எம்.ஜி.ஆரிடம் இருந்த அற்புதமான குணம்!

வாழ வழி காட்டும் எம்.ஜி.ஆர். – 5

எம்.ஜி.ஆரின் திறமை பன்முகத் தன்மை கொண்டது. அவர் முதல்வராக இருந்த சமயம், அகில இந்திய நரம்பியல் மருத்துவர் மாநாடு தமிழகத்தில் நடந்தது. அதற்கு மாநில முதல்வர் எம்.ஜி.ஆரை சிறப்பு விருந்தினராக அழைத்திருந்தார்கள்.

நடக்க இருப்பதோ மெத்தப் படித்த மருத்துவர்கள். அதிலும் நரம்பியல் துறையின் நிபுணர்கள் கலந்து கொள்ளும் ஆராய்ச்சி மாநாடு. அப்படிப்பட்டவர்கள் மத்தியில் பள்ளியின் இடைப்படிப்புத் தாண்டாத முதல்வர் என்ன பேசுவார் என்ற எண்ணம் அனைவரின் மனதிலும் இருந்தது.

அவர் கேட்டாலொழிய பேச வேண்டியவற்றை யாரும் அவருக்கு சொல்ல  மாட்டார்கள். ஏனென்றால் அது எம்.ஜி.ஆருக்குப் பிடிக்காது.

அதேபோல இப்படிப்பட்ட மாநாட்டில் மருத்துவம் குறித்து சில வார்த்தைகள் பேச வேண்டுமே? வேறு யாராக இருந்தாலும் துறை அதிகாரிகளிடம் சொல்லி அதற்கான உரையைத் தயார் செய்திருப்பார்கள். ஆனால் எம்.ஜி.ஆர் அப்படி எதையும் யாரிடமும் கேட்கவில்லை. குறிப்புகள் என்று எதுவும் எடுத்துக் கொள்ளவுமில்லை.

அவரது சிறப்புரைக்கான நேரம் வந்தது. அவர் என்ன பேசப் போகிறார் என்பதைக் கேட்க அனைவரும் ஆவலாக இருந்தனர். எம்.ஜி.ஆர். மேடைக்கு வந்தார். எடுத்த எடுப்பில் ஒரு பாடல் சொன்னார்.

“அரும்பு கோணிடில் அது மணம் குன்றுமோ
கரும்பு கோணிடிற் கட்டியும் பாகுமாம்
இரும்பு கோணிடில் டில்லி யானையை வெல்லலாம்
நரம்பு கோணிடில் நாமதற் கென்செய்வோம்”

இது ‘விவேக சிந்தாமணி’ என்கிற பழந்தமிழ் நூலில் இருக்கும் அற்புதமான பாடல். இதற்கு அர்த்தம், அரும்பு, அதாவது பூவின் அரும்பு கோணினாலும் அது மணத்தைத் தரும். கரும்பு கோணிடில் அதாவது பிசகினால், முறுக்கினால், அதிலிருந்து வெல்லக் கட்டியும், பாகும் பெறலாம்.

இரும்பைக் கோணி முறுக்கினால் அதை அங்குசமாக்கி யானையையும் அடக்கலாம். ஆனால், நரம்பு கோணினால், அல்லது பிசகினால் அதற்கு யாரும் எதுவும் செய்ய முடியாது. இதைப் பொருளுடன் கூறியதும், கரகோஷம் அடங்க வெகு நேரமானது.

அத்தகைய அறிவுத் திறனுடன் விளங்கியவர். அதனாலேயே மற்றவர்களின் திறமையை ஊக்குவிக்கவும், மதிக்கவும் தயங்காதவர். அது மட்டுமின்றி, பெரும் திறமையாளர்களையும்  அவர்கள் யாராக இருந்தாலும் சரி, அவர்களுக்கு வேண்டிய உதவிகளை செய்வார்.

கோவையைச் சேர்ந்த இளைஞன் ஒருவன் கல்லூரிப் படிப்பை முடித்துவிட்டு சினிமாவில சேர விருப்பப்பட்டான். அவனது தந்தை கம்யூனிஸ்ட் கட்சியில் அனைவரும் அறிந்த முக்கியச் செயல்பாட்டாளர். தனது ஆசையை தந்தையிடம் தெரிவித்தான். திரைப்படக் கல்லூரியில் சேர விண்ணப்பித்தான். அவன் விரும்பியது கேமிராமேன் படிப்புக்கு. ஆனால் வயது ஒத்து வராததால் இயக்குநர் பிரிவுக்கு விண்ணப்பம் செய்திருந்தான்.

ஆனாலும் அது கிடைக்க வேண்டுமே? அவரது தந்தை அவனை சென்னை கம்யூனிஸ்ட் அலுவலகத்துக்கு அனுப்பி வைத்தார். அவன் இன்னாரின் மகன் என்று தெரிந்ததும், கட்சியின் முக்கியத் தலைவரான தோழர் கல்யாண சுந்தரம். அவனுக்கான முயற்சிகளை மேற்கொண்டார்.

என்ன வேலைக்கு அல்லது படிப்புக்கு முயற்சி செய்கிறான் என்பதை அவனிடம் கேட்டார். அவன் “இயக்குநர் படிப்புக்கு” என்றான். அவர் “நமக்கு அங்கு யாரையும் தெரியாதே” என கூறிவிட்டு, “சரி ஒரு தோழர் மூலம் பார்ப்போம்” எனக் கூறினார்.

அதன்பின் குறிப்பிட்ட நபரை அழைத்து அவரோடு வண்டியில் இவனை அனுப்பி வைத்தார். அந்தக் கார் தலைமைச் செயலகம் சென்றது. அங்கு ஒரு அறைக்கு அந்தத் தோழரும் வாலிபனும் சென்றனர். அந்த அறை முகப்பில் ‘முதலமைச்சர் எம்.ஜி.ராமச்சந்திரன்’ என்ற பெயர்ப்பலகை காணப்பட்டது. இருவரும் அந்த அறைக்குள் நுழைந்தனர். எம்.ஜி.ஆர் அந்த தோழரைக் கட்டிப்பிடித்து நலம் விசாரித்தார்.

தோழர் சொன்னதைக் கேட்டுவிட்டு அந்த வாலிபனிடம் “டைரக்ஷனுக்கு படிக்கணுமா? டைரக்ஷன் பத்தி உனக்கு என்ன தெரியும்?” என கேட்டார்.

“அது பத்தி தெரியாது. இனிமேதான் கத்துக்கணும்” என்றான். அவன் முதுகில் தட்டி. “உனக்கு ஏற்பாடு செய்கிறேன். நன்றாக படி” எனக் கூறி அனுப்பி வைத்தார்.

வெளியே வந்ததும் அந்தத் தோழரிடம், “எம்.ஜி.ஆரே கட்டிப் பிடிக்கிற அளவுக்கு நீங்க பெரிய ஆளா? உங்கள் பெயர் என்ன?” என கேட்டான் அந்த வாலிபன்.

அதற்கு அந்தத் தோழர் “நான்தான் வழக்கறிஞர் என்.டி.வானமாமலை” என்பதுடன் நிறுத்தாமல், “எம்.ஜி.ஆருக்கு எதிராக எம்.ஆர்.ராதாவுக்காக வாதாடிய வக்கீல்” என்றார்.

இதைக் கேட்டதும் அந்த வாலிபன் மிகுந்த ஆச்சரியத்துடன் “அப்போ எம்.ஜி.ஆர் உங்களைக் கட்டிப்பிடித்து ரொம்ப மரியாதையாக பேசினாரே” என்றான். “அதுதான் அவரது பெருந்தன்மை” என்றார் அந்தத் தோழர்.

அந்த வாலிபனின் பெயர் ஆர்.வி.உதயகுமார். பின்னாளில் ரஜினிகாந்த், கமலஹாசன், விஜயகாந்த் போன்ற பெரும் கதாநாயகர்களை இயக்கி மாபெரும் வெற்றிப்படங்களைக் கொடுத்தவர்.

ஒரு பெரும் திறமையாளருக்கு இருக்க வேண்டிய மிக முக்கியத் தகுதி, பிற திறமையாளர்களை அடையாளம் காண முடிவதும், அவர்களை மதிப்பதும்தான். அது எம்.ஜி.ஆரிடம் அதிகமாகவே இருந்தது.

(தொடரும்…)

25.02.2021 12 : 15 P.M

Comments (0)
Add Comment