தமிழக அரசுப் போக்குவரத்துக் கழகத் தொழிலாளர்களுக்கான 14-வது ஊதிய ஒப்பந்தத்தை உறுதி செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, மாநிலம் முழுவதும் அரசுப் போக்குவரத்துக் கழகத் தொழிற்சங்கங்கள் பிப்ரவரி 25 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெறும் என தொழிற்சங்க கூட்டமைப்பு சென்னையில் அறிவித்திருந்தது.
அதன்படி தமிழகம் முழுவதும் இன்று வேலை நிறுத்தப் போராட்டம் தொடங்கிய நிலையில், அரசுப் பேருந்து போக்குவரத்து ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஊதிய உயர்வு, நிலுவைத்தொகை உள்ளிட்டவைகளை வலியுறுத்தி தொ.மு.ச. சி.ஐ.டி.யூ, ஏ.ஐ.டி.யு.சி உள்ளிட்ட 9 தொழிற்சங்க கூட்டமைப்புகள் அரசு பேருந்துகளை இயக்காமல் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இதனால் பேருந்துகள் வழக்கத்தை விடச் சற்று குறைந்த அளவில் இயக்கப்படுவதால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
இதனிடையே வேலை நிறுத்தப் போராட்டத்தில் கலந்து கொள்ளும் பேருந்து ஊழியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசுப் போக்குவரத்து கழகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
சென்னை பல்லவன் சாலையில் உள்ள பணிமனையில் அதிமுக-வின் தொழிலாளர் சங்கத்தினர் மட்டும் பணிக்குத் திரும்பியுள்ளனர்.
சென்னையில் குறைவான பேருந்துகள் மட்டுமே இயக்கப்பட்டு வருகிறது. நாகர்கோவில், திருச்சியில் பேருந்துக்கள் இயக்கப்படாததால் சாலைகள் வெறிச்சோடி காணப்படுகின்றன. மயிலாடுதுறை, திருப்பூர், ராஜபாளையம், கடலூர், ஈரோடு, உளுந்தூர்பேட்டை, நெல்லை போன்ற நகரங்களிலும் பேருந்து இயக்கம் நிறுத்தப்பட்டுள்ளன.
25.02.2021 11 : 15 A.M