3,000 ரூபாயில் தொடங்கி, ஆண்டுக்கு 3 கோடி வருமானம்!

மும்பையில் உள்ள வாசாய் என்ற ஊரைச் சேர்ந்த சுமித்ரா ஷிங்கேவுக்கு தன் கணவனை இழந்தபோது வயது 30. மகனுக்கு 5 வயது ஆகியிருந்தது. இருவருக்கும் என்ன செய்வதென்று தெரியவில்லை. கையில் செலவுக்குப் பணமில்லை. குழந்தையைக் காப்பாற்ற வேலை தேடினார் சுமித்ரா.

பெண்களால் பெண்களுக்காக நடத்தப்படும் ஸ்ராமிக் மகிள விகாஸ் சங்கத்தின் அறிமுகம் அவருக்குக் கிடைத்தது. சுமித்ரா போன்ற பெண்களுக்கு ஆதரவளிக்கும் அமைப்பு அது. அந்த சுமித்ராவுக்கு இப்போது வயது 50. மகனுக்கு வயது 25. தற்போது அவன் தனியார் நிறுவனத்தில் பணியாற்றுகிறான். எல்லாம் பெண்களால் முழுமையாக நடத்தப்படும் தொழில் முயற்சிகளால் சாத்தியமாகி இருக்கிறது.

1991 ஆம் ஆண்டு ஓர் அறக்கட்டளையாக மகிள விகாஸ் சங்கம் என்ற பெயரில் பதிவு செய்யப்பட்டது. அதன் மூலம் மும்பையில் 300 பெண்கள் வாழ்க்கையில் உயர்வைப் பெற்றுள்ளனர். தங்களுக்கு தெரிந்த சமையல் கலையைச் செய்து வாழ்வாதாரத்தைப் பெருக்கியுள்ளனர்.

இந்த அறக்கட்டளையை நிறுவியவர் ஆசிரியையான இந்துமதி பார்வே.

உஷா மனேரிக்கர், ஜெயஸ்ரீ சாமந்த் மற்றும் சுபதா கோத்வாலே ஆகிய தோழிகளுடன் சேர்ந்து தொடங்கினார். இந்தப் பெண்கள் பல்வேறுபட்ட வாழ்க்கைச் சூழல்களைச் சேர்ந்தவர்களாக இருந்தனர்.

குடும்பத் தலைவி, ஆசிரியை எனப் பல தரப்பினரும் ஒருங்கிணைந்து ஒற்றைப் புள்ளியில் இணைந்தனர். எண்பதுகளில் பப்படம் செய்யத் தொடங்கினர். பொருளாதாரச் சிக்கல்களால் நெருக்கடிக்குள்ளான அவர்களுடைய தொழில் நலிவைச் சந்தித்தது. பிறகு அவர்கள் ஒரு பள்ளி வளாகத்தில் கேண்டீன் தொடங்கினார்கள்.

“எங்களுடைய முதல் தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதும் அடுத்த சமையல்தான் சரியானது என நினைத்தோம். பள்ளியில் ஏற்கெனவே நடத்தப்பட்டுவந்த கேண்டீன் மூடப்பட்டது. எங்களுக்கு வாடகை இல்லாமல் இடத்தைக் கொடுத்தார்கள்” என்கிறார் பாரதி தாக்கூர். அறக்கட்டளை நிர்வாகிகளில் அவரும் ஒருவர்.

முதலில் 3 ஆயிரம் ரூபாயில் ஏழு பெண்கள் சேர்ந்து கேண்டீன் வேலைகளைத் தொடங்கியுள்ளனர். ஆட்டோ, பேருந்து ஓட்டுநர்கள், பேச்சிலர்கள், நடுத்தர மற்றும் ஏழை, எளிய மனிதர்களுக்கு மலிவு விலையில் உணவு வழங்கினார்கள். சிறு விதை ஆலமரமாக விரிந்து பரந்து வளர்ந்தது.

2021 ஆம் ஆண்டில் அவர்களுடைய கேண்டீன் ஏழு கிளைகளுடன் மும்பையில் செயல்படுகின்றன. 175 பெண்கள் பெருமிதத்துடன் பணியாற்றுகிறார்கள். ஆண்டுக்கு 300 கோடி ரூபாய் வர்த்தகம் நடக்கிறது.

மக்களுடைய ஆதரவால்தான் வளர்ந்திருக்கிறோம் என்கிறார் அறக்கட்டளை நிறுவனர் ஜெயஸ்ரீ சாமந்த். இவர்கள் பத்து ரூபாய்க்கு இரண்டு ரொட்டி, பருப்பு, சோறு, சப்ஜி, அப்பளம் மற்றும் ஊறுகாய் தருகிறார்கள். காலையில் 8 மணிக்கு இயங்கத் தொடங்கும் பெண்களின் கேண்டீன் இரவு 10 மணி வரை அரங்கு நிறைந்த கூட்டமாக நிரம்பி வழிகிறது.

பெண்களுக்கு ஏற்ற வேலை நேரங்கள் வழங்கப்படுகின்றன. அவர்கள் விருப்பத்திற்கேற்ப ஷிப்ட்டை மாற்றிக்கொள்ளலாம். அதற்கேற்ப ஊதியம் வழங்கப்படும். ஆரம்பத்தில் மெல்ல வளர்ந்த விற்பனை, பின்னர் நிற்க நேரமின்றி சூடுபிடித்தது.

வெறும் ஊதியம் மட்டும் கிடையாது. இங்கு பணிபுரியும் பெண்களுக்கு சேமநல நிதி, ஓய்வூதியம், காப்பீடு, கல்வி உதவி, ஹெல்த் உதவி என எல்லா வசதிகளும் கொடுக்கப்படுகின்றன.

நாம் முதலில் பார்த்த சுமித்ரா, இந்த அறக்கட்டளையில் கடந்த 23 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். “என் கணவர் இறந்ததும் எங்கே செல்வது என்றே புரியவில்லை. இந்த அறக்கட்டளை பற்றித் தெரிந்ததும் இங்கே வந்துவிட்டேன். என் வாழ்க்கையே மாறிவிட்டது. என் பையனின் கல்விச் செலவுக்கு உதவினார்கள். எந்த பொருளாதாரச் சிரமங்களும் இல்லாமல் வாழ வழிகாட்டினார்கள்” என்று மனநிறைவுடன் பேசுகிறார்.

– தான்யா

26.02.2021 04 : 15 P.M

Comments (0)
Add Comment