என் ஆடையென்பது யாருடைய குருதி?

நூற்பு ஆலைகளில் பணிபுரியும் தொழிலாளர்களின் நிலைமைகள் குறித்த சிறு ஆய்வு நூலாக தன்னறம் நூல்வெளி மூலம் வெளி வந்திருக்கிறது ‘என் ஆடையென்பது யாருடைய குருதி’.

ஈரோட்டைச் சேர்ந்த நெசவாளர் குடும்பச் சூழலில் பிறந்து வளர்ந்த சிவகுருநாதன், கூர்ந்த கவனத்துடன் மொழிபெயர்த்து அக்கறையுடன்  எழுதியிருக்கிறார்.

இந்த அளவில் செய்யப்பட்டது இதுவே முதல் முறை. ஆய்வறிக்கையில் கண்டறிந்தவை ஆபத்து என்று சுட்டுகிறார் நூலாசிரியர். தமிழ்நாட்டில் உள்ள மொத்த நூற்பாலைகளின் எண்ணிக்கையில் மூன்றில் ஒரு பங்கைக் கொண்ட ஒரு மாதிரியில், 91 சதவீதம் ஆலைகள் கட்டாய உழைப்பின் ஏதேனும் ஒரு வடிவத்தை கொண்டுள்ளன என்கிறார்.

இதுபற்றிப் பேசும் சிவகுருநாதன், “நாம் அன்றாடம் அணியும் ஒரு டி-ஷர்ட் (T shirt) எத்தனை பேருடைய வாழ்வை பறித்து நம் கைக்கு வந்து சேர்கிறது.

எத்தனை கிராமப் பெண்களின் வாழ்வு எந்தந்த வழிகளில் பணயம் வைக்கப்பட்டிருக்கிறது. எல்லாவற்றையும் தாண்டி நம் நுகர்வு எத்தகைய விளைவை ஏற்படுத்துகிறது என்பதை இந்த பயணம் எனக்கு நன்றாக உணர்த்தியிருக்கிறது.”

அப்படி உணர வைத்த ஆங்கில ஆய்வுக் கட்டுரை ஒன்றினை தமிழில் மொழிபெயர்த்ததோடு, நூற்பின் பயணத்தில் கிடைத்த அனுபவத்தை சிறு புத்தகமாக்கி, தன்னறம் நூல்வெளி பதிப்பகத்தின் மூலம் நூலாக வெளிக் கொண்டு வந்திருக்கிறார்.

அதுவும் அன்னை தில்லையாடி வள்ளியம்மை, அன்னை கஸ்தூரிபாய் காந்தி இருவரின் நினைவு தினத்தில் வெளிவந்தது நல் சமிக்ஞையாகவும் பெரும் ஆசீர்வாதமாகவும் கருதுகிறேன் என்று குறிப்பிடுகிறார்.

காலம் காலமாகக் கடத்திவந்த கைத்தறி நெசவு இன்று இறுதித் தலைமுறையின் கையில் வந்து சேர்ந்திருக்கிறது. அந்தக் கலையையும் கலையின் உயிர்த் தன்மையையும் அடுத்த தலைமுறைக்குக் கைமாற்றும் பாலமாக நூற்பு கைத்தறி நெசவுப்பள்ளி நடத்தி வருகிறார் நூலாசிரியரான சிவகுருநாதன். அதன் ஒருபகுதியாக நெசவாளர்களின் வாழ்வாதாரம் தொடர்பான இந்த ஆய்வேட்டை வெளியிட்டிருக்கிறார்.

எங்கோ தன் இறுதிக் காலத்தில் கைத்தறி நெய்துகொண்டே நம்பிக்கையோடு உயிர் பிரிந்து சென்ற ஒரு நெசவாளியின் கனவாகவே இந்தப் பணியைக் கருதுவதாகவும் அவர் எழுதுகிறார்.

சிவகுருநாதன்

இதுவொரு சிறு நூல்தான் என்றாலும் சிந்தனையில் தெறிப்பை உருவாக்கக் கூடிய கருத்துக்கள் அழகிய ஓவியங்களுடன் பதிவாகியுள்ளன. அனைவரும் படிக்க வேண்டிய நூல். சென்னை புத்தகக் காட்சியில் கிடைக்கிறது.

நூல்: என் ஆடையென்பது யாருடைய குருதி?
ஆசிரியர்: சிவகுருநாதன்
வெளியீடு: தன்னறம் நூல்வெளி,
குக்கூ காட்டுப்பள்ளி, புளியானூர் கிராமம்,
சிங்காரப்பேட்டை, கிருஷ்ணகிரி மாவட்டம் – 635 307
விலை ரூ. 40

– தான்யா

25.02.2021   12 : 30 P.M

Comments (0)
Add Comment