இணையவெளியில் நடக்கும் மாற்றங்களை அவ்வப்போது இணைய மலர் வழியாக எழுதிவரும் இணைய நிபுணர் சைபர்சிம்மன், கெட்பைரோ என்ற இசை செயலியைப் பற்றி எழுதியுள்ளார். ராக ஆலாபனை போல, நாம் பார்க்க இருக்கும் பைரோ (www.getpyro.app) செயலியைக் கொஞ்சம் கற்பனை வளத்தோடுதான் வர்ணிக்க வேண்டியிருக்கிறது என்கிறார்.
ஸ்பாட்டிபை இசை கேட்பு சேவை மூலம் இசை விருந்தை நடத்த உதவும் இணையச் சேவையாக அமைந்திருந்தாலும், பைரோவின் அருமையைப் புரிந்துகொள்ள நம்மூர் இசை கச்சேரிகளுடன் இதைப் பொருத்திப் பார்ப்பதே சரியாக இருக்கும்.
சபா கச்சேரிகளாக இருந்தாலும் சரி, கல்யாண வீட்டுக் கச்சேரிகளாக இருந்தாலும் சரி, பாடிக்கொண்டிருக்கும் இசைக்கலைஞரிடம் பிடித்தமான பாடலைப் பாடும் படி ஒரு ரசிகராவது துண்டுச்சீட்டு மூலம் கோரிக்கை வைப்பதைத் தவறாமல் பார்க்கலாம்.
மேடைக் கச்சேரிகள் எனில், இப்படி ரசிகர்கள் கேட்கும் பாடல் பற்றிய தகவலை மைக்கில் அறிவிக்கும் வழக்கமே வைத்திருக்கின்றனர். இன்னும் சில கச்சேரிகளில், ரசிகர்கள் வேண்டுகோளை அவர்கள் அளிக்கும் பரிசுத்தொகையோடு அறிவிக்கும் வழக்கமும் கடைப்பிடிக்கப்படுகிறது.
நேரடி கச்சேரிகளைக் கேட்டு ரசிப்பதன் கலாச்சார கூறுகள் இவை. நிற்க, இணைய யுகத்தில், இசை நிகழ்ச்சிகளுக்கான ரசிகர்கள் கோரிக்கையை இன்னும் எளிதாக்குவது அல்லது தொழில்நுட்ப மயமாக்குவதுதானே சரியாக இருக்கும். அதாவது, இசை நிகழ்ச்சிகளின் போது, ரசிகர்கள் தங்களுக்குப் பிடித்தமான பாடலுக்கான கோரிக்கை வைப்பதற்கு என்றே ஒரு செயலி உருவாக்கப்பட்டால் எப்படி இருக்கும்?
செயலியில் ரசிகர் தெரிவிக்கும் பாடலை குழுவினர் பாடலாம் என்பதோடு, எந்த ரசிகர் கேட்ட பாடல் அது எனும் விவரமும் செயலியில் நிலைத்தகவல் போல இடம்பெற்றால் இசை நிகழ்ச்சி இன்னும் சுவாரசியமாக இருக்கும்தானே.
ரசிகர்கள் கேட்கும் டாப் டென் பாடல்கள் பட்டியலைக்கூட, இந்தச் செயலியில் தோன்ற வைக்கலாம். இதன் மூலம், இசை நிகழ்ச்சிகளின் ரசிகர்களின் பங்கேற்பு தன்மைக்கு வழி செய்யலாம்.
இந்தக் கற்பனைச் செயலியில் இருந்து இப்போது ‘பைரோ’ செயலிக்கு வருவோம். மேலே சொன்ன ரசிகர்கள் பங்கேற்பு அனுபவத்தை இசை விருந்துகளுக்கு அளிக்கும் வகையில் இந்த செயலி உருவாக்கப்பட்டுள்ளது. அதாவது நண்பர்களுக்காக இசை விருந்து (பார்ட்டி) நடத்த விரும்புகிறவர்களுக்கு உதவும் வகையில் இந்த செயலி அமைந்துள்ளது.
நண்பர்களுக்கான இசை விருந்து எனும் போது, அவர்கள் விரும்பிய பாடல்களை ஒலிக்கச்செய்வது தானே முறை. அதற்காக தான் பைரோ செயலி உருவாக்கப்பட்டுள்ளது.
இசை விருந்து அளிப்பவர்கள், இந்தச் செயலியைத் தரவிறக்கம் செய்து, அதில் தங்களுக்கான புதிய விருந்து நிகழ்ச்சியை உருவாக்கிக் கொண்டு, நிகழ்ச்சியில் இணையுமாறு நண்பர்களுக்கு அழைப்பு விடுக்க வேண்டும். அதற்கு முன், ஸ்பாட்டிபை இசை கேட்பு கணக்குடன் இணைத்துக்கொள்ள வேண்டும்.
அவ்வளவுதான், இசை விருந்திற்கான பாடல் ஸ்பாட்டிபை மூலம் ஒலிபரப்பாகும். ஆனால் இதில் ஒலிக்கும் பாடல்களை, விருந்தினர்கள் செயலி மூலம் தேர்வு செய்து கொள்ளலாம். விருந்தினர்கள், செயலியில் உள்ளே நுழைந்து தங்களுக்குப் பிடித்தமான பாடலை ஒலிக்கச் செய்யலாம். இவ்விதமாக, விருந்தினர்களின் விருப்பத்திற்கு ஏற்ற பாடல்கள் ஒலிக்கும் வகையில் நிகழ்ச்சியை நடத்தலாம்.
இசை விருந்துகளை ஏற்பாடு செய்யும் போது, அது வரைபடத்தில் தோன்றவும் வழி செய்யப்பட்டுள்ளது. எனவே உறுப்பினர்கள் அருகாமை பகுதியில் நடைபெறும் நிகழ்ச்சிகளை வரைபடம் பார்த்து அறியலாம். (நிகழ்ச்சிகள் இவ்வாறு தோன்றாமல் தடுக்கவும் வழியுண்டு)
இசை நிகழ்ச்சிகளுக்கு அதிக உறுப்பினர்களைச் சேர்ப்பதற்கான வழியும் உள்ளது. இசை நிகழ்ச்சிக்கான சுவரொட்டியைத் தருவித்து, நிகழ்ச்சி நடத்தும் இடத்தில் ஒட்டி வைக்கும் வாய்ப்பும் உள்ளது. ஜெர்மனியில் இருந்து உருவாக்கப்பட்டுள்ள இச்செயலி புதுமையாக இருக்கிறது என்கிறார் சைபர் சிம்மன்.
– தான்யா