தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 6-ம் தேதி தேர்தல் நடத்தப்படும் என்றும், மே-2 ம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியாகும் என்று இந்தியத் தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா நேற்று அறிவித்திருந்தார்.
அதைத் தொடர்ந்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் தமிழகத்தில் உடனடியாக அமலுக்கு வந்துள்ளது.
இதனிடையே, இந்த விதிமுறைகள் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய தமிழகத் தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு, தமிழகத்தில் தேர்தல் பாதுகாப்புப் பணிக்காக 45 கம்பெனி துணை ராணுவ வீரர்கள் தமிழகம் வந்துள்ளதாகவும், அவர்கள் காவல் துறையினருடன் இணைந்து செயல்படுவார்கள் என்றும் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், “தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களில் 70 சதவீதம் வாக்குச்சாவடிகள் இறுதி செய்யப்பட்டுள்ளது.
மீதமுள்ள வாக்குச்சாவடிகள் இறுதி செய்யப்பட்டு விடும். பணம் பட்டுவாடாவைத் தடுக்க பறக்கும் படை, நிலை கண்காணிப்புக் குழுக்கள் மூலம் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்.
தமிழகம் முழுவதும் 50 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குச்சாவடி மையங்களில் தேர்தல் நாளன்று கண்காணிப்பு கேமரா பொருத்தப்படும். ஒரு வாக்குச் சாவடி மையத்திற்கு ஆயிரம் வாக்களர்கள் மட்டும் வாக்களிக்க முடியும். கொரோனா நோய் பரவாமல் தடுக்கும் வகையில் சமூக இடைவெளி நிச்சயம் கடைபிடிக்கப்படும்.
பணம் பட்டுவாடா, தேர்தல் விதிமீறல்கள் குறித்து பொதுமக்களும் 1950 என்ற இலவச தொலைபேசி எண்ணுக்கும், சி-விஜில் ஆப் மூலமும் புகார்களை 24 மணி நேரமும் அளிக்கலாம்.
மேலும் தேர்தல் பார்வையாளர்கள், தேர்தல் செலவின பார்வையாளர்களை இந்தியத் தேர்தல் ஆணையம் நியமித்துள்ளது. தமிழகத்தில் உள்ள வங்கி உயர் அதிகாரிகளிடம் பணம் நடமாட்டத்தைக் கண்காணிப்பது குறித்து தேர்தல் ஆணையம் ஆலோசனை நடத்தியுள்ளது.
அனைத்து அரசியல் கட்சியினர் மட்டுமின்றி அனைவரின் வங்கிக் கணக்குகள், பணப் பரிவர்த்தனைகள் கண்காணிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
அதன்படி, பணம் நடமாட்டத்தைக் கண்காணிக்க உறுதியான நடவடிக்கை எடுக்கப்படும். குறிப்பிட்ட ஒரே நபர் அடிக்கடி பணம் பரிமாற்றம் செய்வது, அதிக பணம் எடுப்பவர்கள் குறித்த தகவல்களை கண்காணித்து தகவல் தெரிவிக்கும்படி வங்கி அதிகாரிகளிடம் கேட்டுக் கொண்டுள்ளோம். வாக்குப்பதிவு இயந்திரங்களை எடுத்துச் செல்வதற்கு சில நடைமுறைகள் பின்பற்றப்படும். அரசியல் கட்சிகளுக்கு இதுபற்றி தகவல் தெரிவிக்கப்படும்.
பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் 50 ஆயிரத்துக்கும் மேல் பணம் எடுத்துச் சென்றால் அந்தப் பணத்தை எங்கிருந்து எடுத்துச் செல்கிறார்கள் என்பதற்கான ஆதாரங்கள் வைத்திருக்க வேண்டும். ஏடிஎம் அல்லது வங்கியில் இருந்து பணம் எடுத்து சென்றதற்கான ரசீது வைத்திருக்க வேண்டும்.
இல்லையென்றால் தேர்தல் பறக்கும் படை வீரர்கள் பணத்தை பறிமுதல் செய்வார்கள். பணம் பறிமுதல் செய்யப்பட்டாலும், பணம் மற்றும் நகைகளை எடுத்துச் செல்வதற்கான ஆதாரத்தைக் காட்டி, திரும்ப பெற்றுக் கொள்ளலாம்.
வாக்காளர்கள் பட்டியலில் பெயர் இல்லாதவர்கள் இப்போது கூட ஆன்லைன் மூலம் தங்கள் பெயரை சேர்த்துக் கொள்ளலாம். தேர்தல் ஆணையம் அவ்வப்போது சொல்லும் நடைமுறைகள் தமிழகத்தில் நடைமுறைப் படுத்தப்படும்” எனக் கூறினார்.
தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதையொட்டி, அரசுக்கு சொந்தமான இடங்களில் அனைத்து சுவர் விளம்பரங்கள், சுவரொட்டிகள், ஆவணங்கள், பதாகைகள், கொடிகள் போன்றவை 24 மணி நேரத்திற்குள் அகற்றப்படும்.
ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள், சாலைகள், பேருந்துகள், உள்ளாட்சி அமைப்புக் கட்டிடங்கள் போன்றவைகளில் உள்ள அனைத்து அரசியல் விளம்பரங்களும் தேர்தல் அறிவிப்பிலிருந்து 48 மணி நேரத்திற்குள் அகற்றப்படும்.
தனியார் சொத்தில் செய்யப்பட்டுள்ள அனைத்து அரசியல் கட்சிகளின் விளம்பரங்கள் இருந்தால், சட்டம் மற்றும் நீதிமன்றத்தின் உத்தரவுகளுக்கு உட்பட்டு தேர்தல் அறிவிப்பிலிருந்து 72 மணி நேரத்திற்குள் அகற்றப்படும்.
27.02.2021 11 : 35 A.M