கதாநாயகி சச்சு காமெடிக்கு திரும்பியது இப்படித்தான்!

தமிழ் சினிமாவின் மூத்த நடிகைகளில் ஒருவர் சச்சு. நான்கு வயதில் அறிமுகமான சச்சு, இன்றுவரை நடித்துக் கொண்டிருக்கிறார் கம்பீரமாக.

சென்னை மயிலாப்பூரில் மெகா குடும்பத்தில் பிறந்த சச்சு, எல்.வி.பிரசாத் இயக்கத்தில் ‘ராணி’ என்ற படம் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர்.

இந்தப் படம் வெளியான ஆண்டு 1953. பிறகு, நாயகி, குணசித்திர நடிகை, காமெடி, பாட்டி என நடித்து வருகிறார்.

இப்போது டிவி சீரியல்களிலும் நடித்துக் கொண்டிருக்கும் சச்சு, தமிழ், தெலுங்கு, மலையாளம் உட்பட பல மொழிகளில், சுமார் 500 படங்களுக்கு மேல் நடித்திருக்கிறார். அதில் 50 படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார்.

அவர் நடிகையானது, அவர் சகோதரி ‘மாடி லட்சுமி’யால்! சச்சுவின் பெற்றோருக்கு மொத்தம் ஒன்பது குழந்தைகள். சச்சு ஆறாவதாக பிறந்த குழந்தை. இவ்வளவு குழந்தைகளைப் பார்க்க, அவர் பெற்றோர் கஷ்டப்பட்டதால், சச்சுவையும் அக்கா மாடி லட்சுமியையும் பாட்டியிடம் அனுப்பி வைத்தார்கள்.

இதனால், மண்ணடியில் இருந்து மயிலாப்பூருக்கு குடிபெயர்ந்தார்கள் இருவரும். மயிலாப்பூரில் நாட்டியம் கற்றுக் கொண்டிருந்த மாடி லட்சுமியைப் பார்த்து சச்சுவும் கற்கத் தொடங்கினார். அவர்களுக்கு நாட்டியம் கற்றுக்கொடுத்த தண்டபாணி பிள்ளை, சினிமாவில் பணியாற்ற ஆரம்பித்தார்.

இதனால் அவரைத் தேடி திரையுலகினர் வந்து சென்றனர். அவர்கள் கண்ணில் பட்டதால், அக்கா ‘மாடி லட்சுமி’க்கு வாய்ப்பு கிடைத்தது. அவரை வைத்து சச்சுவும் நடிகையானார்.

சச்சு ஹீரோயினாக நடித்துக் கொண்டிருந்த காலத்தில், சரோஜாதேவி, பத்மினி, ஜெயலலிதா என பலர் ஹீரோயின்களாக நடித்துக் கொண்டிருந்தனர். சிறுவயதில் இருந்தே சச்சுவை பார்த்து வருவதால், எம்.ஜி.ஆர். சிவாஜி, ஜெமினி உட்பட அப்போதைய ஹீரோக்கள் அவரைத் தங்களுக்கு நாயகியாக்க யோசித்தார்கள்.

அப்போதுதான் ஶ்ரீதர் ‘காதலிக்க நேரமில்லை’ படத்தை ஆரம்பித்தார். எல்லோருமே புதுமுகங்கள் என்பதால், அந்தப் படத்தில்தான் அவர் காமெடிக்கு மாறினார். அதில் நாகேஷூக்கு ஜோடியாக நடிக்க வைத்தார் ஶ்ரீதர். பிறகு காமெடியில் கொடிகட்டிப் பறந்தார்.

நாகேஷ், தங்கவேலு, சுருளிராஜன், தேங்காய் சீனிவாசன், வெண்ணிற ஆடை மூர்த்தி என அப்போதைய முன்னணி காமெடி நடிகர்களுடன் நடித்த சச்சு, நாகேஷுடன் மட்டும் 50 படங்களில் நடித்திருக்கிறார்.

சச்சுவுடன் நடித்த பல ஹீரோயின்கள் சினிமாவை விட்டு சென்றுவிட்ட போதும் இன்னும் நடித்துக் கொண்டிருக்கும் சச்சு, திருமணமே செய்துகொள்ளவில்லை.

இதுபற்றி ஒருமுறை அவரிடம் கேட்டபோது, “என் உடன்பிறந்தவர்கள் அதிகமானவர்கள். அவர்களின் வாரிசுகள் அதிகம். இதனால், மெகா குடும்பமாகி விட்டது. சிலர் நன்றாக இருக்கிறார்கள். சிலர் கஷ்டப்படுகிறார்கள். அனைவரையும் நல்ல நிலைமைக்கு கொண்டு வர வேண்டும் என்று நினைத்ததால், நான் திருமணம் செய்துகொள்ளவில்லை என்று தெரிவித்தார் சச்சு.

பெரிய மனதுதான்!

– அழகு

01.03.2021 03 : 50 P.M

Comments (0)
Add Comment