பண்பாட்டு மாற்றத்தில் காவிரியின் பங்கு!

பூம்பாளை அழைத்து வரும் புலரி -2

பேராவூரணி, பட்டுக்கோட்டை வட்டங்களில் தென்னை விவசாயம் பெருகியதற்கு கதைகளும் காரணங்களும் உண்டு.

பிரிவு படாத தஞ்சை மாவட்டத்தில் இயற்கையான காவிரி ஆறு பாய்வது திருவையாறு, கும்பகோணம், மயிலாடுதுறை உள்ளடங்கிய கீழத்தஞ்சை பகுதிகளில்தான். வலங்கைமான், நீடாமங்கலம், குடவாசல் பகுதிகளுக்கு காவிரியின் கிளை ஆறுகள் பாய்ந்து வளம் அளிக்கிறது.

தஞ்சை நகரத்திற்கு தெற்கே, ஒரத்தநாடு, பாப்பாநாடு, வடசேரி, பட்டுக்கோட்டை, பேராவூரணி பகுதிகள் தண்ணீருக்காக, வெள்ளைக்காரன் வெட்டி அமைத்த புது ஆறு பாசனத்திற்காக காத்திருக்க வேண்டும்.

மேட்டூர் அணை திறக்கப்பட்டால் இயற்கைக் காவிரி பொங்கியோடி அதன் பாசன பகுதிகளை உடனடியாக கோடையின் வறட்சியில் இருந்து மீட்டெடுத்து விடும். புது ஆறு பாசனம் தொடர்ச்சியாக தண்ணீர் தராது. முறைவைத்துத் திறக்கப்படும் தண்ணீரின் கடைசிச் சொட்டு பட்டுக்கோட்டை, பேராவூரணி பகுதிகளுக்கு வந்து சேர்வதற்குள் பாதி வாய்க்கால் வறண்டுவிடும்.

முன்மடைக்காரர்களாகிய ஒரத்தநாடு, பாப்பாநாடு பகுதிகளின் நூற்றுக்கணக்கான கிராமங்களின் ஏராளமான ஏரிகளையும் குளங்களையும் நிரப்பிவிட்டு தண்ணீர் கடைமடை வந்து சேரும்போது ஆடிப் பட்டம் விதைப்பு தப்பிப் போய் புரட்டாசி வந்துவிடும்.

ஐப்பசியில் நடவு நட்டால், கதிர் முற்றி வருவதற்கு மாசி வரை ஆகிவிடும். தை மாதத்திலேயே (ஜனவரி) மேட்டூர் அணையை மூடி விடுவார்கள். கதிர் முற்றிய நெல் வயல் கடைசித் தண்ணீருக்காகக் காத்திருக்கும்.

வீட்டில் வைத்திருந்த விதை நெல்லையும், நகை, நட்டுகளையும் அடகு வைத்த பணத்தையும் வெள்ளாமையில் போட்டுவிட்டு அறுவடைக்காக காத்திருக்கும் விவசாயிகள், குளம், குட்டைகளில் இருந்து இறைத்து, நீர்ப் பாய்ச்சி மிகுந்த சிரமங்களைக் கடந்து விளைந்த நெல்லை வீட்டுக்குக் கொண்டு வருவார்கள்.

காவிரியின் குறுக்கே கர்நாடகா அணைக்கு மேல் அணையைக் கட்டியதும் கடைமடை பகுதிகளுக்கு குளம், குட்டைகள் நிரப்பக் கூட நீர் வந்து சேராது. ஆடு, மாடுகள் நீரருந்தவும் மனிதர்கள் குளிக்கவும் கூட தண்ணீர் கிடைப்பது அரிதாகிப் போனது.

பட்டுக்கோட்டைக்கு வடக்கே உள்ள இரண்டொரு கிராமங்களின் விவசாயக் குடும்பங்கள் கூண்டோடு கிளம்பி, சென்னைக்குப் போய் பட்டாணிக் கடை வைத்தார்கள். அவர்கள் பெரும் பணக்காரர்களாகி இன்று சென்னை நகரம் முழுவதிலும் பட்டாணி மற்றும் வறுகடலை வியாபாரத்தில் தொழிலதிபர்களை போல இயங்கி, உயர்ந்த நிலையை அடைந்து விட்டார்கள்.

கடைமடைப் பகுதிகளில் நெல் விவசாயம் செய்பவர்களின் நிலைமை மிகவும் பரிதாபமாகப் போனது. அவர்கள் வீட்டுப் பிள்ளைகளை நல்ல பள்ளிக் கூடங்களில் சேர்க்க முடியவில்லை. பள்ளிப் படிப்பு முடித்தவர்கள் கல்லூரிகளில் சேர வழியற்றவர்களாக இருந்தார்கள். பூர்வீக நிலங்களை விற்று திருமணங்கள் நடத்தினர். நெல் விவசாயம் தொடர் நட்டத்தைத் தந்த போதிலும் கௌரவம் கருதி, அதை கைவிடாமல் செய்து வந்தார்கள்.

பேராவூரணி கடைமடை கிராமங்களுக்கு தண்ணீர் வரத்து ஒரு சூழலில் முற்றிலும் தடைபட்டது. அப்பொழுது அவர்கள் கையில் எடுத்ததுதான் தென்னை வேளாண்மை. தென்னை நடவு செய்ய ரொம்பப் பெரிய தண்ணீர் தேவை இராது.

ஆடி மாத மழை ஈரத்தில், 3 அடி ஆழம், 3 அடி அகலம், 3 அடி நீளம் அளவிற்கு குழி அமைத்து, தென்னங்கன்றை அதில் பதிந்து விட்டால் போதும். ஓரிருமுறை உயிர்த் தண்ணீர் ஊற்ற வேண்டியிருக்கும். ஐப்பசி மழையில் தளிர்த்து, மார்கழியில் வேர் இறங்கிவிடும்.

முதல் வருடக் கோடையில் இரண்டொரு தரம் தண்ணீர் தந்து விட்டால், மென்மேலும் வேர்ப்பரப்பி நிலத்தை இறுகப் பற்றிக் கொள்ளும். பிறகு வரும் காலங்களில் ஓரளவு வறட்சியைக் கூட வளர்ந்த தென்னங்கன்றுகள் தாங்கிக் கொள்ளும்.

எங்கள் பகுதிகளில் ஒரு ஏக்கர் நிலத்தை மூன்று மா என்று பிரித்துக் கொள்வது வழக்கம். ஒரு மாவில் 25 தென்னைகள் நடவு செய்யலாம். ஒரு தென்னைக்கும் இன்னொரு தென்னைக்கும் இடைவெளி 24 அடிகள் இருந்தால், ஒன்றின் நிழல் இன்னொன்றில் படாமல் பொடசலற்று வளரும். இதைத்தான் “தென்னைக்கு தேரோட” என்பார்கள்.

1980-களில் இங்கு தென்னை விவசாயம் விரிவு கொள்ளத் தொடங்கி, கஜா புயலுக்கு முதல் நாள் வரையில் பரந்த பரப்பளவில் பரவிக் கிடந்தது. இங்கிருக்கும் கிராமங்களில் ஒவ்வொரு வீட்டு வாசலிலும் முட்டாடிக் கிடக்கும் தேங்காய்கள் சிறு குன்று போல காட்சியளிக்கும்.

(தொடரும்…)

– கே.பி.கூத்தலிங்கம்

நன்றி: தி இந்து தமிழ் நாளிதழ்.

27.02.2021 12 : 56 P.M

Comments (0)
Add Comment