தமிழக அரசுத் துறைகளில் கையாளப்படும் கோப்புகள், பதிவேடுகள், ஆவணங்கள், அரசாணைகள், சுற்றறிக்கைகள், அறிவிப்புகள், தாக்கீதுகள், கடிதங்கள் உள்ளிட்டவற்றில் ஆங்கிலம் அதிகம் பயன்படுத்தப்படுவதாக பல்வேறு புகார்கள் எழுந்தன.
இதையடுத்து, தமிழில் மட்டுமே அறிவிப்புகளை வெளியிட வேண்டும் என்று அனைத்து துறைகளையும் அறிவுறுத்தி, தமிழ் வளர்ச்சித் துறை செயலாளர் சமீபத்தில் அரசாணை வெளியிட்டிருந்தார்.
அதில், 1956-ல் இயற்றப்பட்ட சட்டத்தின்படி, தமிழகத்தில் தமிழ் மட்டுமே ஆட்சி மொழி என்பதை மேற்கோள் காட்டியிருந்தார். இந்த அரசாணையை சுட்டிக் காட்டி அனைத்து அரசு கல்வி நிறுவனங்களும் தமிழில் மட்டுமே அறிவிப்புகளை வெளியிடுமாறு உயர்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக உயர்கல்வித்துறை துணைச் செயலாளர் ஜெ.மோகன் ராமன் வெளியிட்ட அரசாணையில் கூறியிருப்பதாவது; ‘தமிழகத்தின் ஆட்சிமொழி தமிழ் மட்டுமே என்பதால் உயர்கல்வித் துறையின் கீழ் செயல்படும் கல்வி நிறுவனங்கள், தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் மற்றும் அதன் கீழ் செயல்படும் இயக்ககங்களில் வெளியிடப்படும் ஆணைகள், ஆவணங்கள் உள்ளிட்டவற்றில் சில விதிவிலக்கு தவிர அனைத்து வகை அறிவிப்புகளையும் தமிழில்தான் பிறப்பிக்க வேண்டும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமீபகாலமாக உயர்கல்வித் துறை தொடர்பான அறிவிப்புகள் அனைத்தும் பெரும்பாலும் ஆங்கிலத்தில் வெளியாவது குறிப்பிடத்தக்கது.
01.03.2021 01 : 20 P.M