தா.பா எனும் இளைய ஜீவா!

தோழர் தா.பாண்டியனின் பேச்சை முதன் முதலாக நான் கேட்ட போது எனக்கு பத்து வயதிருக்கும். ஈரோட்டுக்கு அருகே உள்ள மாணிக்கம்பாளையம் என் ஊர். பொதுவுடமைக் கட்சியில் என் தந்தை இருந்தார். எனவே இயல்பாகவே அக்காட்சி கூட்டங்களுக்குச் செல்வதும், கே.டி.ராஜு போன்ற மாபெரும் பேச்சாளர்களின் பேச்சைக் கேட்பதும் இயல்புதான்.

அந்த வகையில்தான் பக்கத்து ஊரான வீரப்பன் சத்திரத்தில் தா.பா-வின் பேச்சை முதன்முதலாக தரையில் அமர்ந்து சிறுவனாக இருந்தபோது கேட்டேன். அதிலிருந்து நூற்றுக்கணக்கான சொற்பொழிவுகளை அவர் ஆற்றக் கேட்டுள்ளேன். அவருடன் மேடைகளில் பேசி உள்ளேன். அவருடன் சுற்றுப்பயணம் மேற்கொண்டு அவரை கூர்ந்து கவனித்துள்ளேன்.

தா.பா ஒரு மிக இயல்பான பேச்சாளர். எந்த மேடையையும் அவர் நொடியில் வசியம் செய்வார். அதற்காக அவர் குறிப்புகள் எடுத்து, தயாரித்தெல்லாம் பேசுவதில்லை. மேடையில் பேசுவோரை கவனித்து அப்படியே சுயமாகப் பேசுவார். அதனால் அவரது பேச்சில் ஒரிஜினாலிட்டி இருக்கும்.

1975-ல் சென்னையில் அனைத்திந்திய மாணவர் பெருமன்றம், இளைஞர் மன்றம் ஆகியவற்றின் சார்பில் ஒரு சர்வதேச மாநாடு நடந்தது. நான் 15 வயது மாணவனாக அதில் கலந்து கொண்டிருந்தேன். இத்தாலி நாட்டைச் சேர்ந்த ஒருவர்தான் மாநாட்டுத் தலைவர். மாநாட்டுக்கு வரவேற்புக் குழுத் தலைவராக இருந்தவர் தா.பாண்டியன்.

மாநாட்டில் உணவு இடைவேளை விடும் நேரம். பசியோடு அனைவரும் காத்திருந்தோம். அப்போது மாநாட்டுத் தலைவர் அவருடைய உச்சரிப்பில் “பண்டியான் வில் ஸ்பீக்” என்று அழைத்தார். தா.பா மாநாட்டுக்குப் பின் வரிசையில் பிஸியாக ஏதோ வேலையில் இருந்தவர் மேடைக்கு ஓடினார். தான் பேச வேண்டுமா என்று தலைவரிடம் உறுதிப்படுத்திக் கொண்டார். ஒலிவாங்கியின் முன் வந்து நின்றார். கணீர் என்று ஆங்கிலத்தில் ஆரம்பித்தார்.

“மல்டி நேஷனல் கார்பரேஷன், த மான்ஸ்டர்ஸ்”  என்று ஆரம்பித்தார். அட நம்ப தா.பா ஆங்கிலத்தில் பேசுகிறாரே என்று நிமிர்ந்து அமர்ந்தேன். ஒரு மணி நேரம் பேசினார். வெளியே பேய் மழை பெய்து கொண்டிருந்த அவ்வேளையில் உள்ளே தா.பா-வின் உரைமழை!

மேடையில் இருந்தவர்கள் அவர் பேச்சை மெய்மறந்து கேட்க, நாங்கள் அசந்துபோய் பசி மறந்து கேட்டுக் கொண்டிருந்தோம். நான் ஆங்கிலத்தில் கேட்ட பிரமாதமான முதல் சொற்பொழிவு அதுதான். உணர்ச்சிகரமான சொல் வீச்சு அது.

1979 ல் வீரப்பன் சத்திரத்தில் ஒரு கட்சிக் கூட்டம். சுமார் ஒன்றேகால் மணிநேரம் தா.பா பேசினார். முடிந்தவுடன் அவரை அழைத்துக் கொண்டு ஈரோட்டில் அப்போது நடந்து கொண்டிருந்த திராவிடர் கழகம் ஏற்பாடு செய்திருந்த தந்தை பெரியார் நூற்றாண்டு விழாக் கூட்டத்திற்குச் செல்ல வேண்டும். அவருடன் நான் தான் சென்றேன். பெருங்கடல் என அங்கே கூட்டம் கூடியிருந்தது. ஒருவழியாக மேடைக்குப் போனோம். மேடையில் தலைமை ஏற்றிருந்த வீரமணி, உடனடியாக இப்போது தா.பாண்டியன் பேசுவார் என்று அறிவித்து விட்டார்.

தா.பா-வும் கவலைப்படாமல் மைக்கைப் பிடித்து பெரியாரைப் பற்றிப் பேசினார். சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக பேசி முடித்து நன்றி வணக்கம் என்று கூறி விட்டு துண்டை உதறித் தோளில் போட்டுக் கொண்டு நாற்காலியில் அமர்ந்தார்.

இன்று சிபிஐ, சிபிஎம் கட்சியினர் பெரியார் பற்றி ஏற்றுக் கொள்கிறார்கள். கூட்டம் போட்டுப் பேசுகிறார்கள். ஆனால் அன்றைக்குக் காலகட்டம் வேறு. சாதியா, வர்க்கமா என்ற விவாதங்கள் நடைபெற்ற காலம். ஒரு பொதுவுடமைக் கட்சிக்காரர் பெரியாரைப் பற்றிப் பேசுவது அரிது.

தா.பா பேசிவிட்டு அமர்ந்ததும் வீரமணி உணர்ச்சிவயப்பட்டு துள்ளி எழுந்தார். “இன்றைக்கு தா.பா ஆற்றிய உரை வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது. இந்த உரையை சிறு நூலாக அச்சிட்டு வினியோகம் செய்வோம்” என்று அறிவித்தார். அந்த நூல் தான் இன்று விற்பனைக்கு கிடைக்கிற ‘சமூக விஞ்ஞானி தந்தை பெரியார்’ என்ற உரை.

நான் ஈரோடு சிக்கையா நாயக்கர் கல்லூரியில் பியூசி படித்தபோது கல்லூரியில் பேச தா.பாண்டியனை அழைக்க வேண்டும் என்று அப்போதைய பிரின்சிபால் ஏ.பி.நாடாரிடம் கூறினோம். ஆனால் அவர் மறுத்தார். இருப்பினும் அதையும் மீறி அவரைப் பேச அழைத்து விட்டோம். அதனால் விழாவுக்கு வர பிரின்சிபால் மறுத்து விட்டார். ஆனால் அவரை நீங்கள் வந்து கடைசி பெஞ்சில் அமருங்கள். தா.பா உரை ஆரம்பித்தவுடன் சென்று விடலாம் என்று வலுக்கட்டாயமாகக் கூட்டி வந்தோம்.

உரை இரண்டு மணிநேரம். பிரின்சிபால் எழுந்து செல்லாமல் கடைசி பெஞ்சில் அமர்ந்து உரை முழுக்கக் கேட்டார். அதிலிருந்து தொடர்ந்து 10 ஆண்டுகள் தா.பா. அக்கல்லூரிக்கு சிறப்புப் பேச்சாளராக அழைக்கப்பட்டார். அவரை வேண்டாம் என்று சொன்ன பிரின்சிபால் எல்லா உரைக்கும் மேடையில் வீற்றிருந்த கேட்டார்.

நான் அங்கிருந்து நான்காண்டுகள் படிப்பை முடித்து வெளியேறிய பின்னரும் வாழ்த்துரைக்காக அழைக்கப்பட்டேன். பத்தாம் ஆண்டு, மேடையில் பேசிய பிரின்சிபால், ‘காம்ரேட் தா.பாண்டியன்’ என்று விளித்தார். “நான் இந்த ஆண்டு ஓய்வுபெறப் போகிறேன். தா.பா கடந்த பத்தாண்டுகளில் இந்த கல்லூரிக்கு விசிட்டிங் புரபஸர் ஆகிவிட்டார். அவர் தொடர்ந்து இங்கே வரவேண்டும்” என்று பேசினார்.

தா.பா தோழர் ஜீவாவின் நேரடிச் சீடர். காரைக்குடியில் படித்தவர். அங்கே கம்பன் கழகக் கூட்டங்களைக் கேட்டு வளர்ந்தவர். ஜீவாவின் புகழ்பெற்ற கம்பன் இலக்கிய உரைகளைக் கேட்டவர். காரைக்குடியில் பேராசிரியராகப் பணிபுரிந்தவர். ஜீவாவின் அழைப்பில் தான் கட்சியின் முழுநேர ஊழியரானார். ஜீவாவைப் போலவே அரசியல் மட்டுமன்றி இலக்கியமும் பேசத் தெரிந்தவர். அவரை இளைய ஜீவா இப்போது பேசுவார் என்று தான் கட்சிக் கூட்டங்களில் அறிமுகம் செய்வார்கள்.

ஜீவா மேடையில் பலமான நாட்டியம் போன்ற உடல் அசைவுகளைக் கொண்டவர். தா.பா உடல் அசையாது. கை மட்டும் எப்போதாவது உயரும். ஆனால் பேச்சுக்கு ஏற்ப உணர்ச்சிகளை முகம் பிரதிபலிக்கும். கண்கள் ஜொலிக்கும்.

பாரதி பற்றி மிகச் சிறப்பாகப் பேசக் கூடியவர். ஒருமுறை பவானியில் ‘பாரதியும் பாரதிதாசனும்’ என்ற தலைப்பில் மிக அருமையாகப் பேசினார். அதை அவரது ‘மாஸ்டர் பீஸ்’ என்று கூட நான் சொல்லுவேன். வள்ளலார், திருவள்ளுவர் என்று அவர் பேச ஆரம்பித்தால் கேட்டுக்கொண்டே இருக்கலாம்.

சோவியத் இலக்கியங்கள் ஷெல்லி, ஷேக்ஸ்பியர், பைரன் என்று ஆழமான வாசிப்பு கொண்டவர். அவரது சொல் ஆளுமை மிக வலிமையானது. உச்சரிப்பு மிக உறுதியானது.

பேச்சின்போது பொதுவாக இடையே தண்ணீர் அருந்த மாட்டார். சூடாக டீ வைப்போம். குடித்துக் கொள்வார்.

****

அந்திமழை வெளியீடாக வந்த ‘பேசித் தீர்த்த பொழுதுகள்’  நூலிலிருந்து வழக்கறிஞர் ஸ்டாலின் குணசேகரனின் கட்டுரை.

27.02.2021 12 : 30 P.M

Comments (0)
Add Comment