்கு வருடங்கள் நெருக்கமான நட்புடன் இருந்தார்.

1962–ல் சீன ஆக்கிரமிப்பின்போது, கம்யூனிஸ்ட் கட்சியின் நிலைப்பாட்டை ஏற்காமல் அவரிடமிருந்து பிரிந்து மறுபடியும் காங்கிரசில் சேர்ந்தார். அடுத்த நான்கு வருடங்கள் காங்கிரஸ் புயலில் சிக்கிய படகுபோல பல பிரச்சினைகளால் அலைக்கழிக்கப்பட்டது. அனைத்தையும் துணிவுடன், மிகுந்த சாமர்த்தியத்துடன் சித்தார்த் சங்கர் ரே எதிர் கொண்டார்.

1966–ல் உணவுப் பற்றாக்குறைப் பிரச்சினை பஞ்சம் என்ற அளவுக்கு பூதாகரமாக வெடித்தது. மக்கள் கிடைத்ததையெல்லாம், சூறையாட ஆரம்பித்தார்கள். பல இடங்களில் ராணுவம் சென்று அமைதிப்படுத்த வேண்டியிருந்தது.

இது மக்களிடத்திலும், எதிர்க் கட்சிகளிடமும் பெரும் அதிருப்தியைத் தோற்றுவித்தது. இந்தச் சமயத்தில்தான் அதிருப்தி கோஷ்டி வெளிப்படையாகக் கலகம் செய்தது.

1966-ல் பங்களா காங்கிரஸ் பிறந்தது. இதைத் துவக்கியது, அஜாய் முகர்ஜி. இவருடன் பின்னாளில் காங்கிரசின் மிக முக்கியப் பிரமுகராகவும், நாட்டின் குடியரசுத் தலைவராகவும் உயர்ந்த பிரணாப் முகர்ஜி இணைந்து செயல்பட்டார்.

பங்களா காங்கிரஸ் வெற்றி பெற வேண்டுமானால், அது வரை எதிரிகளாகப் பார்த்து வந்த எதிர்க்கட்சியான கம்யூனிஸ்டுகளுடன் கைகோர்ப்பதில் தவறில்லை என்பதை வலியுறுத்தி ஏற்க வைத்தவர் பிரணாப் முகர்ஜிதான். அதன் அடிப்படையில் பங்களா காங்கிரஸ், சிபிஐ, ஆர்எஸ்பி போன்ற கட்சிகள் இணைந்தன. இதனோடு சிபிஐ –எம் இணையாமல் தனியாக தேர்தல்களைச் சந்தித்தது.

ஆக, மூன்று முனைப்போட்டி இருந்தது. 1967 தேர்தலில் எதிர்பார்த்தாற்போல யாருக்கும் மெஜாரிட்டி கிடைக்கவில்லை. காங்கிரசை வரவிடக்கூடாது என்பதற்காக, எதிரெதிராகப் போட்டியிட்ட பங்களா காங்கிரஸ் கூட்டணி சிபிஐ – எம் உடன் சேர்ந்து ஆட்சி அமைத்தது. குறைந்த பட்ச பொதுத் திட்டம் என்று, 18 ஷரத்துக்கள் கொண்ட ஒரு வரைவின்படி ஆட்சியில் அமர்ந்தது இந்தக் கூட்டணி.

பங்களா காங்கிரஸ் சார்பில் முதல்வராக அஜோய் முகர்ஜியும், சிபிஐ – எம் சார்பில் துணை முதல்வராக லண்டனில் பாரிஸ்டர் பட்டம் பெற்ற ஜோதி பாசுவும் பதவி ஏற்றுக்கொண்டனர். இது எட்டு மாதங்கள் வரை நீடித்து ஆட்சி கவிழ்ந்தது.

இதற்கு முக்கியக் காரணம், அப்போதுதான் பெரும் வலிமையுடன் களம் இறங்கிய நக்சல்பாரி இயக்கத்தை அரசால் ஒன்றும் செய்ய முடியாமல் போனதுதான். ஆட்சியில் உள்ள கூட்டணியினரில் இது பற்றிய எதிரெதிர் கருத்து உள்ளவர்கள் இருந்ததால், பிரச்சினையை சமாளிக்க முடியாமல் போனது. பங்களா காங்கிரசிலிருந்த பிரஃபுல்ல சந்திர கோஷ் 16 எம்.எல்.ஏக்களுடன் விலகி வெளியே வந்தார்.

இதற்கு ஒரிஜினல் காங்கிரஸ் ஆதரவு கொடுத்தது. அவர்களை பலப்பரீட்சை செய்யச் சொன்ன கவர்னர், அதற்கடுத்த இரண்டு வாரங்களில் முதல்வர் முகர்ஜி பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டுமென உத்தரவிட்டார். அது தன்னால் முடியாது, அவகாசம் தேவை என்று முகர்ஜி கேட்டதை ஏற்காமல், ஐக்கிய முன்னணி மந்திரி சபையை டிஸ்மிஸ் செய்தார். கோஷ் புது முதல்வராகப் பதவி ஏற்றார்.

இதை எதிர்த்து சிபிஐ எம் தொடர்ந்து பல்வேறு போராட்டங்களை நடத்தியது. இதனுடன் சேர்ந்து பெரும் உணவுப் பிரச்சினை ஏற்பட்டது. நக்சல்பாரிகள் குழப்பநிலையைப் பயன்படுத்தி பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். எங்கு பார்த்தாலும் போராட்டங்கள், வன்முறைகள் தொடர்ந்தன.

மத்தியில் ஆண்ட காங்கிரஸ் 1968 – பிப்ரவரியிலிருந்து, 1972 வரையில் நான்கு முறை ஜனாதிபதி ஆட்சியைக் கொண்டு வந்தது. இந்தச் சமயங்களில், காங்கிரசின் எதிர்க் கட்சிகள் மற்றும் எதிரிக் கட்சிகளின் ஆட்சி நடந்தது.

1972 தேர்தல்களில் மீண்டும் காங்கிரஸ் ஆட்சியைப் பிடித்தது. சித்தார்த்த சங்கர் ரே முதல்வர். 1977 வரை ஆட்சி. இடையில் பங்களாதேஷ் போரால் உள்ளே வந்த அகதிகள் பிரச்சினை, 1975-ல் அவசரநிலைப் பிரகடனம். இந்த யோசனையை இந்திரா காந்திக்கு சொன்னவரே சித்தார்த்த சங்கர் ரே தான். அவரது மாநிலத்தில் அவர் பார்க்காத, எதிர் நோக்காத பிரச்சினைகளா என்று எண்ணியிருப்பார் போலும். அத்தனையும் சமாளிக்கவும் செய்தார்.

அதுவுமின்றி, சிக்கலான காலங்களில், காங்கிரஸ் எப்போதுமே கட்சிக்கு, ஆட்சிக்கு சிக்கல்கள் வரும்போது, முரட்டுத்தனமாகவே நடந்து வந்திருக்கிறது. இதற்குப் பல உதாரணங்களைச் சொல்லலாம்.

மெத்தப் படித்தவர், உண்மையிலேயே ஆளுமைத் திறனும், ஆளும் திறனும் உள்ள பி.சி.ராய் ஆட்சியின் கடைசிப் பகுதியில், அதாவது 1959-ல் மிகப்பெரிய மக்கள் போராட்டத்தை சந்தித்தார். அதை அவர், போலிசின் அடக்குமுறையால் எதிர் கொண்டார். விளைவு 80 உயிர்கள் பறிபோனது.

அது போலத்தான் இந்திரா காந்தியின் தேர்தல் செல்லாது என்ற அலகாபாத் தீர்ப்புக்குப் பின், எழுந்த நிலையை எப்படி எதிர்கொள்வது என்று அவர் யோசித்தபோது, நாட்டில் அவசர நிலைப் பிரகடனம் செய்தது என்று சில மிக முக்கிய உதாரணங்களைச் சொல்லலாம்.

இந்த விளைவுகளால் காங்கிரஸ் 1977 தேர்தல்களில் படுதோல்வி அடைந்தது. அதன் பிறகு ஆட்சியைப் பிடித்தது கம்யூனிஸ்டு கட்சி. அதுவும் 294 தொகுதிகளில் 243 தொகுதிகளில் மாபெரும் வெற்றியைப் பெற்றது. ஜோதி பாசு முதல்வரானார். அடுத்த முப்பது வருடங்களுக்கு கம்யூனிஸ்ட் கோட்டையாக மாறிப்போனது மேற்கு வங்கம்.

ஜோதி பாசு

கம்யூனிஸ்டுகள் இந்த வெற்றியை சாதாரணமாகப் பெறவில்லை. சுதந்திரம் அடைந்த காலத்திலிருந்தே, மக்கள் தொடர்பான பல்வேறு போராட்டங்களை நடத்தியும், ஆதரித்தும், பங்கு கொண்டும் வந்திருக்கிறார்கள்.

இவற்றில் பெரும்பாலும் விவசாயிகள் மற்றும் சமூகத்தின் அடித்தட்டு மக்களின் பிரச்சினைகளை கையெலெடுத்து தங்களை நிலைநிறுத்திக் கொண்டிருக்கிறார்கள்.

ஆனால், பதவிக்கு வந்த பின்பு அதேபோல தொடர்ந்து அவர்களால் நடந்து கொள்ள முடியவில்லை. இதில் முரண் நகை என்னவென்றால், எந்த விவசாயிகள், அவர்களது நிலங்கள் மேல் உள்ள உரிமைகள் ஆகியவற்றுக்காகப் பாடுபட்டு ஆட்சிக்கு வந்தார்களோ, அதே விவசாயிகளால்தான் தங்களது ஆட்சியையும், செல்வாக்கையும் இழந்தனர். அதைப் பற்றிப் பார்க்கலாம்.

(தொடரும்…)

01.03.2021    12 : 50 P.M

Comments (0)
Add Comment