அடிக்கடி ஆட்சி கலைப்புக்கு ஆளாகும் யூனியன் பிரதேசம் புதுச்சேரி.
அந்த சரித்திரத்தைப் பார்க்கும் முன்பு, புதுச்சேரி தோன்றிய வரலாற்றைப் பார்க்கலாம்.
பிரெஞ்சு காலனி ஆதிக்கத்தில் இருந்த பாண்டிச்சேரி, காரைக்கால், மாஹி, ஏனாம் ஆகிய நான்கு பகுதிகளை உள்ளடக்கி உருவாக்கப்பட்ட மாநிலம் தான் புதுச்சேரி.
இதன் தலைநகரமான புதுச்சேரி கடலூருக்கு பக்கத்தில் உள்ளது.
காரைக்கால், காவிரி டெல்டா மாவட்டங்களை ஒட்டிய பகுதியில் உள்ளது.
மாஹி, ஆந்திர மாநில எல்லையிலும், ஏனாம் கேரள மாநிலத்திலும் இருக்கின்றன.
1962 ஆம் ஆண்டு புதிதாய் பிறந்தது புதுச்சேரி.
இதுவரை அந்த மாநிலத்தில் ஆறு முறை ஆட்சி கலைக்கப்பட்டுள்ளது.
முதன் முறையாக தி.மு.க. முதல்வராக இருந்த பரூக் மரைக்காயரின் ஆட்சி கலைக்கப்பட்டது.
1969 ஆம் ஆண்டு இந்திய கம்யூனிஸ்ட் ஆதரவுடன் பரூக் முதலமைச்சர் ஆனார். 73 ஆம் ஆண்டு கம்யூனிஸ்ட் கட்சி, தனது ஆதரவை விலக்கி கொண்டதால் பரூக் ஆட்சி கவிழ்ந்தது. குடியரசுத் தலைவர் ஆட்சி பிரகடனம் செய்யப்பட்டது.
1974 ஆம் ஆண்டு அ.தி.மு.க.வின் ராமசாமி முதல்வரானார். ஆட்சி அமைத்தபோது, அவருக்கு தனிப் பெரும்பான்மை கிடையாது. எப்படியாவது மெஜாரிட்டியை பெற்று விடலாம் என நினைத்திருந்தார். ஆனால் முடியவில்லை. 21 நாட்களில் அவரது ஆட்சி கவிழ்ந்து போனது.
1977 ஆம் ஆண்டு காங்கிரஸ் (எஸ்) ஆதரவுடன், அ.தி.மு.க.வின் ராமசாமி மீண்டும் முதல்வர் ஆனார்.
1980 ஆம் ஆண்டு அந்தக் கட்சி, தனது ஆதரவை விலக்கிக் கொண்டதால் அ.தி.மு.க. ஆட்சி கவிழ நேரிட்டது.
1980 ஆம் ஆண்டு காங்கிரஸ் ஆதரவுடன், தி.மு.க.வின் ராமச்சந்திரன் முதல்வர் ஆனார். மூன்றே ஆண்டுகளில் தி.மு.க.வுக்கு அளித்த ஆதரவை காங்கிரஸ் வாபஸ் பெற்றது. ராமச்சந்திரன் முதல்வர் பதவியில் இருந்து இறங்கும் படி ஆயிற்று.
1990 ஆம் ஆண்டு ஜனதா தளம் ஆதரவுடன் தி.மு.க.வின் ராமச்சந்திரன் மீண்டும் முதல்வர் ஆனார். ஒரே ஆண்டில் ஜனதா தளம், தனது ஆதரவை விலக்கிக்கொண்டது. மீண்டும் ராமச்சந்திரன் பாதியிலேயே முதல்வர் பதவியை துறக்க நேர்ந்தது.
இப்போது ஆறாவது முறையாக நாராயணசாமி அரசு கலைப்புக்கு ஆளாகி உள்ளது. தி.மு.க.வின் ராமச்சந்திரன் அரசாங்கம் கலைக்கப்பட்ட பின், சரியாக 30 ஆண்டுகள் கழித்து, புதுச்சேரியில் ஆட்சி கலைப்பு நடந்துள்ளது.
எனினும், நாராயணசாமி 4 ஆண்டுகள் 9 மாதங்கள் முதல்வராக இருந்து சாதனை படைத்துள்ளார்.
‘அரைகுறை’ அரசாங்கங்ளில் அதிக காலம் முதல்வராக இருந்தவர் என்ற பெருமை இவரையே சேரும்.
– பி.எம்.எம்.
26.02.2021 01 : 56 P.M